My@History Class Room
அறிவோம் வரலாறு
சனி, 18 பிப்ரவரி, 2023
ரஷ்ய புரட்சி
ரஷ்ய புரட்சி
மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்பினையும் முற்றாக மாற்றிப்போட்டன. அத்தகைய புரட்சிகளுள் ரஷ்யப்புரட்சியானது முக்கியத்துவமிக்கதோர் புரட்சியாகும். இப்புரட்சியானது ஏனைய புரட்சிகளிலிருந்து வேறுபடக் காரணம் கால்மாக்சினது பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு செயலுருக்கொடுத்த புரட்சி இது என்பதனாலாகும். புரட்சியின் பயனாக சோவியத் குடியரசுகளின் கூட்டமைப்பு தாபிக்கப்பட்டு 1991 வரை நீடித்தது.
இப்புரட்சியினது போக்கினைத் தீர்மானித்தோருள் விவசாயிகள் வர்க்கம் முக்கியம் பெற்றதுடன் தொழிலாளர்களும் இராணுவ வீரரும் இப் புரட்சியின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தனரெனலாம். இவர்களின் பிரதான கோரிக்கையாக காணி, உணவு, சமாதானம் என்பது அமைந்தது.
புரட்சி ஏற்பட்ட விதம்
புரட்சி ஏற்பட்ட காலத்தில் சார் மன்னர்களின் ஏகாதிபத்திய ஆட்சியானது நிலவியது, இவர்கள் பல்வேறு யுத்தங்களில் பங்கேற்றனர். கிறிமிய யுத்தம், ரஷ்ய – துருக்கி யுத்தம், ரஷ்ய – யப்பான் யுத்தம், உலக யுத்தம் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும். ரஷ்யா சனத்தொகையில் பெரிய நாடாக காணப்பட்ட போதிலும் ரஷ்ய – துருக்கி யுத்தங்களை விட ஏனைய யுத்தங்கள் யாவற்றிலும் ரஷ்யாவானது தோல்வியினையே அடைந்தது. இத்தகைய தோல்விகளுக்கு முக்கிய காரணம் ரஷ்யாவிடம் போதிய ஆயுதங்களும் அதனைக் கொண்டு செல்லக்கூடிய வசதிகளும் காணப்படாமையாகும். இவ்வாறான தொடர் தோல்விகள் மக்கள் மத்தியில் மன்னர் மீதான அதிருப்தி அதிகரிக்கக் காரணமானதுடன், மக்கள் மத்தியில் தேசிய உணர்வினையும் தூண்டுவதற்குக் காரணமாக அமைந்தது.
இந்த அதிருப்தியானது 1904 – 1905 காலப்பகுதியில் சிறிய நாடான யப்பானுடன் ஏற்பட்ட யுத்தத்தில் ரஷ்யா தோல்வியடைந்ததன் பின்னர் உடனடியாக வெளிப்படத் தொடங்கியது. அதன் விளைவே 1905ல் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சியாகும். ஆயினும் இப்புரட்சியானது மிகவும் கடுமையான முறையில் சார் மன்னன் இரண்டாம் நிக்கலஸால் அடக்கப்பட்டது. இவன் புரட்சியை அடக்கினாலும் மக்களிடத்திலிருந்த அதிருப்தியை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்பதே உண்மை.
1917 மார்ச் புரட்சி
அத்தகைய நிலையிலேயே 1ம் உலகயுத்தத்தில் ரஷ்யா அடைந்த தோல்விகளைத் தொடர்ந்து மீண்டுமொருமுறை மக்கள் புரட்சி ஏற்படுவதற்கான நிலை உண்டானது. நீண்ட காலம் நீடித்த போரினால் நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டமை, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை, என்பவையும் மக்களிடத்தில் ஆட்சிக்கு எதிரான நிலையினை ஏற்படுத்தியது. இந்நிலையில் மக்கள் தனி முடியாட்சியினை இல்லாதொழிக்க ஒன்றுபட்டனர். இதன் முதற்கட்டமாக உணவினைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வீதியில் காத்து நிற்கவேண்டியேற்பட்டமை தொழில் நிறுத்தங்களுக்கும் குழப்பங்களுக்கும் காரணமாகியது. ஆரம்பத்தில் இப்போராட்டத்தில் பெற்றோக்கிராத்தில் உள்ள நெசவாலைகளில் தொழில் செய்த பெண் தொழிலாளர்களே 'உணவு வேண்டும்' என்ற கோஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர். உணவுக்கான அவர்களது கோஷத்துடன் 'போர் ஒழிக', 'தனியாட்சி ஒழிக' எனும் விவசாயிகளினதும் தொழிலாளர்களதும் கோசங்களும் இணைந்து கொண்டன. முன்றாவது நாள் இத்திடீர் வேலைநிறுத்தமானது பாரிய கிளர்ச்சியாக மாறி புரட்சித் தன்மைகளை வெளிப்படுத்தியது. ஆரம்பத்தில் நடுநிலை வகித்த படையினரும் இப்போராட்டங்களில் இணைந்து கொண்டனர்.
புரட்சி உச்சமடைந்து இரண்டாம் நிக்கலஸை நெருக்குதலுக்கு உற்படுத்தியமையால் அவன் மார்ச் 15ல் சிம்மாசனத்தைத் துறந்தான். முடியாட்சி ஒழிக்கப்பட்டது. அதிகாரத்ததைக் கைப்பற்றிய விவசாயிகளும் தொழிலாளர்களும் ஆட்சியைக் கொண்டு நடத்தக்கூடிய பலமின்மையால் மத்திய வகுப்பாரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர், புதிய அரசாங்கம் உருவானது. இவ்வாறு அமைக்கப்பட்ட மென்ஸ்விக் அரசாங்கம் கெரென்சியை யுத்த மந்திரியாக தெரிவு செய்து யுத்தத்தை மீண்டும் நடத்த ஆரம்பித்தது. மீண்டும் ரஷ்யா யுத்தத்தில் தோல்விகளையே சந்தித்தமையால் மக்கள் எதிர்ப்பு மீண்டும் அதிகரித்தது.
1917 அக்டோபர் புரட்சி
புரட்சியின் பின்னர் அமைக்கப்பட்ட அரசாங்கம் தமது கோரிக்கைகளான அமைதி ஏற்படுத்துதல், விவசாயிகளுக்கே நிலத்தை உடைமையாக்குதல், தொழிற்சாலைகளை தொழிலாளர் கட்டுப்பாட்டில் கொண்டுவரல், ரஷ்யர் அல்லாத மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குதல் என்பன நிறைவேற்றும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் எதிர்பார்ப்புக்கு மாறாக அரசாங்கம் நடந்து கொண்டது. மீண்டும் யுத்தத்தினை ஆரம்பித்தமை மக்கள் எழுர்ச்சி மீண்டும் அதிகரிக்கக் காரணமானது. இத்தகைய நிலையில் விவசாயிகளும், தொழிலாளர்களும் தாமாகவே முன்வந்து மத்திய வகுப்பாரின் மென்ஸ்விக் அதிகாரத்தை ஒழிக்க முயன்றனர். விவசாயிகள் பிரபுக்களின் நிலங்களை எரித்தும் கொள்ளையடித்தும் அரண்மனைகளை எரித்தும், முதலாளிகளைக் கொன்றும் கிளர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.
மார்ச் புரட்சியின்போது சுவிட்சர்லாந்திலிருந்த லெனின், தற்காலிக அரசாங்கத்தின் ஆட்சியில் தனது மறைவான வெளிநாட்டு வாழ்க்கையினை முடித்துக்கொண்டு ரஷ்யாவுக்குத் திரும்பி போல்ஸ்விக் கட்சியின் தலைமையைப் பெற்றுக் கொண்டார். போல்ஸ்விக் கட்சியினர் மக்களுக்கு உணவு, நிலம், சமாதானம் பெற்றுத்தருவதாகக் கூறி தம் பிரச்சாரத்தினை ஆரம்பித்தனர். இதனால் போல்ஷ்விக்குகளுக்கு, அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏமாற்றமுற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள் போன்றோரின் ஆதரவு கிடைக்கப்பெற்றது.
லெனின் தலைமையில் ட்ரொஸ்கி விவசாயிகள், தொழிலாளர்களைக் கொண்ட இராணுவப் புரட்சிக் குழுவினை அமைத்து அரச நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். மத்தியதர வகுப்பாரும் இராணுவத்தினரும் இப்புரட்சிக்கு எதிர்ப்புக்காட்டாமையால் புரட்சி வெற்றிபெற்றது. இதுவே அக்டோபர் புரட்சி எனப்பட்டது. இதக் பின்னர் விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட 'சோவியத் சபையின்' ஆட்சி ரஷ்யாவில் தாபிக்கப்பட்டது.
இத்தகைய நிலையில் புதிய சோவியத் அரசில் உள்நாட்டுப்போர் தோன்றியது. நிலத்தை இழந்த பிரபுக்களும் சார் மன்னரின் ஆதரவு வீரர்களும் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நேச தேச ஆதரவுடன் சண்டையை ஆரம்பித்தனர். 1920 வரை இவ் உள்நாட்டுப்போர் நீடித்தது. இது புதிய அரசின் செஞ்சேனைப் படைகளால் அடக்கப்பட்டது.
உலகம் முழுவதும் பொதுவுடைமையைப் பரப்புவதற்காக 'கொமின்டேன்' எனும் சர்வதேச பொதுவுடமைக் கட்சி 1919ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் 1924ல் லெனின் இறந்த பின்னர் 1924ல் கட்சியில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தன. ட்ரொஸ்கி உலகப்புரட்சியை நம்பினார் ஸ்டாலின் இப்புரட்சியை தனித்து நின்று ஏற்படுத்த முடியாது என்றார். இதுவே கட்சியில் பிளவுகள் ஏற்படக் காரணமாகியது. ஈற்றில் ஸ்டாலின் வெற்றி பெற்றதும் புதிய அரசாங்கமானது தேசியமயமாக்கம், தனியார் வியாபாரத் தடை, வங்கிகளுக்கு தடை, கூட்டுறவு விவசாயம் என்பவற்றை மேற்கொண்டது.
புரட்சிக்கான காரணங்கள்
இவ்வாறாக ரஷ்யாவில் புரட்சி ஏற்படுவதில் அந்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தின.
அரசியல் காரணிகள்
1) ஊழல் நிறைந்த ஏகாதிபத்திய மன்னராட்சி –
தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆட்சியினை நடத்துவதற்கு தாம் கடவுளால் தெரிவு செய்யப்பட்டதாக சார் மன்னன் 2ம் நிக்கலஸ் கருதினான். இதனால் அவனது ஆட்சியில் மக்கள் பற்றிக் கவனம் செலுத்தத் தவறினான். இவன்; மன்னருக்கு எதிராக மக்கள் நடத்திய கிளர்ச்சிகள் யாவற்றையும் மிகக் கொடுமையாக அடக்கினான். 1905 ஏற்பட்ட கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட விதம் இதற்குத்தக்க சான்றாகும். இக்கிளர்ச்சியின் பின்னர் மன்னன் டூமா எனும் பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கி மக்கள் பிரச்சினைகளை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டாலும் டூமாவுக்கு உரிய அதிகாரங்களை வழங்காமையால் அது பெயரளவானதாகவே காணப்பட்டது.
2) மன்னன் மீது மக்கள் அதிருப்தியுற்றமை –
மன்னன் நாட்டு விடயங்களைத் தவிர தன் குடும்ப விடயங்களிலேயே அதிக கவனம் செலுத்தியதுடன் தன் அரசின் கௌரவத்தை உயர்த்தும் வகையிலே பல்வேறு போர்களில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக ஈடுபட்டான். இதனால் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளானதுடன் நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதுடன் இதன் விளைவுகள் மன்னனை ஆட்சிக்குப் பொருத்தமற்றவனாகவும் செயற்றிறனற்றவனாகவும் காட்டியது.
3) 1905 ஜப்பான் யுத்தம், 1914 உலகயுத்தம் போன்றவற்றில் ரஷ்யா பெற்ற தோல்விகள் -
ரஷ்யாவிடம் போதிய யுத்தத் தளபாடங்களும் நவீன யுத்தக் கருவிகளும் இல்லாமை, யுத்தத்திற்கு வேண்டிய பொருட்களை இராணுவத்துக்கு வழங்கக் கூடிய போக்குவரத்து வசதிகளின்மை போன்றவற்றால் ரஷ்யா மேற்படி யுத்தங்களில் தோல்வியைத் தழுவ வேண்டி ஏற்பட்டது. எனினும் தன் கௌரவத்தை பாதுகாக்க யுத்தம் செய்வதையே மன்னன் விரும்பினான். எனவே யுத்தங்களால் மக்கள் சலிப்புற்றமை கிளர்ச்சிகளுக்கு காரணமானது.
4) 1905ல் ஏற்பட்ட வேலைநிறுத்தமும் அது கொடூரமான முறையில் அடக்கப்பட்டமையும் - 1904 – 1905 காலப்பகுதியில் ஜப்பானுக்கு எதிராக எற்பட்ட யுத்தத்தில் ரஷ்யா தோல்வியடைந்தமையானது மன்னனின் மீது அதிருப்பதி வெளிப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பானது. இதனால் மக்கள் வேலைநிறுத்தங்களிலும் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டனர். குறிப்பாக சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சோவியத் எனும் தொழிலாளர் குழுவே கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியது. இதனை மன்னன் கடுமையாக அடக்கினான். இக்கிளர்ச்சிக்காரர்கள் மாளிகையை நெருங்கும்போது காவலாளிகள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர். 1905 ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை இந்நிகழ்வு நடந்ததால் இது 'குருதி ஞாயிறு' எனப்பட்டது.
பொருளாதாரக் காரணிகள்
1) நிலமானிய பொருளாதாரம் -
ரஷ்யாவில் விவசாயிகளே அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர். அத்ததையதோர் சமூகத்தில் நிலப்பிரபுக்கள் உழைப்பினைச் சுரண்டிக் கொண்டனர். இதனால் விவசாயிகள் தமக்கென சொந்தமான நிலம் வேண்டும் என கோசமிட்டனர். இதனால் 1906ல் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் மூலமாக பொது நிலங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டாலும் இவ்வாறு நிலத்தைப் பெற்ற விவசாயிகளும் மீண்டும் பொருள் படைத்தோராக மாறியமையால் தொடர்ந்தும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையே உண்டானது.
2) விவசாயம், கைத்தொழில் போன்றன ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட பின்னிலையில் காணப்பட்டமை - விவசாயம்> கைத்தொழில் துறைகளில் புதிய விடயங்களும் தொழிநுட்பங்களும் பயன்படுத்தப்படாமையினால் பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
3) தொழிலின்மை, வறுமை போன்றன ஏற்பட்டமை – ரஷ்யா சனத்தொகை அதிகரித்துச் சென்ற அதேவேளை நகர்ப்பகுதிகளில் உருவான கைத்தொழில் சாலைகளும் நகர்ப்புற சனத்தொகையினை அதிகரித்தது. 1890 – 1910 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தலைநகர் சென் பீட்டர்ஸ் பேர்க்கில் 1,033,600 ஆக காணப்பட்ட சனத்தொகை 1,905,600 ஆக உயர்ந்தது. இத்திடீர் அதிகரிப்புக்கு ஏற்ப தொழில் வாய்ப்பினை அரசாங்கத்தால் உருவாக்க முடியாமை மக்களிடையே வறுமையினை ஏற்படுத்தியது.
4) யுத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி – ரஷ்யாவானது முதலாம் உலகயுத்தத்தில் நேச நாடுகளின் பக்கம் இணைந்திருந்தது. 1914ல் துருக்கியானது மத்திய ஐரோப்பிய வல்லரசுகளின் பக்கம் இணைந்து கொண்டதும் ரஷ்யாவினது வணிகப்பாதைகள் முடக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ரஷ்யாவை கடுமையாகப் பாதித்தது. இதிலிருந்து மீளும் வகையில் நாணயங்கள் புதிதாக அச்சிடப்பட்டமையால் 1917ல் பணவீக்கம் அதிகரித்தது. இதனால் பொருட்களுக்கு விலையுயர்வு ஏற்பட்டமை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நடுத்தர வகுப்பாரையும் பாதித்தமையால் அவர்களை கிளர்ச்சிகளில் ஈடுபடத் தூண்டியது.
5) திறைசேரி வெறுமையடைந்தமை – அரச வருமான மார்க்கங்கள் முடக்கப்பட்டமையாலும் அரசன் யுத்தத்துக்காக அதிக செலவினை மேற்கொண்டமையாலும் திறைசேரி காலியானது.
6) எழுபது ஆண்டுகளாக ரஷ்யா எதுவித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்டமையால் மக்களிடத்தில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வு.
சமூகக் காரணிகள்
1) பலம்வாய்ந்த மத்தியதர வகுப்பு காணப்படாமை –
ஏனைய ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்ட மத்திய தர வகுப்பினைப் போல் ரஷ்யாவில் காணப்படவில்லை. இங்கு மத்தியதர வகுப்பாரை விடவும் விவசாயிகளின் வகுப்பே எண்ணிக்கையில் அதிகம் காணப்பட்டதுடன் இவர்களே பலம் பெற்றவர்களாகவும் விளங்கினர். மேலும் பிரான்சில் ஏற்பட்டவாறு மத்தியதர வகுப்பினர் விவசாயிகளின் நிலம் தொடர்பான பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை. இந்நிலையில் இவர்களை மார்க்ஸிஷ கருத்துக்களின் அடிப்படையில் வழிநடத்திய லெனினால் இறுதியில் சோவியத்தின் ஆட்சியினை பிரகடனம் செய்ய முடிந்தது.
2) தத்துவக் கருத்துக்களின் செல்வாக்கு -
இக்கால ஐரோப்பாவிலும் ஐரோப்பாவுக்கு வெளியிலும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றோரின் கருத்துக்கள் வேகமாக பரவிக்கொண்டிருந்தது. தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற்று சமூகச் சுரண்டல்கள் அற்ற அரசை உருவாக்குவர் என இவர்கள் வலியுறுத்தினர். இக்கருத்துக்களுக்கு செயலுருக் கொடுக்கும் வகையில் செயற்பட்ட லெனின், ட்ரொஸ்கி போன்ற தலைவர்களினதும் பொல்சுவிக் கட்சியினதும் முயற்சியால் பரவிக்கொண்ட தத்துவக் கருத்துக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.
3) ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட ரஷ்யாவின் சமூக நிலையானது மிகவும் கீழ்மட்டத்தில் காணப்பட்டமை –
உலக யுத்தத்தில் ஈடுபட்ட ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட ரஷ்யா பாரிய இழப்புகளை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. பல்லாயிரக்கனக்கானோர் இறந்ததுடன், தொழிலாளரின் நிலையும் மிக மோசமாகவே காணப்பட்டது. சனத்தொகை அதிகரிப்பால் சென் பீட்டர்ஸ்பேர்க் குடியிருப்பு ஒன்றில் 16 பேரும் ஒரு அறையில் 6 பேரும் வாழ்ந்தனர். அத்துடன் சுத்தமான நீரின்மை, மனிதக்கழிவின் பெருக்கம் என்பவற்றால் மேலும் பலர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.
4) போல்சுவிக் கட்சி உருவானமை –
ரஷ்யாவில் உருவான சோஷியல் ஜனநாயக கட்சியில் கொள்கை ரீதியில் ஏற்பட்ட பிளவானது மென்ஷ்விக்(சிறுபான்மை), போல்ஷ்விக்(பெரும்பான்மை) எனும் இருபிரிவினரை ஏற்படுத்தியது. பொல்சுவிக் கட்சியினர் மார்க்ஸிய கோட்பாடுகளின் அடிப்படையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை தீவிரமாக எதிர்த்தனர். விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வறிய விவசாயிகளும், தொழிலாளர்களும் சேர்ந்து அமைக்கும் பொதுமக்கள் குடியரசே அவசியம் எனக் கூறி அவர்களைத் தம் வசப்படுத்தினர். அரசு சிதைவுறும்போது அதனைக் கைப்பற்றும் வகையில் தம்மைத் தயார் செய்தனர். இதனால் ரஷ்யாவின் சூழ்நிலைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொழிலாளர் அரசாங்கம் ஒன்றினை அவர்களால் உருவாக்க முடிந்தது. புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஓர் பேரியக்கமாக போல்ஷ்விக் கட்சியை மாற்றியமைத்தவர் அதன் தலைவர் லெனின் ஆவார்,
விளைவுகள்
1) போல்சுவிக் கட்சியினர் ஆட்சியை தாபித்தமை: மென்ஷ்விக்கினரிடம் இருந்து போல்சுவிக் கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். இவர்கள் விவசாயிகளினதும் தொழிலாளர்களதும் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் சபையினது பொதுவுடமை ஆட்சியினைத் தாபித்துக் கொண்டனர்.
2) நாட்டில் சமாதானம் ஏற்படல்: போல்சுவிக் கட்சியினர் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் முதலாம் உலகயுத்தத்தில் பங்கெடுப்பதை நிறுத்திக்கொண்டதுடன் ஜேர்மனியுடனும் 1918 மார்ச்சில் சமாதான உடன்படிக்கையினை கைச்சாத்திட்டனர். இதனால் நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றின.
3) தனிப்பட்டவர்களின் சொத்துரிமையும், தனிப்பட்டவர்களின் நிலவுரிமைகள் நீக்கப்பட்டமை: வகுப்பு வித்தியாசம் இல்லாத ஒரு சமூகத்தினை உருவாக்கும் வகையில் செயற்பட்ட போல்சுவிக் கட்சியினர் பிரபுக்களிடத்திலும் மத்தியதர வர்க்கத்தினரிடத்திலும் காணப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.
4) தொழிற்சாலைகள் அரசுடைமையாக்கப்பட்டமை. 1936ல் வெளிவந்த சோவியத்தின் அரசியல் திட்டத்திற்கமைவாக போல்சுவிக் ஆட்சியாளர்கள் தொழிற்சாலைகள்> உற்பத்திக் கருவிகள். நீர்ப்போக்குவரத்து, ரயில்பாதைகள், வங்கிகள், காப்புறுதிக்கம்பனிகள், சுரங்கங்கள், உள்ளிட்ட தனியார் வர்த்தக முயற்சிகள் யாவற்றினையும் அரசுடமையாக்கினர். அத்துடன் அந்நிய முதலீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
5) சமவுடைமை சோவியதின் உதயம் சமவுடமை சோவியத் விவசாயிகளினதும் தொழிலாளர்களினதும் நாடென 1936ல் வெளிவந்த யாப்பு கூறியதுடன். இது 11 சமவுடமை அரசுகளைக் கொன்ட ஒரு சமஸ்டியாக விளங்கியது. இங்கு ஒரேயொரு கட்சியே செயற்பட்டது.
6) அனைத்து தேசிய இனத்தவருக்கும் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட்டது: இதனால் சோவியத் ரஷ்யாவில் தேசிய இனங்கள் தம்மைத்தாமே ஆளக்கூடிய நிலையைப் பெற்றன. இதுவே பின்னர் பிற நாடுகளில் தேசிய இனங்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கும் அடிப்படையாக அமைந்தது.
7) பொதுவுடைமை சித்தாந்தத்தின் பரவல் - உலகம் முழுதும் பொதுவுடமைக் கொள்கையினை பரப்பவதற்காக கொமின்டேன் எனும் சர்வதேச பொதுவுடமைக் கட்சி தாபிக்கப்பட்டது. இக்கட்சியால் உலகப்புரட்சியை ஏற்படுத்த முடியாது போனாலும் ரஷ்யாவின் முன்மாதிரிகளைப் பின்பற்றி ஏனைய நாடுகளும் பொதுவுடமை ஆட்சியினை தாபிக்க முயற்சித்தன. சான்றாக சீனா, கியூபா போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம்.
8) ரஷ்யா பலமிக்க நாடாக விரைவில் வளர்ச்சி பெற்றது – புரட்சியின் பின்னர் ரஷ்யாவானது வகுத்துக் கொண்ட ஐந்தாண்டு திட்டங்களின் பயனாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மூலமாக ரஷ்யா விரைவாக வளர்ச்சியடைந்தது. இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்யாவினது நிலை வெளிப்பட்டது.
நாடுகாண் பயணங்கள்
நாடுகாண் பயணம் என்பது நாடுகளை தேடிச்செல்லுதல் என்பதாகும். மறுமலர்ச்சியின் விளைவுகளால் ஏற்பட்ட புதிய நிலங்களைக் கண்டறிகின்ற முயற்சிகள் உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றன. நவீன காலத்தின் தொடக்கத்தினை இவை குறித்தன. கி.பி 1453 ஆம் ஆண்டு கொன்ஸ்தாந்துநோபிள் துறைமுகம் துருக்கியர்களால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து ஐரோப்பியர்கள் வர்த்தக தேவைக்காக புதிய நாடுகளுக்களை கண்டறிவதற்கு அதிக ஆர்வம் காட்டினர். புதிய நாடுகளை கண்டறியும் முயற்சியில் போர்த்துக்கல், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டன. இவற்றினைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ் என்பனவும் இம் முயற்சியில் ஆர்வம் காட்டின. இதன் விளைவாக ஆசியா, அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலுள்ள நாடுகளை கண்டறிந்து ஐரோப்பியருக்கு தகவல் பெறக் கூடியதாக இருந்தது. நாடுகாண் பயணங்கள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் பலவாறு காணப்பட்டன.
• நாடுகாண் பயணங்கள் ஏற்பட்டமைக்கான காரணங்கள்
கீழைத்தேய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் மையமாக காணப்பட்ட கொன்ஸ்தாந்துநோபிள் கி.பி 1453 இல் துருக்கியரால் கைப்பற்றப்பட்டது. இப் பாதையினூடாகவே மேலைத்தேய நாடுகள் கீழைத்தேய நாடுகளுடன் தமது வர்த்தக நடவடிக்கைகளை நடாத்தி வந்தன. துருக்கியர்களின் கைப்பற்றல் காரணமாக இந்நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டன. ஐரோப்பியர்க ளுக்கு கீழைத்தேய நாடுகளிலிருந்து வாசணைப்பொருட்கள் தடையின்றி கிடைத்ததன் காரணமாகவே தமது உணவுப் பொருட்களை பழுதடையாமல் நீண்ட நாட்கள் அவர்களால் வைத்திருக்க முடிந்தது. அத்தோடு கொன்ஸ்தாந்துநோபிளின் வீழ்ச்சியின் பின்பாக ஐரோப்பிய வர்த்தகர்களின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கொன்ஸ்தாந்தநோபிளைக் கைப்பற்றிய துருக்கிய வர்த்தகர்கள் பொருள்களன் விலையை அதிகரித்தல், அத்தியாவசிய பொருட்களை உரிய வேளையில் வழங்காமை, இப்பகுதி வழியிலேயே செல்கின்ற கப்பல்கள் மீது பெருமளவு வரிகள் விதிக்கப்பட்டன இவற்றால மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஐரோப்பி நாடுகளுக்கு உண்டானது.
அக்காலப்பகுதியில் பூமி தட்டையானது என்ற கருத்து நீண்டநாள் நம்பிக்கையாக இருந்து வந்தது. இத்தகைய நம்பிக்கையை போலந்து நாட்டு விஞ்ஞானி நிக்கலஸ் கொபர்னிக்கஸ் நிராகரித்து பூமி உருண்டையானது என்ற கருத்தினை முன்வைத்து நிருபித்தார். இப் பின்னணியில் உலகின் எப்பகுதியில் இருந்து புறப்பட்டாலும் மீண்டும் அதே இடத்தை வந்தடையலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலும் வடநட்சத்திரமாணியும், திசையறிகருவியும் கண்டுபிடிக்கப்பட்டது கடற்பயணத்தை இலகுவாக்கியது. இது நீண்ட கடற் பயணத்தை தொடருவதற்கான சந்தர்ப்பத்தினை உண்டாக்கியது.
நாடுகாண் பயணங்களுக்கு தேசிய அரசுகளின் அனுசரணை கிடைத்தது முக்கியமாகும். நாடுகளை தேடிச் செல்லும் போது பல மாதங்கள் கடலில் பயணம் செய்ய வேண்டும். அத்தோடு பெருமளவு பணச் செலவும் ஏற்படும். இவ்வாறான நிலையில் தனியாரால் நாடுகாண் பயணங்கள் சாத்தியமற்றது. ஆனால் ஐரோப்பாவில் அக்காலத்தில் எழுச்சி பெற்ற தேசிய அரசுகள் நாடுகாண் பயணங்களுக்கு அனுசரணை வழங்கியமையானது அச் செயற்பாடு வெற்றியடைய காரணமாகியது. நாடுகாண் பயணங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு வேண்டிய பண உதவி, படகு உதவி, நீர்வசதி போன்றவற்றை அக்கால அரசர்கள் ஏற்படுத்திக் கொடுத்தனர். போர்த்துக்கல் மன்னன் ஹென்றி, இங்கிலாந்து மன்னன் ஹென்றி, ஸ்பெயின் பேர்டினன், இசபெல்லா போன்றோரைக் குறிப்பிடலாம்.
நாடுகாண் பயணங்களுக்கு கப்பல் கட்டும் துறையில் ஏற்பட்ட விருத்தியும் மற்றுமொரு காரணமாகும். நீண்ட பயணங்கள் கடல் வழியாக மேற்கொள்ள வேண்டிருந்தமையினால் பாரிய கப்பல்களின் தேவை உணரப்பட்டது. இப் படகுகளை கட்டுவதில் ஒல்லாந்து முன்னணியில் திகழ்ந்தது. கரவல் எனப்படும் ஒரு வகையான மரத்தினால் ஆக்கப்பட்ட படகுகள் எடை குறைந்தவையாகவும், ஒரே சமயத்தில் பலர் பயணம் செய்யக் கூடியதுமான படகுகளை தயாரிப்பதில் ஒல்லாந்து முன்னிலை பெற்று விளங்கியது. பிற நாட்டவர்களும் இங்கே வந்து கப்பல் கட்டும் கலையை பயின்றனர்.
முஸ்லீம்களின் ஏகபோக உரிமையாகவுள்ள ஆசியாவின் வர்த்தகத்தை ஐரோப்பியரின் கைகளுக்கு கொண்டு வருவது போலவே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில்கத்தோலிக்க சமயத்தை பரப்புவதும் ஐரோப்பியரின் நாடுகாண் பயணங்களின் நோக்கமாக இருந்தது. முக்கியமாக பாப்பரசர்கள் கிறிஸ்தவ மத்தினை உலகமெங்கும் பரப்ப முற்பட்டனர். நாடுகளைக் கண்டறிவதன் மூலம் கண்டறியப்பட்ட நாடுகளில் தமது சமயத்தினை பரப்ப முயன்றனர். இதன் மூலம் இம் முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாப்பரசர்கள் தமது ஆதரவினை வழங்கினர். இக் காலத்தில் பெஸ்டர் ஜோன் எனும் ஆட்சியாளனின் கீழ் கீழைத் தேசத்தில் கிறிஸ்தவ அரசு ஒன்று உள்ளதென தவறான நம்பிக்கை ஒன்று இருந்தது. அந்த ஆட்சியாளனைத் தேடி கண்டறிந்து கிறிஸ்தவ சமயத்தை பரப்புவதற்கு அவனது உதவியை பெற வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.
நாடுகாண் பயணங்களுக்கு மார்க்கோபோலோவின் பயணக்குறிப்புக்களும் உதவியாக இருந்தது. மார்க்கோபோலோ என்ற வெனிஸ் வர்த்தகர் தரைவழியாக கீழைத்தேய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். இவர் மேற்கொண்ட பயணம் பற்றி கி.பி 1295 இல் நூலொன்றினை வெளியிட்டார். இதில் தனது இந்திய ஜப்பானிய சீனப் பயணங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். இது ஐரோப்பியர் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அது போன்று தொலமியின் உலகப்படத்தில் நாடுகளின் அமைப்பு குறிப்பிடப்பட்டிருந்ததும் நாடுகாண் பயணங்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களின் கையில் இருந்த இந்து சமுத்திர வர்த்தக பேரரசை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பியரின் நோக்கமும் நாடுகாண் பயணங்களுக்கு காரணமாகும். தமது பிரதான அரசியல், பொருளாதார மத்திய நிலையமாக விளங்கிய கொன்ஸ்தாந்து நோபிள் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டமையானது கிறிஸ்தவர்களாகிய தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்தியாக அவர்கள் கருதினர். முஸ்லிகளின் பலம் வர்த்தகமும் அதன் மூலமாக அவர்கள் அதிகளவில் செல்வம் ஈட்டுவதுமே என அறிந்து அவர்களுக்கு போட்டியாக வர்த்த ரீதியாக பலம் பெறும் நோக்குடன் நாடுகாண் பயணங்களில் ஈடுபட்டனர்.
நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட நாடுகள்
போர்த்துக்கல்
நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட முதல் நாடு போர்த்துக்கல். சைபீரியக் குடாநாட்டின் முதல் நாடான போர்த்துக்கல் கடற் பிராந்தியத்தினூடாக நாடுகாண் பயணத்தில் ஈடுபடுவது இலகுவான காரியமாகக் காணப்பட்டது. கி.பி 15ம் ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் போர்த்துக்கல்லில் ஆட்சி புரிந்த 1ம் ஹென்றி கடல்வழிப் பாதைகளை கண்டறிவதில் ஆர்வமுடையவனாகக் காணப்பட்டான். மாலுமிகளுக்கு கப்பல் வசதி உட்பட பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்தார். இதன் காரணமாக இவர் கடலோடி ஹென்றி எனப்பட்டார். மாலுமிகளுக்கு பயிற்சி வழங்கும் நோக்குடன் இவரால் பயிற்சிசாலையொன்றும் அமைக்கப்பட்டது. இவரது முயற்சிகள் காரணமாக வேட்டைமுனை, கனேரியத் தீவுகள், மொடேரியா, ஹம்பியா, செனகல் என்பன கண்டறியப்பட்டன.
பர்த்தலோமியஸ் டயஸ்
இவர் போர்த்துக்கல் நாட்டினைச் சேர்ந்த மாலுமி. புதிய நாடுகளை கண்டுபிடிக்கின்ற நோக்குடன் 1487 நாடுகாண் பயணத்தினை மேற்கொண்டார். ஆபிரிக்காவின் தென்முனையைச் சுற்றி இந்தியாவை வந்தடையலாம் என்ற நோக்கம் இவரிடமிருந்தது. இந்நோக்கத்தினை நிறைவு செய்யும் பொருட்டு புறப்பட்ட இவர் ஆபிரிக்காவின் தென்முனையை அடைந்ததும் இவரது கப்பல் அப்பகுதியில் வீசிய புயல் காற்றில் சிக்கியது. இதனால் தனது பயணத்தை இவரால் தொடர முடியவில்லை. இதன் காரணமாக இப்பகுதிக்கு புயல்முனை எனப் பெயரிட்டார். இவர் பயணத்தை நிறுத்தி நாடு திரும்பிய போதும் இவரது பயணம் இந்தியாவை கண்டுபிடிப்பதற்கான புதிய நம்பிக்கையை குடுத்தது. இதன் காரணமாக இம் முனைக்கு ஜோன் மன்னன் நன்நம்பிக்கை முனை என பெயரிட்டார்.
வாஸ்கொடகாமா
இவரும் போர்த்துக்கல் நாட்டவரே. கடற் பயணத்தை மேற்கொள்வதற்கு போர்த்துக்கல் அரசர் இமானுவேலின் ஆதரவு இவருக்குக் கிடைத்தது. கி.பி 1494 இல் நான்கு கப்பல்களுடன் புறப்பட்ட வாஸ்கொடகாமா ஆபிரிக்காவின் தென்முனையை அடைந்து 1498 இல் இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். இவரே கீழைத்தேச நாடுகளுக்கு கடல் வழியாக ஆபிரிக்காவின் தென்முனையச் சுற்றி முதன் முதலாக இந்தியா வந்தடைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற சிறப்பினைப் பெற்றார்.
கப்ரால்
கி.பி 1500இல் 13 கப்பல்களில் கீழைத்தேசம் நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்த கப்ரால் திசைமறி தென் அமெரிக்காவை அடைந்ததாகவும். தென் அமெரிக்காவில் அவரால் கண்டறியப்பட்டதே பிரேசில் ஆகும்.
மகலன்
போர்த்துக்கல் நாட்டினைச் சேர்ந்த மாலுமியான இவருக்கு ஸ்பெயின் நாட்டு அரசர் ஐந்தாம் சாள்ஸின் ஆதரவு இருந்தது. இவரின் துணையுடன் 1518 இல் உலகினைச் சுற்றி வர ஐந்து கப்பல்களுடன் புறப்பட்டார். தென் அமெரிக்காவின் முனையில் உள்ள பகுதியை அடைந்த இவர் அப்பகுதிக்கு மகலன் தொடுகடல் எனப் பெயரிட்டார். உண்மையில் இவருடைய இலக்கு மேற்குதிசையாகப் புறப்பட்டடு அத்திலாந்திக், பசுபிக், இந்து சமுத்திரங்களினூடாக உலகினை சுற்றி வருவதே. இவ்வாறு தனது பயணத்தை ஆரம்பித்த இவர் ஒரு பெருங்கடலுக்குள் பிரவேசித்தார். அக்கடல் அமைதியாக இருந்தமையினால் பசுபிக் சமுத்திரம் எனப் பெயரிட்டார்.
பின்பு கீழைத்தேய பகுதியில் உள்ள ஒரு தீவுக் கூட்டத்தினைச் சென்றடைந்தார். இதற்கு தனது இளவரசரின் நினைவாக பிலிப்பைன்ஸ் தீவுகள் எனப் பெயரிட்டார். இங்கே வாழ்ந்த பூர்வீக குடிகளுடன் நடைபெற்ற சண்டையில் மகலன் கொலை செய்யப்பட்டார். உலகினை வலம் வர வேண்டும் என்ற மகலனின் ஆசை நிறைவேறா விட்டாலும் பொதுவாக உலகினை கடல் மார்க்கமாக முதலில் வலம் வந்தவர் என்ற பெருமையை பெற்றார்.
சனி, 11 பிப்ரவரி, 2023
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (கி.பி 1658 - கி.பி 1796)
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (கி.பி 1658 - கி.பி 1796)
1648 ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனி சுதந்திர நாடாகிய ஒல்லாந்து வர்த்தகப் பொருட்களை பெறும் நோக்குடனேயே கடற்பிரயாணங்களை மேற்கொண்டனர். இதற்காக 1602 ஆம் ஒல்லாந்து மன்னனின் அனுமதியுடன் ஒல்லாந்த வர்த்தக சங்கங்கள் சிலவற்றை இணைத்து ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கம் உருவாக்கி கிழைத்தேசங்களுக்கு வருகை தந்தனர். ஒல்லாந்தர் பிரதானமாப் பொருளாதார ரீதியில் இலாபம் பெறுவதற்கே ஆசியாவிற்கு வந்தனர். ஆசியாவிற்கு வந்த ஒல்லாந்தர் ஜாவாத்தீவில் பத்தேவியாவைத் தலைமையகமாகக் கொண்டு தமது அதிகாரத்தை பரவலடையச் செய்யத் தொடங்கினர்.
ஒல்லாந்தரின் இலங்கை வருகை
இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சியினால் இன்னல்களுக்கு உள்ளாகி இருந்த கண்டி இராச்சிய மன்னர்கள் போர்த்துக்கேயரை இலங்கையில் இருந்து வெளியேற்ற கள்ளிக்கோட்டை மன்னன் சமோரின் உதவியுடன் போர்த்துக்கேயர் மீது போர் தொடுத்தனர். ஆனாலும் கண்டி மன்னர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் போர்த்துக்கேரின் வலிமையான கடற்படை மற்றும் ஆயுதங்கள் ஆகும். ஆகவே அந்நியரான போர்த்துக்கேயரை வெளியேற்ற அதே போன்று அந்நியரான இன்னொரு இனத்தவரான வலிமையான படைபலம் உள்ள ஒல்லாந்தரின் உதவியை கண்டி மன்னர்கள் நாடினர்.
ஒல்லாந்தருக்கும் கண்டி மன்னர்களுக்குமான தொடர்புகள்
1602 ஆம் ஆண்டு மட்டக்களப்பிற்கு வந்த ஒல்லாந்த கடற்படைத் தளபதி ஸ்பீல்பேர்ஜன் கண்டி அரச மாளிகைக்குச் சென்று மன்னன் 1ம் விமலதர்மசூரியனை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டான். ஒல்லாந்து மன்னனால் அனுப்பப்ட்ட கடிதத்தையும் கொடுத்தான். போர்த்துக்கேயரை வெளியேற்ற கடற்படை வலிமை பொருந்திய ஒல்லாந்தரின் உதவி கிடைத்தமையால் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். எனினும் இதன் போது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் போர்த்துக்கேயரை எதிர்க்கும் அளவுக்கான வலிமையான அதிகாரத்தை ஒல்லாந்தர் ஆசியாவில் கொண்டிருக்கவில்லை.
இதன் பின்னர் அடுத்த தொடர்பு சீ போல்ட் த வார்ட் தலைமையில் இடம் பெற்றது. விமலர்தரமசூரியன் மன்னனுடன் இடம் பெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒல்லாந்து குழுவினரின் தகாத நடவடிக்கையால் இவர்கள் கொல்லப்பட்டதோடு ஒல்லாந்தர் உதவியை நாடும் முயற்சி தோல்வி அடைந்தது.
விமலதர்சூரியனுக்கு பின்னர் செனரத்தின் ஆட்சிக்காலத்திலும் எவ்வித நன்மைளும் ஏற்படவில்லை. இவனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சிக்காலத்திலேயே ஒல்லாந்தருடனான தொடர்பு வலுப்பெற்றது. ஒல்லாந்தருடன் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட 2ம் இராஜசிங்கன் போர்த்துக்கேயரை இலங்கையில் இருந்து வெளியேற்ற உதவுவதற்கு ஈடாக கறுவா வியாபார உரிமையையும், கிழக்கில் உள்ள ஒரு துறைமுகத்தையும் கொடுப்பதாக உறுதியளித்தான். இதன்படி ஒல்லாந்தக் கடற்படை அதிகாரியான வெஸ்டர் வோல்டிற்கும் இலங்கைத் தூதுவர்களுக்குமான உடன்பாட்டின்படி 1638 ஆம் ஆண்டு கண்டிப்படையினரும் ஒல்லாந்துப் படையினரும் இணைந்து போர்த்துக்கேயரின் மட்டக்களப்பு கோட்டையை தாக்கி கைப்பற்றினர்.
இதன் பின்னர் இருபது ஆண்டு காலப்பகுதிக்குள் போர்த்துக்கேயர் வசமிருந்த திருகோணமலை, நீர்கொழும்பு, காலி, களுத்துறை, கொழும்பு, மன்னார் ஆகிய கோட்டைகளையும் கைப்பற்றி 1658 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து முற்றாக போர்த்துக்கேயரை வெளியேற்றினர். ஆனாலும் ஒல்லாந்தர் கண்டி மன்னனுடனான உடன்படிக்கையை மீறி செயற்பட்டனர். உடன்படிக்கையின்படி கைப்பற்றப்பட்ட கோட்டைகளை ஒல்லாந்தர் மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் 2ம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் முரண்பாட்டின் விளைவாக மன்னன் ஒல்லாந்தர் மீது பல தாக்குதல்களை மேற்கொண்டு ஒல்லாந்தர் வசமிருந்த பல பகுதிகளை கைப்பற்றி கண்டி இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.
கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஆட்சிக்காலத்தில் 1760 ஆம் ஆண்டு ஒல்லாந்தருடனான மோதலில் மன்னன் ஒல்லாந்தர் வசமிருந்த கட்டுவனகோட்டை, மாத்தறைக்கோட்டை உட்பட மேலும் சில பிரதேசங்களைக் கைப்பற்றினான். 1764 ஆம் ஆண்டு ஆளுனரான பெரன் வென் எக் என்பன் தலைமையில் கண்டி மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு கண்டி மக்களால் தோல்வியடையச் செய்யப்பட்டது. 1765 மீண்டும் ஒல்லாந்தர் கண்டியை ஆக்கிரமித்து கண்டி நகரினுள் பிரவேசித்தனர் இதன் போது சமாதானம் செய்ய மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் விரும்பிய போது ஒல்லாந்தரின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தான். இதன் பின்னர் ஒல்லாந்தர் கண்டி நகரைச் சூறையாடி மீண்டும் கொழும்புக்கு சென்றனர். ஒல்லாந்தரின் படையெடுப்பு, அச்சுறுத்தல் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்ப்டனர். இதனால் 1766 ஆம் ஆண்டு கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் சமாதான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான். இந்த உடன்படிக்கையின் படி கண்டி இராச்சியம் கரையோரப்பகுதியை இழந்தது.
ஒல்லாந்தரின் நிர்வாகக் கொள்கைகள்
இலங்கையின் கரையோரப்பகுதிகளில் 1658 - 1796 வரை ஒல்லாந்தர் ஆட்சிபுரிந்த போது இவர்களால் பல விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் அரசியல், பொருளாதார, சமய அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் ஒல்லாந்தரால் கொண்டு வரப்பட்டது.
ஒல்லாந்தரது நிர்வாக முறையானது திட்டமிடப்பட்டதாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் காணப்பட்டது. குறைந்த செலவில் கூடிய இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிர்வாகக் கொள்கைகள் செயற்படுத்தப்பட்டது. கூடிய அளவிற்கு இலங்கையின் சுதேச உத்தியோகத்தர்களையே நிர்வாகத்திற்கு பயன்படுத்தினர். ஒல்லாந்தர்களது நிர்வாக நடவடிக்கைகளில் ஒல்லாந்த ஆட்சி சபையான ஸ்டேட் ஜெனரலின் அனுமதியின் கீழ் வர்த்தகசங்கம் அமைக்கப்பட்டதுடன் ஒல்லாந் ஹேக் நகரில் அதன் அதிகாரப்பிரிவு இருந்தது. அதன் கீழைத்தேச நிர்வாகப் பகுதிகளை ஆட்சி செய்வதற்கு பத்தேவியாவில் ஆளுனரும் அவரது சபையும் இருந்தது. இலங்;கை நிர்வாகம் தொடர்பில் காலியில் ஆளுனரும் அவருக்கு உதவி புரிவதற்கு பதினொருவர் கழகம் என்ற அமைப்பும் இருந்தது.
இலங்கையின் ஒல்லாந்துப் பகுதிகள் மூன்று கொமண்டரிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கொழும்புக் கொமாண்டரி, காலிக் கொமாண்டரி, யாழ்ப்பாணக் கொமாண்டரி என்பனவே அவையாகும். ஒல்லாந்தர் நிர்வாக முறையில் கொழும்புக் கொமாண்டரி மிகப் பிரதான இடத்தைக் கொணடிருந்தது ஆளுனரே நேரடியாக நிர்வாகம் செய்தார். ஆளுனருக்கு அடுத்த நிலையில் தலைமை நிர்வாகி முக்கியத்தும் பெற்றவராக விளங்கினார். கொழும்புப் பிரிவை பொறுத்தமட்டில் அதன் நீதி, நிர்வாக, நிதி விடயங்கள் தொடர்பாக தலைமை நிர்வாகியே பொறுப்பாக விளங்கினார். பண்டகசாலைக்கு பொறுப்பாக பண்டகசாலைக் காப்பாளர் காணப்பட்டார். பிசுக்கால் எனப்படும் உத்தியோகத்தர் பேரவையின் நீதி, நிர்வாகதுறையின் பிரதிநிதியாக தொழிற்பட்டாhர். இவர்களைத் தவிர இராணுவத் தளபதி, கழுக்கோறளைத் தலைவர், பணம் வழங்கும் அதிகாரி, மகாபத்தே தலைவர் போன்றோரும் நிர்வாகத்தின் பொருட்டு செயற்பட்டனர்.
ஒல்லாந்தரின் நிர்வாக நோக்கத்திற்காக பிரிக்கப்பட்ட மூன்று கொமாண்டரிகள் ஒவ்வொன்றும் உயர் உத்தியோத்தரை உள்ளடக்கிய பேரவையினால் பரிபாலிக்கப்பட்டது. இப் பேரவையில் அதிகாரம் மிக்கவராக காணப்பட்டவர் திசாவை என அழைக்கப்பட்டார். கொழும்பு, யாழ்ப்பாணம், கால ஆகிய நிர்வாக நகரங்களின் தொலைவினை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் வர்த்தகத்தின் பொருட்டு திசாவைக்கு அடுத்தநிலையில் ஒப்பர்கூவ்ட் என்ற உத்தியோகத்தரை நியமித்தனர். உள்ளுர் நிர்வாகத்தை பொறுத்தமட்டில் திசாவை பதவி முக்கியத்துவம் பெற்றதாக காணப்பட்டது. வரி, நீதி, இராணுவ, பொருளாதர, நிர்வாக அலகுகளை பரிபாலிக்கும் பொறுப்புக்களை திசைவையே கொண்டிருந்தது. ஒவ்வொரு திசாவாணியும் கோரளை, பற்று, கிராமம் என வகுக்கப்பட்டு முறையே முதலியார், கோரளை, அத்துக்கோரளை ஆகிய நிர்வாகிககளால் நிர்வாகிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் விதானை என்ற அதிகாரியே கிராமங்களின் நாளாந்த நிர்வாக நடவடிக்கைகளை பரிபாலித்து வந்தார். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் அரசுக்கு சேரவேண்டிய வருமான மீதியை அரசுக்கு அனுப்பி வைப்பது விதானையின் பொறுப்பாக இருந்தது.
மகாபத்தே திணைக்களம் கறுவா நிர்வாகத்திற்கு பொறுப்பாக செயற்பட்டது. அத்தோடு உள்ளுர் நிர்வாக மேற்பார்வையையும் இத் திணைக்களமே மேற்பார்வை செய்தது. மகாபத்தே திணைக்களத்தின் பிரதான பணிகள் ஐரோப்பாவிற்கும் பத்தேவியாவிற்கும் கறுவாவை ஏற்றுமதி செய்யும் பொருட்டு கறுவாப்பாட்டைகளை உரித்தல், அவற்றை துறைமுகங்களுக்கு கொண்டு சென்று வழங்குதலே ஆகும். மகாபத்தே திணைக்களத்தின் தலைவராக ஒல்லாந்து நிர்வாகியே காணப்பட்டார். அவருக்கு உதவியாக மகாதுரையா, உபதுரையா என்போர் உதவியாக இருந்தனர். காலியர், குளினர், பண்ணியர், சலாகம் சாதியினர் கறுவாப்பட்டை உரிக்க பயன்படுத்தப்பட்டனர். யானை பிடித்தல் தொலிலுக்கு கஜநாயக்கே என்ற சிங்கள முதலியார் பொறுப்பாக இருந்தார்.
ஒல்லாந்தரது ஆட்சியில் இலங்கையில் கல்வி நடவடிக்கைகள்
இலங்கை கல்வி வரலாற்றில் ஒல்லாந்தர் காலம் முக்கியமானது. கல்வியின் ஊடாக சமயம் பரப்பப்பட்டதால் ஒல்லாந்தர் கல்வியில் செலுத்திய கவனம் “இஸ்கூல்” ஆரம்பிக்கப்பட்டு அதனை தம் சமயப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கொண்டனர்;. கல்வியை பொறுத்தவரை ஒல்லாந்தரின் நோக்கங்கள்,
கல்வி மூலம் சமயத்தை பரப்புதல்.
தமது சமயத்தை தழுவியோருக்கு எழுத்து தொடர்பான ஆரம்பக் கல்வியை வழங்குதல்.
தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தல்.
சமயப் பிரச்சாரத்திற்கு அவசியமான பிரசாரங்களையும் ஆசிரியரையும் பயிற்றுவித்தல்.
தமது நிர்வாகத்தில் உதவுவதற்கு ஒரு மத்திய வகுப்பினரை உருவாக்குதல்.
போன்றவை ஆகும்.
ஒவ்வொரு பாடசாலையும் ஒல்லாந்தைச் சேர்ந்த மதகுரு ஒருவரின் நேரடியான மேற்பார்வையில் இயங்கியது. தமது மதத்தை தளுவியவர்களுக்கு முன்னுரிமை அளித்து இணைத்துக் கொண்டனர். ஏனைய சமயப் பிள்ளைகளை ஞானஸ்தானத்தின் பின்னர் பாடசாலைக்கு உள்வாங்கினர். ஐரோப்பிய பிள்ளைகளுக்காக “கொழும்பு செமினறி” என வேறாக பாடசாலை ஆரம்பித்தனர். அனைத்து பாடசாலைகளும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த மற்ற எல்லா நாட்களும் பாடசாலை நாட்டகளாயிருந்தன. நீண்ட விடுமுறைகள் இருக்கவில்லை. நத்தார் தினம், புத்தாண்டுதினம், சுவர்க்க ஆரோகண திருவிழா, பிராத்தனை செல்வதற்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டது. பாடசாலைகளில் மொழி, சங்கீதம், சமயம் போன்றவை கற்பிக்கப்பட்டதுடன் முறையான பரீட்சைகளும் நடாத்தப்பட்டன. கற்றல் நடவடிக்கைகளை கொலாச் கொமிசன் சபையொன்றின் மூலம் நிர்வகித்தனர்.
15 வயதிற்குட்பட்ட யாவரும் கட்டாயம் கல்வியை பெற வேண்டும் என்ற சட்டம் இருந்ததோடு அது வெற்றிகரமாகவும் செயற்படுத்தப்பட்டது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர் தண்டப்பணம் செலுத்த வேண்டியிருந்தது. கல்வியை அரச பொறுப்பாக்கியவர்கள் ஒல்லாந்தரே ஆவார். இதனால் அரசு கல்விக்கென தனியான பாடசாலைக்கல்வி ஆணைக்குழுவை நிறுவினர். இக்குழுவின் பணிகளாவன ஆசிரியர் நியமனமும் கட்டுப்பாடும், பாடசாலை பரிசோதனை மதகுரு ஒருவரின் பொறுப்பில் இருந்தது, ஞானஸ்தானம் பெற விரும்புபவர்களை பரீட்சித்;தல். ஒவ்;வொரு மாகாணமும் பிரதேசம், கோட்டம், சிற்றூர் எனப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பங்குகள் தோறும் பாடசாலைகள் தொட்ங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு நியமப் பாடசாலைகள் செயற்பட்டன.
ஒல்லாந்தரது கல்வி நிறுவனங்களில் பரிஷ் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், செமினறிப்பாடசாலைகள், நோமல் பாடசாலைகள் (ஆசிரியர் பயிற்சிப்பாடசாலை) போன்றவை முதன்மையானவை. கற்பித்தலில் வினாவிடை முறையே அதிகமாக உபயோகிக்கப்பட்டது. கி.பி 1737 ஆண்டில் கொழும்பில் ஒல்லாந்த அச்சகம் நிறுவப்பட்டதன் பின்பு சிங்கள மொழியில் அசாதாரண அறிவு பெற்றிருந்த வண. ஜே.பி வெட்செலியூஸ் என்பவரின் மதநூல்கள் பாடநூல்களாக வெளியிடப்பட்டன.
15 வயதான நிலையில் பள்ளித்தேர்வின் பின்னர் லாஜர்டீன் எனும் மாணவர் விடுகைப்பத்திரம் வழங்கப்பட்டது. 15 வயதின் பின்னர் 17 வயதில் நியூ லாஜர்டீன் எனும் புது விடுகைப்பத்திரம் பெறும் வரை மாணவர் ஒருவர் இருவருட காலம் பகுதி நேர அடிப்படையில் பள்ளிக்குச் செல்லும் நிலை நீடித்தது. மேலும் 19 வயதில் ஓட் லாஜர்டீன் என்னும் பூரண விடுகைப்பத்தரம் பெறும் வரை இன்னும் இருவருட காலம் ஒரு மாணவர் பள்ளிக்குத் தொடர்ந்து செல்லும் நிலமை நிலவியது.
எனவே தொகுத்து நோக்கும் போது போர்த்துக்கேயரைவிட ஒல்லாந்தர் காலத்தல் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி முறையின் மூலம் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
ஒல்லாந்தர் கால பொருளாதார நடவடிக்கைகள்
இலங்கையில் போர்த்துக்கேயரின் கரையோர ஆட்சிப் பிரதேசங்களை தம் வசப்படுத்திக் கொண்ட ஒல்லாந்தர் 157 வருடங்கள் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட தமது நிர்வாகத்தை கொண்டு நடாத்தினர். இதன் படி சமூக, பொருளாதார, சமய விடயங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒல்லாந்தரது பொருளாதார கொள்கையானது குறைந்த செலவில் அதிக இலாபம் பெறுவது ஆகும். இதற்காக பல வழிகளிலும் வருமானத்தை அதிகரித்தனர். வர்த்தக ஏகபோக உரிமையை கொண்டிருந்த ஒல்லாந்தர் வெளிநாட்டு வர்த்தகத்திலும் உள்ளுர் விவசாயத்திலும் பல்வேறு வழிகளில் வருமானத்தை பெற்றனர்.
கறுவா போன்ற விலையுயர்ந்த வர்தகப்பெருட்களை இலங்கையில் இருந்து பெற்றுக் கொள்வதும் அத்தோடு வர்த்தக உரிமையை பெற்றுக்கொள்வதும் ஒல்லாந்தரது பிரதான பொருளாதார நோக்கமாகும். கறுவா வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றுக் கொண்ட ஒல்லாந்தர்கள் கறுவா உற்பத்தியை அதிகளவில் ஊக்குவித்தனர். கறுவாவால் 3 மடங்கு இலாபத்தை பெற்றனர். ஆரம்பத்தில் இயற்கையாககாடுகளில் விளையும் கறுவாவை பெற்ற ஒல்லாந்தர் பின்னர் கொழும்பு, களுத்துறை, அளுத்கம, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் கறுவாவை பயிரிட்டனர். கறுவாமரங்களை அழித்தல், தனியார் வர்த்தகம், அனுமதியின்றி கறுவா பட்டை உரித்தல் என்பன குற்றங்களாக கருதப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. கறுவா மரங்கள், கறுவாத் தோட்டங்களை பாதுகாக்க சாலிய லஸ்கரின்ஸ் படையமைப்பை உருவாக்கினர். கறுவாப்பட்டடை சேகரித்தல் ஆண்டுக்கு இருமுறை நிகழும். ஆனி முதல் ஐப்பசி வரை பெரும் பொகமும் தை மாசியில் சிறு போகமும் பெறப்படும். கறுவா வரத்தகம் தொடர்பாக மகாபத்தே திணைக்களம் கபித்தான் ஒருவனின் தலைமையில் செயற்பட்டடது.
கறுவா தவிர பாக்கு, முத்து, யானைத்தந்தம், மிளகு, சாதிக்காய், ஏலம், யானை, தேன்மெழுகு என்பவற்றின் மூலமும் ஒல்லாந்தர் இலாபம் அடைந்தனர். இவை தவிர நிலங்களில் இருந்தும் வரியை அறவிட்டனர் காணி உரிமை அதிலிருந்து பெறவேண்டிய வரி போன்ற விடயங்கள் அடங்கிய தோப்பு என்ற பதிவேட்டினை தயாரித்தனர். இதில் காணிகளின் விபரம், பயிர் வகைகள், வர வேண்டிய வரிவகைகள் என்ப அடங்கியிருந்தன. வரி அறவிடும் உரிமையை ஏலத்தில் விடும் முறையை அறிமுகப்படுத்தினர்.
விவசாய அபிவிருத்தியில் கவனம் செலுத்திய ஒல்லாந்தர் நெல் வேளாண்மை செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினர். ஒல்லாந்து தொழில்நுட்ப வல்லுனர்களால் குளங்கள், கால்வாய்கள் என்பன மறுசீரமைக்கபட்டன. யோதவாவி, கந்தளாய், ஊறுபொக்க போன்ற குளங்கள் புனரமைக்கபட்டன. 1784 இல் பேர்ணண்ட் என்பவர் நெற்செய்கையை ஊக்கப்படுத்தும் விதமாக கால்வாய்களை அமைத்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் மேற்கிலும் உப்பளக் கைத்தொழில் விருத்தி செய்யப்பட்டது. நீர்கொழும்பிற்கு அண்மையிலுள்ள முத்துராஜவெல என்ற சதுப்பு நிலத்தினை டீ தெஸ்தே என்பவன் மீட்டெத்து அதை பயிர் நிலமாக மாற்றினான்.
இலங்கையின் சுதேச பொருளாதார கைத்தொழிலான நெசவுத்தொழிலிலும் ஒல்லாந்தர் கவனம் செலுத்தினர். யாழ்ப்பாண கொமாண்டரியிலுள்ள பல மையங்களிலும் மட்டக்களப்பிலும் நெசவுத்தொழில் வளர்த்தெடுக்கப்பட்டது. நெசவுத் தொழிலுக்காக பருத்திச் செய்கை பரவலாக மேற்கொள்ளப்பட்டு, நூல் நூற்கப்பட்டு ஆடை நெய்யும் கைத்தொழில் விருத்தி செய்யப்பட்டது. இதற்காக தென்னிந்தியாவில் இருந்து கேஷியர், கைக்கோளார் எனும் தொழிலாளர்கள் வரைவழைக்கப்ட்டனர் பருத்தி நூல் தென்னிந்தியாவில் இருந்து இறுக்குமதி செய்யப்பட்டது அந்நூல்களுக்கான சாயம் இடுதல் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் மும்முரமாக நடைபெற்றது.
ஒல்லாந்தரது சமயக் கொள்கை
ஒல்லாந்தரது மதம் புரட்டஸ்தாந்து ஆகும். ஒல்லாந்தர் கரையோரப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர். அங்கு தமது சமயத்தைப் பரப்புவதற்கு அவர்கள் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றிய ஒல்லாந்தர் அப் பிரதேசங்களில் தமது அரசியல் வர்த்தக ஆதிக்கத்தை ஏற்படுத்துவதில் கத்தோலிக்க மதம் தடையாக இருப்பதை உணர்ந்து அதனை அழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்தோடு தமது சமயத்தையும் பரப்புவதற்கு பல்வேறு வழிவகைகளைக் கையாண்டார்கள்.
ஒல்லாந்தர் தமதுசமயத்தை பரப்புவதற்கு 1656 இல் பிலிப்பல்தியஸ் பாதிரியார் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார். கத்தோலிக்க சமயத்தை தடை செய்யும் பல சட்டங்களை இயற்றினர். 1658 - 1659 இல் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் கத்தோலிக்க சமயம் அனுஸ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. கிறிஸ்தவ விவாகங்கள், ஞானஸ்தானம் பெறுதல் என்பன ஒல்லாந்து திருச்சபையினிலே நடைபெற வேண்டும் எனவும் மரித்தவர்களை கத்தோலிக்க இடுகாகளில் அடக்கம் செய்யும் போது அதிக வரி அறவிடப்பட வேண்டும் எனவும் புரட்டஸ்தாந்து மதத்தை சேரந்தவர்களுக்கு மரணவரி நீக்கப்படுதல் வேண்டும் என சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அந்நிய குருமார் இலங்கைக்குள் பிரவேசிக்கக் கூடாது அத்தோடு அவர்களை இரகசியமாக பாதுகாப்பவர் மரண தண்டனைக்குள்ளாவார்கள் எனவும் சட்டம் இயற்றப்பட்டது. கத்தோலிக்க மக்கள் இரகசிமாகவோ, பகிரங்கமாகவோ ஒன்று கூடி ஆராதனை முயற்சியில் பங்குபற்றுவதும் தடைசெய்யப்பட்டது. இச் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது.
புரட்டஸ்தாந்து சமயத்தை ஏற்காதவர்களுக்கு அரசாங்க உயர்மட்டப் பதவிகள் மறுக்கப்பட்டன. அது மட்டுமன்றி அவர்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்காமல் பாரபட்சம் காட்டப்பட்டது. புரட்டஸ்தாந்து சமயத்தை ஏற்போருக்கு உயர் பட்டம், பதவிகள், பரிசுகள், பரிந்துரைகளை பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஒல்லாந்தர் தமது மதப்பிரச்சார நடவடிக்கைகளுக்காக கல்வியையும் பயன்படுத்தினர். இஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டு தமது சமயத்தை தழுவிய பிள்ளைகளை இணைத்துக் கொண்டனர். ஏனைய சமயப் பிள்ளைகளை ஞானஸ்தானத்தின் பின்னர் பாடசாலைக்கு உள்வாங்கினர். 1739 இல் சிங்கள அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தி சிங்களத்தில் பைபிளை அச்சிட்டு பிரசுரித்தனர்.
ஒல்லாந்தரது சமூக மற்றும் கலாசார செல்வாக்கு
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இலங்கை மக்களுடைய மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சட்டக்கோவை உருவாக்கப்பட்டது. அச் சட்டக்கோவைகள் யாழ்ப்பாண வழக்கில் தேசவழமை எனவும், மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் எனவும், மலைநாட்டில் கண்டியர் சட்டம் எனவும், முஸ்லீம்கள் மத்தியில் முகமதியார் சட்டம் எனவும் வழங்கப்பட்டது.
ஒல்லாந்தர்கால கட்டிடக்கலை மரபு இலங்கையில் அறிமுகமானது. அகண்ட விறாந்தைகள், உயர்ந்த முகடுகள், தனித்துவமான வளைவுகள், உயர்ந்த வாயிற்படிகள் போன்ற ஒல்லாந்தருக்கே உரிய கட்டடக்கலை அம்சங்கள் இலங்கையிலும் பின்பற்றப்பட்டது.
ஒல்லாந்தர்காலம் இலங்கை வைத்தியத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்த காலமாகும். மருத்துவ மூலிகைகள் பற்றிய ஆய்விலும், மூலிகைத் தோட்டங்களை அமைப்பதிலும் ஒல்லாந்தர் ஆர்வம் செலுத்தினர். கரையோரப்பிரதேசங்களில் ஒல்லாந்தர் வைத்திய சாலைகளை நிறுவி தமது வைத்திய சேவையை விஸ்தரித்தனர். அத்தோடு கொழும்பிலிருந்து சில மைல் தொலைவில் கெந்தல என்ற இடத்தில் குஷ்டரோக வைத்தியசாலை ஒன்றையும் நிறுவினர்.
ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுள் பிரதனமான ஒன்று வீதிகளாகும். ஒல்லாந்தர் காலத்தில் கரையோர மாகாணங்களிலும், யாழ்ப்பாணத்திலும் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட வீதிகள் மக்களது வீடுகளையும், சந்தைகளையும், தேவாலயங்களையும், இடுகாடுகளையும் இணைத்து அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்ட அமைப்புக்களில் ஒரு பகுதியான உரோமன் டச்சுச் சட்டம் ஒல்லாந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இலங்கையில் இருந்த சுதேச சட்டங்கள், பழக்க வழக்கங்களுக்கு பொருத்தமானதாக உரோமன் டச்சுச் சட்டத்தை தொகுத்து ஒல்லாந்தர் நடைமுறைப்படுத்தினர். ஒல்லாந்தரால் புதிய நீதிமன்றத் தொகுதியும் அறிமுகப்படுத்தப்பட்டது அவையாவன,
ராத்வான் ஜஸ்டிட் மேல் நீதிமன்றம் - இது ஒல்லாந்து நீதிமன்றத் தொகுதியின் உயர் நீதிமன்றம். இந்த நீதிமன்றம் மூன்று கொமாண்டரிகளிலும் நிறுவப்பட்டது. குற்றச்செயல் தொடர்பான வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பிரதானி வுப்ட் அத்மினிஸ்தார் என அழைக்கப்பட்டார்.
சிவில்ராத் நீதிமன்றம் - கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய கொமாண்டரிகளில் நிறுவப்பட்டிருந்தது. சிவில் வழக்குகள், விவாகம் தொடர்பான வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டது.
லான்ராத் நீதிமன்றம் - கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு. மாத்தறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. திசாவை இதன் தலைவராக இருந்தார். சுதேச மக்களுக்கான இலகுவான நீதிமன்றமுறை இதுவாகும்.
பிஸ்கல் நீதிமன்றம் ஃ திசாவை நீதிமன்றம் ஃ கிராம நீதிமன்றம் - கீழ்நிலை நீதிமன்றமாக செயற்பட்டது. கிராமத்தலைவர், விதானை, முதலி, கோரளை போன்ற சுதேச அதிகாரிகள் தமது பதவிகளுக்கு ஏற்ப அதிகாரங்களை கொண்டிருந்தனர்.
ஒல்லாந்தர் சுதேச மக்களை தமது சமயத்திற்குள் உள்வாங்க பல்வேறு வழிகளை மேற்கொண்டமையால் சாதிமுறையை அடிப்படையாகக் கொண்ட இலங்கை சமூகமுறையில் சாதி மாற்றங்கள் ஏற்பட்டது. மேலும் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தரிடையில் கலப்புத் திருமணம் இடம்பெற்று பறங்கி எனப்படும் கலப்பு இனத்தவர் இந்நாட்டு சமூகத்திற்குள் இணைந்தனர். அத்துடன் ஒல்லாந்தரது உணவு வகைகள் இலங்கையிலும் அறிமுகமாகியது உதாரணமாக கேக், அச்சாறு, கொக்கிஸ் என்பவற்றை குறிப்பிடலாம். இவை மாத்திரமின்றி சிங்கள், தமிழ்மொழிகளில் பல ஒல்லாந்துச் சொற்கள் கலந்தமையும் குறிப்பித்தக்கது உதாரணமாக விறாந்தை, சொல்தர், ஓர்லோசு, இஸ்கூல், வெந்தேசி, இலாச்சி, பிசுக்கால், காமர, அலுமாரி, சொல்தர போன்ற சொற்களை குறிப்பிடலாம்.
மதச் சீர்திருத்தமும், புரட்டஸ்தாந்து நடவடிக்கையும்
மதச் சீர்திருத்தமும், புரட்டஸ்தாந்து நடவடிக்கையும்
மேற்கு ஐரோப்பிய வரலாறு மத்திய யுகத்திலிருந்து நவீன யுகத்திற்கு மாறியதில் முக்கிய நிகழ்வாக விளங்குவது மதச் சீர்திருத்தமாகும். 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட இந்த மதச் சீர்திருத்தத்தின் மூலம் கிறிஸ்தவசபை பிளவுற்றது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்காக விளங்கியது கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதாகும். ஜேர்மனியில் தோற்றம் பெற்ற இவ் இயக்கம் பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. 1516 ஆம் ஆண்டு கத்தோலிக்க சபைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட எதிர் நடவடிக்கைகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் எனப்படுகின்றது.
மதச் சீர்திருத்த இயக்கத்தின் தோற்றத்திற்கான காரணங்கள்
சமயக் காரணங்கள்
மத்தியகாலத்தின் பிற்பகுதியில் திருச்சபை ஊழல்கள் நிறைந்ததாக இருந்ததுடன் செல்வம் மிகுந்த நிறுவனமாகவும் திகழ்ந்தது. மத்திய காலத்தில் கத்தோலிக்கசபை பெரும் நிலப்பரப்பையும் சொத்துக்களையும் உரிமையாக்கி; கொண்டிருந்தது. குருமார்கள் சமயக் கல்வியில் அக்கறை காட்டாமல் மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்தனர். இவர்களால் சுயநலநோக்குடன் சமய அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. குருமார்கள் உலக வாழ்க்கை, ஆடம்பரங்கள் என்பனவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தனர். பிரபுக்கள் தமது இறுதிக்காலத்தில் மோட்சமடைய எழுதிவைத்த சொத்துக்களாலும் திருச்சபை செல்வத்தில் திளைத்திருந்தது மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பமும் “பீற்றர்பென்ஸ்” எனும் வரியை போன்று குடும்பத்தின் வருமானத்தில் 1ஃ10 பகுதியை “டயித்” எனும் வரியாக செலுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு வரிகளும் சொத்துக்கயையும் பெற்றிருந்த கத்தோலிக்க குருமார் சுகபோக வாழ்வு வாழ்ந்ததுடன் லௌகீக வாழ்வுக்கும் இசைவாக்கம் பெற்றிருந்தனர். இத்தகைய நிலமைகள் திருச்சபையின் மீது மக்களுக்கு வெறுப்பினை அதிகரிக்கச் செய்தது.
அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு கிறிஸ்தவசபை பல வழிகளை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் சமயரீதியான கருத்துக்களை தாம் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக இலத்தீன் மொழியிலிருந்த கிறிஸ்தவ வேதாகமத்தை சுதேச மொழிக்கு மொழிபெயர்த்தனர். அவ்வாறு மொழிபெயர்க்கும் போது அதிலுள்ள கருத்துக்களை தமக்கேற்றவாறு மாற்றியமைத்தனர். இச் செயற்பாடு திருச்சபையின் மீதும் பாப்பரசர் மீதும் விமர்சனத்தை தோற்றுவித்தது.
பாப்பரசர்கள் அதிகமான ஆதிக்கத்தைக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ உலகின் நன்மையான நிலைப்பாட்டிற்கு தடங்கள் ஏற்படுமாயின் லௌகீக ஆட்சியாளர்களின் உள்விவகாரங்களில் தலையிட பாப்பரசருக்கு அதிகாரம் உண்டெனவும் பாப்பரசர் இறைவனை விடத் தாழ்ந்தவர் என்றும் மனிதனை விட உயர்ந்தவர் என்றும் அவர் அனைவரையும் கேள்விக்கு உள்ளாக்க முடியும் ஆனால் அவரை கேள்விக்கு உள்ளாக்க முடியாது என இக்காலத்தில் கூறப்பட்டது. இதனால் தேசிய திருச்சபைகளை சேர்ந்த பாதிரிமார்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு பாப்பரசர் அனுமதிக்கவில்லை. இது தேசிய திருச்சபை பாதிரிமார்கள் சீர்திருத்தத்தை மேற்கொள்ள காரணமாகியது.
கத்தோலிக்க சபையின் ஊழல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தோர் மற்றும் செயற்பட்டோர் பாப்பரசரால் கொலை செய்யப்பட்டனர். மூன்றாம் இன்னசன்ட் பாப்பரசரால் கத்தோலிக்க ஊழல்களுக்கு எதிராக செயற்பட்ட பொஹிமிய இனத்தவரான ஜோன்ஹஸ்; மற்றும் சவணரோலா போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர். இது பாப்பரசர் மீதும் திருச்சபை மீதும் வெறுப்பு ஏற்பட காரணமாகியது. அத்தோடு மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கு பாப்பரசர் பதவியின் மதிப்பு குறைவடைந்தமையும் காரணமாகும். பாப்பரசர் ஐரோப்பிய அரசியல் செயற்பாடுகளில் அதிகம் தலையிட்டமையினால் இறைவனின் பிரதிநிதியாக இருப்பதைவிட உலகில் ஆட்சியாளராக அவர் செயற்படுவதை கிறிஸ்தவ மக்கள் உணர்ந்ததால் பாப்பரசர் பதவிக்கு உரிய மரியாதை குறைவடையத் தொடங்கியது.
சமயசீர்திருத்தம் ஏற்படுவதற்கு ஒரேவேளையில் பல பாப்பரசர்கள் நியமனம் பெற்றமையும் ஒரு காரணமாகும். எட்டாம் பொனிபஸ் பாப்பரசரின் மரணத்தின் பின் 1305 ஆம் ஆண்டு பிரான்சிய இனத்தைச் சேர்ந்த ஆயர் ஒருவர் ஆறாவது கிளமன்ட் என்ற பெயரில் பாப்பரசர் ஆனார். அவர் உரோமுக்குச் செல்லாது றோன் நதிக்கரையில் உள்ள அவிஞ்சோன் நகரில் தங்கினார். இது முதல் பாப்பரசர் பதவிக்கு வந்த அநேகர் பிரான்சிய இனத்தவராவர். இவர்கள் உரோமிற்கு செல்லாமல் பிரான்சிலே வாழ்ந்தனர். இதனை பாபிலோனிய சிறைவாசம் என்பர். 1377 ஆம் அண்டு பாப்பரசர் பதவிக்கு வந்த 2ம் கிரகெறி உரோமிய மக்களின் வேண்டுகோளுக்கு அமைய உரோமில் தங்குவதற்குச் சென்றார். இவரின் பின்னர் ஆறாம் உர்பன் எனும் ஆயர் பாப்பரசர் பதவிக்கு வந்ததை பிரான்சின் கர்தினால்மார்கள் ஏற்றுக்கொள்ளாது 13ஆம் கிளமென்ட் பாப்பரசரைத் தெரிவுசெய்தனர். இச்சூழ்நிலையில் திருச்சபையை பாதுகாக்கும் நோக்கோடு அறிஞர்களாலும், கல்விமான்களாலும் அமைக்கப்பட்ட நிறுவனத்தால் அவ் இரு பாப்பரசர்களுக்கும் பதிலாக 5ம் அலெக்சாண்டர் எனும் பாப்பரசரை தெரிவு செய்தனர். இவ்வாறான பாப்பரசர் பதவி தொடர்பான மோதலை முடிவுக்கு கொண்டுவர பரிசுத்த உரோமப் பேரரசு தலையிட்டு புதிய பாப்பரசர் ஒருவரை நியமித்தனர். இவ்வாறான பாப்பரசர் பதவி மோதல்களால் பாப்பரசர் பதவிக்கு இருந்த மதிப்பு குறைந்தது.
தேசிய திருச்சபைகளின் எழுச்சியும் சமய சீர்திருத்தம் ஏற்பட காரணமாகும். திருச்சபையின் அதிகாரம் அளவு கடந்து அதிகரிப்பதை ஐரோப்பிய அரசர்களே எதிர்த்தனர். உரோமில் உள்ள பாப்பரசர் இத்தாலிக்கு சொந்தமானவர் எனவும் அவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவது தவறு எனவும் எண்ணினர். ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேசிய உணர்வுகள் பெருகியது. அந்த நாடுகளில் மன்னர்கள் பலம் அடைந்தனர். இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசர்கள் தமக்கு கீழே செயற்படக் கூடிய தேசிய திருச்சபைகளை உருவாக்குவதில் அக்கறை செலுத்தினர்.
பொருளாதாரக் காரணிகள்
திருச்சபையின் வரி விதிப்பு தொடர்பாக மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியானது சமயசீர்திருத்தம் ஏற்படுவதற்கான பொருளாதாரக் காரணமாகும். திருச்சபை ஆரம்ப காலத்தில் விதித்த வரியினை மக்கள் சமயம் சார்ந்தவையென எண்ணினர். நாளடைவில் திருச்சபையின் விரிவிதிப்பு நடவடிக்கைகள் மோசமாகின. உழைப்பின் குறிப்பிட்ட பகுதியை ஆட்சியாளர்களுக்கும் மதகுருமார்களுக்கும் திருச்சபைக்கும் செலுத்த வேண்டியிருந்தமையால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். அத்துடன் பலநாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட வரி உரோமுக்கு அனுப்ப வேண்டியிருந்தமை. தமது நாடுகளில் இருந்து வருடந்தோறும் பெரும் தொகையான பணம் உரோமுக்கு செல்வதை எழுச்சியுற்று வந்த தேசிய அரசுகளின் மன்னர்களும், மத்திய வகுப்பைச் சேரந்த மக்களும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்பானது சமய சீர்திருத்தம் ஏற்பட காரணமாகும்.
மத்தியகாலத்தில் தனியான அரசாக செயற்பட்ட திருச்சபைகளிடம் அதிகளவான பணமும் நிலமும் காணப்பட்டது. அவ்வாறு காணப்பட்ட செல்வத்தை தமதாக்கிக் கொள்வதற்கு முடியாட்சி ஆட்சியாளர்களும், வர்த்தக சபையினரும் முயன்றனர். செல்வத்தை சேகரிப்பதற்கு திருச்சபை பல வழிமுறைகளை கையாண்டதும் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த திருச்சபைகளும் முடியாட்சியாளர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். திருச்சபையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும் தனிநபர்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டும் திருச்சபையின் உயர் பதவிகளை விலைக்கு விற்றமையும் அதனால் அதிகளவான பணம் தவறாக கையாளப்பட்டது. இச் செயற்பாடானது மதச்சீர்திருத்தம் ஏற்பட காரணமாகியது.
மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கான உடனடிக் காரணமாக அமைந்தது பாவமன்னிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவமாகும். உரோமிலே பாப்பரசர் பத்தாம் லியோ புனித பீற்றர் தேவாலய திருப்பணியை மேற்கொண்டிருந்தார். இதற்கு அதிக நிதி தேவைப்பட்டதனால் பாப்பரசர் பத்தாம் லியோ 1517 ஆம் ஆண்டு “ஜோன்ரெட்செல்” எனும் பாதிரியாரை பொகிமியாவிற்கு அனுப்பினார். இவர் ஜேர்மனியில் விற்றன்பேர்க் பல்கலைக்கழகத்தில் பாவமன்னிப்புச் சீட்டுக்களை விற்பனை செய்தார். அங்கு மாட்டின் லூதர் இவருக்கு எதிராக செயற்பட்டமை மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்தியது. இச் சம்பவமானது மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கு உடனடிக் காரணமாகும்.
அரசியல் காரணங்கள்
மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கான காரணங்களுள் பிரதானமாக அமைவது தேசியஅரசு முறையில் மன்னர்களுக்கும், பாப்பரசர்களுக்கும் இடையே அதிகாரம் தொடர்பாக ஏற்பட்ட மோதலாகும். ஆரம்ப காலங்களில் திருச்சபைகள் அரசியலில் தலையிட்டும் திருச்சபை நிலங்களில் இருந்தும் வரிகளை அறவிட்டு செயற்பட்டன. பின்னர் தேசிய அரசு முறைமை வளர்ச்சியடைந்ததால் அரசியல் விடயங்களிலும் வரி அறவிடுதலிலும் இருந்த அதிகாரங்கள் தடை செய்யப்பட்டது. உதாரணமாக பிரான்சின் நான்காம் பிலிப் மன்னனும், இங்கிலாந்தின் முதலாவது எட்வட் மன்னனும் திருச்சபையின் நிலங்களிலிருந்து வரியை அறவிட்டனர். இது பாப்பரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையில் போட்டியை ஏற்படுத்தியது இது மதச்சீர்திருத்தம் ஏற்படுவதற்கான காரணமாகும்.
பாப்பரசின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் அவர்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்காவும் ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்குடன் கடுமையான கொள்கைகளையும் கடைப்பிடித்தனர். பாப்பரசரின் எதிர்ப்பைக் கவனத்தில் கொள்ளாது ஆயர்களை கைது செய்தல், சில சந்தர்ப்பங்களில் பாப்பரசர்களையும், குருமார்களையும் அரசர்களே நியமித்தனர். இது திருச்சபைக்கு எதிரான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து மதசீர்திருத்தம் ஏற்பட காரணமாகியது.
மதச்சீர்திருத்தத்திற்கான பிரதான காரணங்களுள் ஒன்று பரிசுத்த உரோமப் பேரரசனுக்கும், ஜேர்மனியின் பிரதேச இளவரசர்களுக்குமிடையேயான அரசியல் மோதல்களும் போட்டிகளுமாகும். ஜேர்மனியின் பிரதேச இளவரசர்கள் தத்தமது பிரதேசங்களில் பிரதேச திருச்சபைகளை தோற்றுவித்து போட்டியுடன் செயற்பட்டன. இவர்கள் புனித உரோமானியப் பேரரசர்களின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்ததுடன் தனித்துவமாக செயற்பட்டார்கள். ஜேர்மனிய பிரதேச இளவரசர்களுக்கும் புனித உரோமப் பேரரசுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் மதச்சீர்திருத்தத்திற்கு காரணமாகியது.
அறிவுக் காரணங்கள்
சமயசீர்திருத்தமானது ஏற்பட்டமைக்கான காரணங்களுள் அறிவுக் காரணங்களும் முக்கியமானவையாகும். மறுமலர்ச்சியின் தாக்கத்தினால் மக்களிடத்தில் பகுத்தறிவுவாத சிந்தனைகள் ஏற்பட்டது. மக்கள் சிந்திக்கவும் ஆராய்ந்து பார்க்கவும் செய்தனர். பாப்பரசரின் கருத்துக்களும், ஆணைகளும் மக்களால் ஆராயப்பட்டன. ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்கள் ஒதுக்கப்பட்டது.
இலத்தீன் மொழியில் எழுதப்பட்ட வேதாகமத்தை ஜோன் வைக்ளிப் ஆங்கிலத்திற்கும், மார்ட்டின் லூதரால் ஜேர்மன் மொழிக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. அத்தோடு மறுமலர்ச்சியால் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் வேதாகமத்தின் பிரதிகள் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் வேதாகமத்தின் பல பிரதிகள் மக்களை சென்றடைந்தது. இதனால் திருச்சபையின் நடைமுறைக்கும் வேதாகம கருத்துக்கும் இடையில் வேறுபாடு இருப்பதை உணர்ந்து திருச்சபையை திருத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர்.
ஜேர்மனியில் மதச் சீர்திருத்த இயக்கம்
உரோமன் கத்தோலிக்க சபைக்கு எதிராக புரட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம் முதன் முதலில் ஜேர்மனியில் தோற்றம் பெற்றது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
தேசியநாடுகள் எழுச்சி பெற்ற காலத்தில் ஜேர்மனியானது பல சிற்றரகளாகப் பிரிந்து காணப்பட்டது. ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஒற்றுமைப்பட்டு பலம் அடைந்து தேசிய அரசுகள் தோன்றிய போதிலும் ஜேர்மனியில் அவ்வாறான வளர்ச்சி ஏற்படவில்லை. ஜேர்மனியின் இந்த அரசியல் கேவல நிலைக்கு காரணம் சமய மேலாதிக்கமே காரணமென்று அதனை உடைத்தெறிய அவர்கள் திடம் கொண்டனர்.
ஜேர்மனியின் பெருந்தொகையான பணம் உரோமிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஜேர்மனியிலே பெருந்தொகையான மக்கள் காணப்பட்டமையினால் அந்நாட்டின் பெருமளவிலான பணத்தினை சமய ரீதியாக அறவிட்டு அதனை உரோமுக்கு கொண்டு சென்று குருமார் தங்களுடைய ஆடம்பர செயற்பாட்டிற்கு ஈடுபடுத்தியது கண்டு ஜேர்மனிய மக்கள் கொதிப்படைந்தனர். இதனால் திருச்சபையினை சீர்படுத்த வேண்டும் என ஜேர்மனியர்கள் திடம் கொண்டனர்.
ஜேர்மனியில் சமயசீர்திருத்த இயகக்கமும் மாட்டின்லூதரின் பங்களிப்பும்
ஐரோப்பிய சமயசீர்திருத்தவாதிகளில் முக்கிய இடம் பெறுபவராகவும், தனக்கென ஒரு தனியான இடத்தினை வகுத்துக்கொண்டு புதியதொரு சமயப்பிரிவை ஆரம்பித்து கத்தோலிக்க திருச்சபையின் குறைபாடுகளை களைந்தவராகவும் மாட்டின் லூதர் காணப்படுகின்றார்.
கி.பி 1483 நவம்பர் 10 இல் ஜேர்மனியில் உள்ள ஐசல்பெனில் என்ற பகுதியில் வாழ்ந்த எளிய குடும்பமொன்றில் மாட்டின் லூதர் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சுரங்கத் தொழிலாளி. லூதர் சிறிய வயதிலிருந்தே வறுமையால் பாதிக்கப்பட்டார். பல மூடப்பழக்கவழக்கங்கள் பற்றியும் அறிந்திருந்தார். ஜேர்மனியில் எர்வட் பல்கலைகழகத்தில் சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். தொடர்ந்து விற்றன்பேர்க் பல்கலைக்கழகத்;தில் சமய இறையியல் பேராசிரியராக நியமனம் பெற்றார். விவிலிய வேதத்தை நன்கு கற்றார். வேதாகமம் தொடர்பான விரிவான கல்வியே லூதரின் பாடப்பரப்பாகும். பேராசிரியராக இருந்த காலத்தில் விவிலிய நூலினை மொழிபெயர்ப்பதிலும் மதம் சம்பந்தமான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். கி.பி 1511 அளவில் உரோமுக்கு சென்றார் அங்கு அப்போது காணப்பட்ட சமயநிலைமை அவருக்கு திருப்தியை தரவில்லை. அங்கிருந்த குருமார்களின் ஆடம்பர வாழ்க்கையினைக் கண்ணுற்றார். அச் சமயத்தில் பத்தாம் லியோ என்பவர் அங்கே பாப்பாண்டவராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விற்றன் பேர்க்கில் தமது சமயகல்வி சேவை மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றார். தன்னுடய சந்தேகங்களை மாணவர்களுக்கு கூறினார். நம்பிக்கையின் மூலமே கடவுளை அடைய முடியும் எனவும்; ஆன்மீக வாழ்விற்கு குருமார் இடைத் தரகராக நிற்பது தவறு எனவும் பாதிரிமார்களின் உல்லாச வாழ்வு செயற்பாட்டினையும் கண்டனம் செய்தார். திருச்சபையின் படிப்பினைகள் தொடர்பாக அவர் வினாக்கள் எழுப்பினார். பிறப்பிலேயே பாவம் உடைய மனிதன் மீட்பு பெறுவது எவ்வாறு?, மனிதன் மீட்படைய ஒரே வழி திருச்சபைதானா? இவையே இவர் எழுப்பிய வினாக்களாகும்.
1517 ஆம் ஆண்டு ரெட்செல் எனும் குரு பாப்பரசர் 10ம் லியோவின் கட்டளைப்படி சென் பீற்றர் தேவாலய புணரமைப்பு நிதிக்காக பாவமன்னிப்பு பத்திரம் விற்க வந்தபோது லூதர் அதனை எதிர்த்தார். கடவுள் மட்டுமே பாவங்களை மன்னிக்க வல்லவர் அதை விடுத்து பாப்பரசருக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் இல்லை எனவும் பாப்பரசரின் மன்னிப்பு கிறிஸ்துவுக்கு ஊறு விளைவிக்கும் செயல் எனவும் பாவமன்னிப்பு பத்திரம் என்பது ஏழைகளையும் ஏமாளிகளையும் சுரண்ட இடம் பெறும் செயல் எனவும் கண்டனம் செய்தார். பாவமன்னிப்பை விமர்சித்து அதற்கு எதிராக 95 நியாயங்களை இலத்தின் மொழியிலே எழுதி 1518 அக்டோபர் மாதம் 31 ஆந் திகதி விற்றன்பேர்க் ஆலய கதவில் ஒட்டினார். இவ் வினாக்கள் ஜேர்மனிய மொழியிலே மொழி பெயர்க்கப்பட்டு உரோமப் பேரரசு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. இவரால் எழுதப்பட்ட “கத்தோலிக்கரின் சுதந்திரம்” என்ற நூல் பிரசித்தி பெற்றது. இது பாப்பரசருக்கு சவாலாக அமைந்தது. இதனால் பாப்பரசர் 10ம் லியோ லூதரை திருச்சபையில் இருந்து வெளியேற்ற அச்சுறுத்தும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பினார் லூதர் இக் கடிதத்தை கண்டனம் செய்து பகிரங்க இடம் ஒன்றிலே தீ இட்டு எறித்தார். ஜேர்மனி எங்கும் லூதரின் கருத்து செல்வாக்கு பெற்றது. பல இலட்சம் மக்கள் லூதருடன் அணி திரண்டனர். இந்நிலையில் பாப்பரசரது ஆணைப்படி கி.பி 1520 பேரரசன் 5ம் சாள்ஸ் ஜேர்மன் சிற்றரசர்கள் முன்னிலையில் லூதரை அழைத்து விசாரித்தார். அச்சபையில் தன் செயல்கள் சரியானவையே என லூதர் வாதிட்டார். ஜேர்மனிய சிற்றரசர்களும் லூதருக்கு ஆதரவு வழங்கி இருந்ததால் சட்டத்தில் காப்பிழந்தவர் என்ற அறிவிப்பை விடுப்பதை தவிர லூதரின் மீது வேறு எந்த நடவடிக்கைகளையும் 5ம் சாள்சினால் மேற்கொள்ள முடியவில்லை.
திருச்சபையில் இருந்து நீக்கப்பட்ட லூதர் கி.பி 1522 ஆம் ஆண்டு திருச்சபை ஒன்றை நிறுவினார். தன்னுடைய கொள்கைகள் கோட்பாடுகளை அதிலே செயற்படுத்தினார். பல இலட்சம் மக்கள் அதில் இணைய அதுவே புரட்டஸ்தாந்து சமயமாக உருவெடுத்தது. ஞானஸ்தானம், இறுதி இராப்போசனம் தவிர்ந்த ஏனைய சடங்குகள் யாவும் கைவிடப்பட்டது. குருமார் திருமணம் செய்யலாம் எனவும், ஒழுக்க நெறியில் தவறக் கூடாது எனவும், திருச்சபை அரசிற்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது.
இக் காலப்பகுதியில் லூதரின் செல்வாக்கு பல பகுதிகளிலும் முன்னேற்றம் கண்ட வந்தது. இவரது கொள்கையை பின்பற்றியவர்கள் வன்முறைகளில் இறங்கினர். வரிச்சுமையால் பாதிக்கப்பட்டு கீழ் மட்டத்தில் இருந்த மக்கள் திருச்சபையிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய முற்பட்டனர். இதனால் கோபமடைந்த பேரரசர் 5ம் சாள்ஸ் மோசமான முறையில் கிளர்ச்சிகளை அடக்கினார்.
1526 இல் ஜேர்மானிய அரசர்களால் சமயப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு இளவரசரும் தமக்கு விருப்பமான சமயத்தை பின்பற்றலாம் என முடிவானது. எனினும் சமய ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் 1529 இல் நடைபெற்ற “ஸ்பியர்சபையில்” 5ம் சாள்ஸ் இத் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. இதனால் ஜேர்மனிய இளவரசர்கள் பேரரசருடன் முரண்பட்டு உள்நாட்டு போருக்கான சூழலை ஏற்படுத்தினர். 1530 இல் ஒக்ஸ்பேர்க் இல் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்களை பின்பற்றுவோருக்கிடையில் ஒரு சமாதானத்த ஏற்படுத்த 5ம் சாள்ஸ் முனந்தார். ஆயினும் அது வெற்றி பெறவில்லை. புரட்டஸ்தாந்து இளவரசர்கள் ஸ்க்மால்ட் சங்கத்தை உருவாக்கினர். 1546 - 1552 காலப்பகுதியில் உள்நாட்டுப் போர்கள் நடைபெற்றன. போரின ஆரம்பத்திலேயே 1546 இல் மாட்டின் லூதர் இறந்தார். 1552 இல் செய்து கொள்ளப்பட்ட பஸ்ஸாவ் உடன்பாட்டின் மூலம் போர் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து 1555 இல் ஒக்ஸ்பேர்க் சமாதானம் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இவ் உடன்பாட்டின் படி,
சிற்றரசுகள் தாம் கைப்பற்றிய பிரதேசங்களை வைத்துக் கொள்ளாலாம்.
ஜேர்மனிய சிற்றரசுகள் தாங்கள் விரும்பிய சமயத்தை பின்பற்ற முடியும். இதனால் வடக்கு ஜேர்மனியில் லூதரின் கோட்பாடுகள் செல்வாக்கு பெற்றுக் கொள்ள தென் ஜேர்மனியில் கத்தோலிக்க சமயத்தின் பலம் அதிகரித்து காணப்பட்டது.
எனினும் இவ் உடன்படிக்கையில் கல்வீனியக் கோட்பாடுகள், சுவிங்கிலயக் கொட்பாடுகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே இவ் உடன்படிக்கை எல்லோருக்கும் திருப்தியை தரவில்லை என்றே கூறலாம். இத்தகைய நிலைமை படிப்படியாக மோசமாகி முப்பதாண்டுப் போரினை வரவழைத்தது.
இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம்
இங்கிலாந்தில் சமய சீர்திருத்தம் தியூடர் வம்சத்தைச் சேர்ந்த 8ம் ஹென்றியின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. 8ம் ஹென்றி அரியணை ஏறிய போது அவருக்கு வயது பதினெட்டு. இவர் ஒரு கத்தோலிக்கர். இவர் லூதரின் கருத்துக்களை கடுமையாக எதிர்த்ததுடன் தன் மதத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இதனால் “நம்பிக்கையின் காவலன்” என்ற பட்டத்தை 10ம் லியோ அவனுக்கு வழங்கினார். ஆயினும் இவர் மறுமணம் செய்ய முற்பட்ட போது மன்னனுக்கும் பாப்பாண்டவருக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. ஹென்றியின் சகோதரர் மரணித்தும் அவரது மனைவியான கேத்தரின் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்து விடவே. தன் சகோதரனின் மனைவியை திருமணம் செய்து கொண்டதால்தான் தனக்கு இந்நிலை ஏற்பட்டதாக கருதி அவரை மணவிலக்கு செய்து ஆன்பொலின் என்ற பெண்ணை மறுமணம் செய்ய அனுமதி கேட்டார். இதற்கு அப்போது பாப்பரசராக இருந்த 7ம் கிளர்மென்ற் அனுமதி வழங்க மறுத்தார். ஆத்திரமடைந்த ஹென்றி அன்னேற்றஸ் என்ற சட்டத்தை இயற்றி அவருக்கு கிடைக்க வேண்டிய வருவாயை நிறுத்தினார். 1533இல் ஆன் பொலினை ஹென்றி திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவரே முதலாம் எலிசபெத். இவரது மறுமணத்தை செல்லாது என பாப்பாண்டவரால் அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர் சமய விலக்கும் செய்யப்பட்டார். பதிலுக்கு பாப்பரசரை கட்டுப்படுத்த ஹென்றியும் பல சட்டங்களை இயற்றினார். 1533 இல் மன்னனால் முறைப்பாடு செய்கின்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டு திருமணம், திருமண விலக்கு ஆகிய தொடர்பாக பாப்பரசருக்கு மேன்முறையீடு செய்வது தடுக்கப்பட்டது. 1534இல் உயராண்மைச் சட்டத்தை பிறப்பித்து இங்கிலாந்து திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிய திருச்சபை ஏற்படுத்தப்பட்டது. இத் திருச்சபை ஆங்கிலத் திருச்சபை எனப்பட்டது. பின்னர் ஆன்பொலின் நடத்தையில் குறைகூறி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மீண்டும் மறுமணம் செய்து கொண்டான் அதன் மூலம் 6ம் எட்வேர்ட் மகனாகப் பிறந்தார். 1539 இவரால் விவிலிய நூல் ஆங்கில மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
• ஆறாம் எட்வேட்
எட்வேர்ட் அரியணை ஏறிய போது மிகவும் சிறுவனாக இருந்தார். இவர் ஒரு புரட்டஸ்தாந்து ஆதரவாளர். இவருடைய காலத்திலே புரட்டஸ்தாந்து மதம் வளர்ச்சி கண்டது. இவர் கத்தோலிக்க சமயத்திலிருந்து மக்களை விடுவிக்க எண்ணினார். ஒற்றுமை வழிபாட்டு சட்டத்தினை இயற்றி அதன் ஊடாக வழிபாட்டின் பொருட்டு வெளியிடப்பட்ட நூல்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனக் கட்டளை இட்டார். இவரின் 42 கோட்பாடுகள் மூலம் இங்கிலாந்து திருச்சபையின் கொள்கைகள் விளக்கப்பட்டன.
• மேரி
எட்வட்டின் மரணத்தை தொடர்ந்து மேரியின் ஆட்சி ஆரம்பமானது. இவருடைய காலத்தில் கத்தோலிக்க சமயம் புதுப்பொலிவு பெற்றது. இவள் லூதரின் கருத்துக்களை தீவிரமாக எதிர்த்ததோடு கத்தோலிக்க சமயத்திற்கு எதிரானவர்கள் இவரால் தண்டனை பெற்றனர். தோமஸ் கிறேன்மேர் உள்ளிட்ட புரட்டஸ்தாந்து தலைவர்கள் என்று கூறப்பட்ட 300 பேரை தூணிலே கட்டிவைத்து தீயிட்டு கொழுத்தினால். ஸ்பெயின் அரசர் 2ம் பிலிப்பினை இவள் மணந்து கொண்டாள். இவருடைய மோசமான செயற்பாடுகள் காரணமாக இவள் “இரத்த மேரி” என அழைக்கப்பட்டார்.
• முதலாம் எலிசபெத்
மேரி மறைந்ததும் முதலாம் எலிசபெத் சிம்மாசனம் ஏறினார். இவர் ஒரு புரட்டஸ்தாந்து ஆதரவாளர். இதனால் இவர் காலத்தில் இம் மதம் உன்னத நிலையினை அடைந்தது. எல்லா ஆலயங்களிலும் புரட்டஸ்தாந்து சமய அடிப்படையில் பிராத்தனை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே இங்கிலாந்தில் ஆட்சியிலிருந்த அரசர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்கள் அங்கே செல்வாக்குடன் திகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் மதச்சீர்திருத்த இயக்கம்
ஜேர்மனியில் மாட்டின் லூதரினால் பரப்பப்பட்ட சமயச் சீர்திருத்தக் கருத்துக்கள் பிரான்சிலும் செல்வாக்கு பெற்றுக் கொண்டது. தொடக்கத்தில் இந்நாடு அதிகளவு கத்தேலிக்கர்களைக் கொண்ட நாடாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் கல்வீனிய சமயம் இந்நாட்டில் படிப்படியாக வேரூன்ற ஆரம்பித்தது. உயர் வகுப்பு மக்கள், நகரத்து மக்கள் போன்றவர்கள் இச் சயமத்தின் செல்வாக்குக்கு உட்பட்டனர். இவர்கள் ஹியூநோட்ஸ் எனப்பட்டனர். இந்நாட்டிலேதான் முதன் முதலில் கல்வீனியம் பரவியது. கல்வின் இந்நாட்டவராக இருந்தமையினாலும் இம் மதம் சார்ந்த நூல்கள் அதிகளவில் பிரான்சிய மொழியில் கிடைத்தமையாலும் இந்நாட்டில் இதன் செல்வாக்கு அதிகரித்திருந்தது. “ஜக்குவிஸ் லாபெயார்” என்பவரே முதன் முதலில் சீர்திருத்தக் கருத்துக்களை பிரான்சில் பரப்பியவர். பிரான்சிய அரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஆரம்பகாலத்தில் புரட்டஸ்தாந்து சமயத்திற்கு ஆதரவு வழங்கினான் இதனை விரும்பாத பாப்பரசர் பத்தாம் லியோ பிரான்ஸ் மீது படயெடுக்கும்படி ஐந்தாம் சாள்சை கூறவே 1525 இல் நடைபெற்ற பவேரியாப் போரின் போது பிரான்ஸிஸ் ஐந்தாம் சாள்சிடம் கைதியாகப் பிடிபட்டான். அதன் பின் பாப்பரசரின் ஆதரவைப் பெற்ற 2ம் ஹென்றியை பிரான்சிக்கு அரசனாக்கினான். இவன் கத்தோலிக்கத்தில் இருந்த பற்றினால் ஹியூநோட்ஸ்களை அழிப்பதிலேயே முனைப்பாக ஈடுபட்டான்.
1559 இல் பிரான்சிய அரசர் 2ம் ஹென்றி மறைந்ததும் தாயார் கேத்தரின் டி மெடிசி ஆட்சியாளரானார். இவருடைய ஆட்சி கொடுங்கோன்மை ஆட்சியாக இருந்ததால் பிரபுக்கள் சிலர் நாவார் அரசையும் மற்றவர்கள் கைஸ் குடும்பத்தையும் பின்பற்றினர். இவர்களில் கைஸ் பிரிவினரே கத்தோலிக்கர்களாக காணப்பட்டனர்.
1562இல் ஹைஸ் பிரபு தனது படையுடன் வாசியைக் கடந்து செல்லும் போது அங்கே வழிபாடு செய்வதற்காக கூடியிருந்த கல்வீனிய சமயத்தைச் சார்ந்தவர்களைக் கொலை செய்தார். இது வாசிப் படுகொலை என அழைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கே உள்நாட்டுப்போர் ஆரம்பமானது. இப் போரில் கத்தோலிக்கர்களின் வெற்றி தமக்கு ஆபத்தாக அமையும் எனக் கருதிய கேத்தரின் புரட்டஸ்தாந்துக்களின் வெற்றியை நாடினார். 1527 இல் சென்ஹேர்மெயின் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதன் படி சமய சுதந்திரம் வழங்கப்பட்ட போதும் இவ் உடன்பாடு இரு பகுதியினருக்கும் திருப்தியை ஏற்படுத்தவில்லை.
தொடர்ந்து ஒன்பதாம் சார்ள்சின் ஆட்சியின் போது 1572 ஓகஸ்ட் 24 இல் புனித பார்த்தலோமியஸ் நாளன்று ஏறத்தாழ பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்து மக்கள் கொலை செய்யப்பட்டனர். இது “பார்த்தலோமியஸ் படுகொலை” எனப்படுகின்றது. இந்நிகழ்ச்சியால் போர் மீண்டும் ஆரம்பமானது மூன்றாம் ஹென்றியின் காலத்திலும் இப்போர் தொடர்ந்தது.
ஹென்றி அரியணை ஏறுவதனைத் தடுக்கின்ற நோக்குடன் ஹென்றி மீது புரட்டஸ்தாந்து படைகள் போர் தொடுத்தன. போரில் மூன்றாம் ஹென்றி கொலை செய்யப்படவே நான்காம் ஹென்றி ஆட்சிக்கு வந்தார். இவர் புரட்டஸ்தாந்தவராக இருந்த போதும் மக்களின் ஆதரவினைப் பெறும் பொருட்டு கத்தோலிக்க சமயத்தை தழுவினார். இவர் அரியணை ஏறுவதற்கு இங்கிலாந்து அரசின் ஆதரவும் பக்கபலமாக இருந்தது. இவரை எதிர்த்து ஸ்பானியர்கள் போர் செய்தனர். 1598இல் வெர்ஹாஸ் என்ற இடத்தில் ஹென்றி ஸ்பெயின் அரசுடன் உடன்பாடு ஒன்றை செய்து கொண்டார். இதேயாண்டு நான்றெஸ் நல் ஆணையைப் பிறப்பித்து சமய உரிமைகளை இவர் புரட்டஸ்தாந்து மக்களுக்கு வழங்கினார்.
சுவிட்சலாந்தில் மதச்சீர்திருத்த இயக்கம்
சுவிட்சலாந்தில் சமயப் புரட்சியினைத் தொடங்கி வைத்தவர் உல்றிச் சுவிங்கிலி என்பவராவார். இவரினைத் தொடர்ந்து இப் பணியினை மேற்கொண்டவர் ஜோன் கல்வின் என்பவராவார்.
• உல்றிச் சுவிங்கிலி
சுவிட்சலாந்திலே உயரிய பிரபுக்கள் குடும்பத்திலே பிறந்த இவர் சிறு வயதிலேயே கத்தோலிக்க சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்தமையால் கோஷன், வியன்னா, பேர்ன் முதலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று கத்தோலிக்க சமயத்தில் பட்டம் பெற்றார். பாதிரியாராக விரும்பிய இவர் தாய் தந்தையருடன் விருப்பத்துடன் சமயக் குருவாக சமூகத்தில் சேவை செய்ய முன்வந்தார்.
இவரது செயற்பாடுகள் காரணமாக இவர் மீது நம்பிக்கை கொண்ட போப்பாண்டவர் சுவிற்சலாந்தில் உள்ள சூரிச் நகரில் பிரதம மதகுருவாக இவரை நியமித்தார். இவர் மதகுருவாக இருந்த சமயம் தனக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். போப்பாண்டவரின் அதிகாரங்கள் தவறானவை என சுட்டிக்காட்டிய இவர் அரசனின் அதிகாரங்களில் போப்பாண்டவர் தலையிடக் கூடாது என வலியுறுத்தினார். விவிலியம் அல்லாத எந்த நூலும் கிறிஸ்தவ நூல் கிடையாது என்றார். பல இடங்களில் கத்தோலிக்க குருமார்களின் ஊழல்கள் பற்றியும் திருச்சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் எடுத்துக் காட்டினார்.
சூரிச் நகரில் பாதிரியாராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த போது பாப்பாண்டவரின் பிரதிநிதியாகப் பாவமன்னிப்பு சீட்டுக்களை விற்பனை செய்ய வந்த சாம்சனை எதிர்த்தார். இவருடைய நடவடிக்கைகளுக்கு சூரிச் மக்களின் ஆதரவு இருந்தது. திருச்சபையின் கட்டடங்கள் இவரின் ஆதரவாளர்களால் தகர்க்கப்பட்டன, மடங்கள் மூடப்பட்டன. இவர் மதகுருமார்கள் ஒழுக்கமும் நற்பண்பும் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என குறிப்பிட்டதோடு, திருமணம் புரிந்து நற்பண்புகளுடன் வழிகாட்டிகளாக வாழவேண்டும் என குறிப்பிட்டார். குறிப்பிட்டதோடு மட்டுமல்லாது துறவறத்தில் இருந்து விலகி திருமணமும் செய்து கொண்டார். ஏழைகள் நோயாளிகள் நாதியற்றவர்கள் முதலியோருக்கு உதவுவதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம் எனவும் வலியுறுத்தினார்.
இக்காலத்தில் லூதரின் ஆதரவாளர்களையும் சுவிங்கிலியின் ஆதரவாளர்களையும் இணைக்கின்ற முயற்சிகள் நடைபெற்றன. எனினும் இருவரது கொள்கைகளும் வேறுபட்டு காணப்பட்டன. ஆரம்ப காலங்களில் இருவரது இயக்கங்களும் ஒத்துப் போகின்ற நிலையில் காணப்பட்ட போதும் திருச்சபையின் ஆட்சி தொடர்பான கட்டுப்பாடுகளை சுவிங்கிலி ஏற்றுக்கொண்ட போது இருவருக்குமிடையிலே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இவர் லூதரால் உண்மையின் எதிரியெனவும் பழிக்கப்பட்டார்.
இருவரிடையிலும் திருவிருந்தைப் பற்றிய எண்ணந் தொடர்பாகவும் முரண்பாடுகள் காணப்பட்டன. லூதர் புனிதப்பொருள் மாறுகின்ற கொள்கையை நிராகரித்தார் அதே நேரம் மாறாக் கொள்கையை ஆதரித்தார். ஆனால் சுவிங்கிலியோ இரண்டு கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுவிங்கிலியின் கோட்பாடுகள் தனியே வரையறை செய்யப்பட்டன. இவருடைய கோட்பாடுகளில் விவிலிய நூலுக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்தது. மனித உரிமைக் கோட்பாடுகள், சமஉரிமைக் கோட்பாடுகள் பற்றியும் அதில் கூறப்பட்டிருந்தது.
அக்காலப்பகுதியில் தீவிர கத்தோலிக்கர்கள் பலர் இவரது கருத்துக்களை எதிர்த்தனர். சுவிங்கிலியின் எழுச்சியில் நாடு இரண்டாக பிளவுபட்டுக் காணப்பட்டது. சுவிங்ளிசத்தாருக்கும் கத்தோலிக்கருக்கும் இடையில் 1531 இல் கேப்பல் என்ற இடத்தில் நடைபெற்ற சண்டையில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாலும் சுவிற்சலாந்திலே சுவிங்கிலச் சிந்தனை வலுப்பெற்றது.
• ஜோன்கல்வின்
பிரான்சின் வடபகுதியில் உள்ள பிக்கார்டி மாநிலத்தின் நோயன் என்ற இடத்தில் 1509 இல் நடுத்தர குடும்பத்தில் கல்வின் பிறந்தார். இளவயதிலேயே சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக பாரிஸ் சென்ற கல்வின் அங்கே, சமயம், இலக்கியம் போன்ற பாடங்களைக் பயின்றார். தொடர்ந்து 1525 இல் ஓர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியை மேற்கொண்டார். இச்சயமத்தில் லூதரின் புரட்சிக் கருத்துக்கள் இவரைக் கவர்ந்தன 1533 ஆம் ஆண்டு புரட்டஸ்தாந்து சமயத்திற்கு மாறினார். இவர் பிறந்த நோயன் என்ற ஊரில் கத்தோலிக்க சமயக் குறைபாடுகளை சுட்டிக்காட்டத் தொடங்கினார். இதனால் அங்கு மக்கள் புரட்டஸ்தாந்து சமய நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். குறிப்பாக மதகுருமாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினார். அவ்வேளையில் போப்பாண்டவரின் அழுத்தம் காரணமாக பிரான்ஸ் மன்னன் பிரான்சிஸ் இவரை கைது செய்து சிறையில் அடைக்க முற்பட்டான். இவ் வேளையில் கல்வின் 1536 இல் பிரான்சில் இருந்து தப்பித்து சுவிற்சலாந்து சென்றார். அவ்வேளை அங்கு சமய சீர்திருத்த இயக்கத்திற்கு தலைமை தாங்க யாருமில்லாத நிலை காணப்பட்டது. இவரது வருகையால் சுவிற்சலாந்தில் சமய சீர்திருத்த இயக்கம் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. ஜெனிவாவில் இவர் முதன்முதலாக பிரஸ்பீரிடிய அமைப்பினை ஏற்படுத்தினார். இவர் சமயம் தொடர்பான அதிகாரங்களை முதியவர்களிடம் ஒப்படைப்பதன் மூலமே சிறந்த கிறிஸ்தவர்களை உருவாக்க முடியும் என்றார். மாட்டின் லூதருடைய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சமயசீர்திருத்த கருத்துக்களை இவர் முன்வைத்தார். ஆனால் பின்னாளில் இவரது கருத்துக்கள் மார்ட்டின் லூதருடைய கருத்துக்களில் இருந்து மாறுபட்டவையாக காணப்பட்டமையால் இவருடய சமய சிந்தனைகள் கல்வினிஸம் என அழைக்கப்பட்டன.
கல்வின் “கிறிஸ்தவ மத ஸ்தாபகம்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் கத்தோலிக்க திருச்சபையினது ஊழல்களைச் சுட்டிக்காட்டினார் மதகுருமார்கள், கர்தினால்கள், போப்பாண்டவர் முதலானோரின் ஆடம்பரமான வாழ்க்கை, சொத்து சேகரித்தல் முதலிய நடவடிக்கைகளை தவறு என சுட்டிக் காட்டினார். இவரின் போதனைகளில் ஒழுங்குமுறை, பூரணப்படுத்தப்பட்ட ஜனநாயகத் தன்மை என்பன காணப்பட்டன. தூயஆவி, பரிசுத்த ஆவி என்ற கோட்பாடுகள முதன்முதலில் முன்வைத்து பிரச்சாரங்களை முன்னெடுத்தார். “பரிசுத்த கிறிஸ்தவ வேதத்தனால் கடவுள் அறியப்படுகின்றார், பரிசுத்த ஆத்மாவினுடைய சக்தியால் நாங்கள் விடுவிக்கப்படுகின்றோம், பரிசுத்த ஆவியானது எங்களை கிறிஸ்துவுடன் இணைக்கின்றது” போன்ற கருத்துக்கள் இவரின் போதனைகளில் இடம் பெற்றன. இவர் சமயக் குருமாhர் அரசியலில் ஈடுபடுவதையும், அரசர்கள் சமய விடயங்களில் தலையிடுவதையும் கண்டித்தார். அத்துடன் யேசுவையோ, புனிதர்களையோ வழிபடுவதை விரும்பாத இவர் அவர்களது தூய ஆவியை வழிபடுமாறு வலியுறுத்தினார். “யேசு கிறிஸ்து ஒரு மனிதனே ஒழிய இவர் கடவுள் அல்ல அவரது ஆன்மாவே தூய்மையானது ஆதலால் அவரது தூய ஆவியை வழிபட வேண்டும்” என்றார். உருவம் வைத்து வழிபடுதல் தவறு என்றார்.
கல்வீனியம் பிற நாடுகளிலும் பரவியது. பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா, ஸ்கொட்லாந்திலும் இதன் பரவல் தொடர்ந்நதது. இந் நாடுகளில் இருந்து பலர் ஜெனீவா வந்தடைந்து இவரின் கொள்கைகள் பற்றி தெரிந்து கொண்டனர். இங்கிலாந்தின் பியூரிடன்கள், ஸ்கொட்லாந்து பிரஸ்பிரீடியன், பிரான்ஸ் ஹியுநோட்ஸ் என்பவர்கள் கல்வீனிய சமயத்தைச் சார்ந்தவர்களாக காணப்பட்டனர். இவருடைய கொள்கைகள் ஓரளவுக்கு இறுக்கமானவையாக காணப்பட்டன. கத்தோலிக்க சமயத்தில் காணப்பட்ட மாறுபாட்டுக் கோட்பாட்டினை இவர் எதிர்த்தார். தேவைக் கோட்பாட்டின் அடிப்படையிலே இம் மதம் இணக்கப்பட்டிருந்தது. இக் கோட்பாட்டிற்கு முறையான வரைவிலக்கத்தினை கொடுத்த இவர் திருச்சபையானது அரசியலில் தலையிடக் கூடாது என்றார். சுவிற்சலாந்தில் சுவிங்கிலி, கல்வின் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி வந்த திருச்சபைகள் பிற்பட்ட காலங்களில் தமக்குள் உடன்பாடுகளை செய்து கொண்டு இணைந்து ஓர் புரட்டஸ்தாந்து சபையாகச் செயற்பட்டன.
ஸ்கொட்லாந்தில் மதச்சீர்திருத்த இயக்கம்
பதினாறாம் நூற்றாண்டிலே மதச்சீர்திருத்த இயக்கம் ஸ்கொட்லாந்திலும் ஏற்பட்டது. இந்நாட்டில் இவ்வியக்கம் கல்வீனியக் கோட்பாட்டினப்படையிலே தான் வளர்ச்சி கண்டது. இந்த நாட்டிலும் சமயங்களுக்கிடையிலே ஏற்பட்ட போட்டியின் காரணமாக பலர் தண்டனைகளை பெற்றுக் கொண்டனர். ஐந்தாம் ஜேம்ஸின் காலத்தில் தான் இந் நாட்டில் மதச்சீர்திருத்த இயக்கம் முதன்மை பெற்றது. 1545 மன்னரின் இறப்புடன் மகள் மேரியிடம் ஆட்சிப் பொறுப்பு சென்றடைந்தது. மேலும் இவருடைய காலத்திலும் சமயச் சீர்திருத்த இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. விவிலிய நூல் ஸ்கொட்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
• இராஸ்மஸ்
இராஸ்மஸ் ஒல்லாந்து நாட்டினை பிறப்பிடமாகக் கொண்டவர். இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற பல நாடுகளில் வாழ்ந்தவர். இவரால் திருச்சபையின் ஊழல்களை எதிர்த்து பல நுஸல்கள் வெளியிடப்பட்டன. இம் முயற்சியினூடாக திருச்சபையில் காணப்பட்ட சீர்கேடுகள நீக்குவதிலும், குருமார்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும் முனைப்புடன் ஈடுபட்டார்.
இவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க சிலகாலம் மடத்தில் வாழந்து வந்தார். அங்கே தான் வாழ்ந்த காலத்தில் குருமார்களின் நடவடிக்கைகளினை அவதானித்தார். அவர்களிடம் சமய உணர்வோ அதனை பரப்ப வேண்டுமென்ற எண்ணமோ இருக்கவில்லையென்பதை உணர்ந்து கொண்டார். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தனர். நிதிசேகரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது. இவரால் கிறிஸ்துவின் போதனைகள் புதிய ஏற்பாடுகளின் படி கிரேக்க இலத்தீன் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. மேலும் இவர் “மூடர்களின் பெருமை” என்ற நூலினை எழுதி அதன் மூலம் குருமார்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தினார்.
• ஜோன்நொக்ஸ்
மிக இளவயதிலேயே கத்தோலிக்க சமயத்தில் அக்கறை கொண்ட நொக்ஸ் தான் கொண்டிருந்த கத்தோலிக்க சமயத்தின் ஈடுபாட்டினால் மதகுருவானர். ஆனால் பின்நாளில் திருச்சபைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார். 1546 இன் பின்பாக இவர் வெளிப்படையாக திருச்சபையினைத் தாக்கத் தொடங்கினார். இதனால் ஒல்லாந்திலிருந்து விரட்டப்பட்டார். தொடர்ந்து இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளில் தனது வாழ்நாளினைக் கழித்தார்.
இங்கிலாந்திலே ஆறாம் எட்வேர்ட்டின் மதகுருவாக நியமிக்கப்பட்ட போது அங்கே புரட்டஸ்தாந்து சமயத்தின் கொள்கைகளை இங்கிலாந்தின் திருச்சபையில் புகுத்த முற்பட்டார். கல்வினுடன் இவர் தொடர்புகள் கொண்டிருந்தார். இவரின் திருச்சபையின் மாதிரியினைக் கொண்டே 1560 இல் பிரஸ்பிரீடியத் திருச்சபையை கல்வின் ஏற்படுத்தினார்.
மதச்சீர்திருத்தத்தின் விளைவுகள்
ஐரோப்பிய வரலாற்றிலே இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுவது மதச்சீர்திருத்த இயக்கமாகும். கி.பி 15ம் நூற்றாண்டில் தோன்றிய மதச்சீர்திருத்த இயக்கத்தினால் அரசியல், பொருளாதார, கலாசார, சமய அடிப்படையில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன அவையாவன, மத்திய ஆசியாவில் உருவாகி உரோம சக்கரவர்த்திகளின் ஏற்பாட்டுடன் ஐரோப்பாவில் பரப்பப்பட்ட கிறிஸ்தவம் இது காலம் வரை உலகின் தனிப்பெரும் சமயமாக நிலை பெற்றிருந்தது. ஆனால் மதச்சீர்திருத்தம் இயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து புரட்டஸ்தாந்து பிரிவினர் தோன்றினர். இவர்கள் லூதருடய கருத்துக்களை உள்வாங்கி ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சமயப் பிரிவாக பரிணாமித்தனர். எனவே ஒன்றாக இருந்த திருச்சபை உரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து என பிளவுபட்டுக் கொண்டது.
மதச்சீர்திருத்த இயக்கம் பல சமயப் போர்களும் சமய கலவரங்களும் ஏற்பட வழிவகுத்தது. 1521 - 1525 ஆகிய ஆண்டுகளில் ஜேர்மனியில் சமய கிளர்ச்சி ஏற்பட்டது. இறுதியில் முப்பதாண்டுப்போர் ஏற்படவும் அதன் காரணமாகவும் இதனால் பெருமளவு அழிவு ஏற்படவும் காரணமானது. இதனால் ஐரோப்பிய நாடுகளும் அணிபிரிந்து கத்தோலிக்க நாடுகள், புரட்டஸ்தாந்து நாடுகள் என அவை இரண்டானது. அந்த நாடுகளில் ஏனைய சமயத்தவர்கள் மீது மோசமாக துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் சகிப்புத் தன்மை குலைந்தது.
மதச்சீர்திருத்த இயக்கத்தின் தோற்றத்தினால் பாப்பரசர் மற்றும் மதகுருமார்களின் அதகாரங்கள் குறைவடைந்தன. “சமயம் வேறு, அரசியல் வேறு” என்ற நிலை தோன்றியது. அரசியலில் மதகுருமார்கள் தலையிடுவது தவறு என சுட்டிக்காட்டப்பட்டு தவிர்க்கப்பட்டது. இதுவே பிற்காலத்தல் தேசிய அரசுகள் தோற்றம் பெறவும் வழிவகுத்தது. அத்தோடு சமயத் தலைவர்கள் அரச நிருவாகத்திற்கு கட்டுப்படும் நிலையும் தோன்றியது.
மதச்சீர்திருத்தத்தினால் புதிய சமயங்கள் தோன்றிமையால் பல்வேறு சமயச் சண்டைகள், சமயக் குழப்பங்கள் என்பன ஏற்பட்டது. பார்த்தலோமியன் படுகொலை, வாசிப்படுகொலை, முப்பதாண்டுப்போர் போன்றன ஏற்பட்டது. இதனால் பல்வேறு உயிரிழப்புக்களும், சொத்துக்களும் அழிவடைந்தன. பின்நாளில் கத்தோலிக்க சமயத்தை பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவும் எதிர்மதச் சீர்திருத்த அமைப்பு தோற்றம் பெற்றது. கத்தோலிக்க மதத்திலே இயேசுசபை, டிரன்ட்சபை, இன்சென்ட்சபை போன்ற பல்வேறு சபைகள் தோற்றம் பெற்றன.
மதச்சீர்திருத்தத்தின் போது விவிலிய வேதாகமம் திருச்சபைக் குருமாரால் தவறாக கையாளப்படுவதாக புரட்டஸ்தாந்தினால் குற்றம் சாட்டப்பட்டது. அதன் விளைவாக ஜோன் வைக்கிளிப் அதை ஆங்கிலத்திலும், லூதர் ஜேர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கவே அநேக ஐரோப்பிய மக்கள் அதை கற்க வாய்ப்பு ஏற்பட்டது. மக்களது சிந்தனைத்திறன் வளர்க்கபட்டு ஆரோக்கியமான சமூகமுறை தோன்றியது.
மதச்சீர்திருத்த விளைவுகளில் ஒன்று ஜனநாயக ஆட்சி ஏற்படவும் இது வழிவகுத்தது. திருச்சபையின் நிர்வாகம் சர்வாதிகார முறைப்படி நடைபெறுவதாகவும் பாப்பரசர் சர்வாதிகாரி போன்று செயற்படுவதாகவும் பலர் கண்டித்தனர். திருச்சபை நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் குரல் எழுப்பினர். எட்டாம் ஹென்றி பாராளுமன்றத்தின் உதவியுடன் இங்கிலாந்தில் சமயப் பொறுப்பைப் பெற்றான். இது இங்கிலாந்தில் பிற்காலத்தில் ஜனநாயக ஆட்சிமுறை ஏற்பட காரணமாகியது.
மதச்சீர்திருத்தத்தின் விளைவுகளால் கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவியது. கத்தோலிக்கருக்கும் புரட்டஸ்தாந்தினருக்கும் இடயிலான சமயப் போட்டியால் இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது சமயத்தை பரப்பினர். தம்மால் வெல்லப்பட்ட நாடுகளிலும் தமது சமயத்தை பரப்பினர். இங்கிலாந்து போன்ற நாடுகளில் கத்தோலிக்க சமயத்தை பரப்புவதற்காக மிசனறி அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. இவ் மிசனறிகள் சமயத்தை பரப்புவதை நோக்கமாக கொண்டு அவர்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் சமயத்தை பரப்பினர். இதனால் உலகின் எல்லாக் கண்டங்களிலும் கிறிஸ்தவம் பரவியது.
எனவே மேற் கூறப்பட்ட விடயங்களை தொகுத்து நோக்குகின்ற போது ஐரோப்பிய வரலாற்றிலே மதச்சீர்திருத்த இயக்கத்தின் தோற்றத்தினால் பல்வேறு விளைவுகள் தோற்றம் பெற்றமையை காணலாம்.
எதிர்மதச் சீர்திருத்தம்
புரட்டஸ்தாந்து இயக்கத்தால் கத்தோலிக்க சபை சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதனால் கத்தோலிக்க மதம் செல்வாக்கிழந்து போகத் தொடங்கியது. இதனால் இச் சவால்களுக்கு முகங்கொடுத்து கத்தோலிக்க மதத்தை பாதுகாக்கவும் கத்தோலிக்க மதத்தின் குறைபாடுகளை நீக்கி கத்தோலிக்க மதம் மீண்டும் எழுச்சியடைவதற்கு பாப்பரசர் மற்றும் திருச்சபைக் குருமாரால் ஏற்படுத்தப்பட்டதே எதிர்மத சீர்திருத்தமாகும். பாப்பரசர்களாகிய 4ம்பயஸ், 3ம்போல், 10ம்லியோ போன்றோர் இதற்கு வழிவகுத்தனர். எதிர்மத சீர்திருத்தத்தின் நோக்கங்கள் பின்வருமாறு,
1. புரட்டஸ்தாந்து எனும் இயக்கத்தால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தகர்க்கப்படல்.
2. புரட்டஸ்தாந்து மதம் பரவுவதை தடை செய்தல்.
3. சமய ஒற்றுமையை நிலைநாட்டல்.
டிரென்ற் சபை (திரிதெந்தின் பொதுசங்கம்) (1545 - 1563)
வடஇத்தாலியில் உள்ள டிரென்ற் (திரிதெந்தின்) என்ற இடத்தில் 3ம் போலின் முயற்சியால் 1545இல் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. பல தடவைகள்கூடிய இச் சங்கத்தில் அக்காலத்தில் அழிவுற்ற கத்தோலிக்க சபையின் நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதும், இழந்த அதிகாரத்தை மீளப் பெற்றுக் கொள்வதுமே இதன் நோக்கங்களாக அமைந்தன. தொடர்ந்து பலமுறை நடைபெற்ற இக் கூட்டமானது 1563இல் இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அம் முடிவுகளை அடிப்படையாக கொண்டு கத்தோலிக்க மத்தின் குறைபாடுகளை சீர் செய்வதோடு, ஏனைய சமயங்களின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதை நோக்காக கொண்டு செயற்பட்டது. இச்சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.
உண்மையான கத்தோலிக்க மதம் வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதென்றும், வேதாகமத்தை விளக்கும் உரிமை கத்தோலிக்க சபைக்கு மட்டுமே உண்டு எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மீட்படைய இறைவன் மீது விசுவாசம் கொள்வது போன்று, நற்செயல்களும் அவசியம் என்பதை வலியுறுத்தல்.
கத்தோலிக்க சபையில் பாப்பரசரின் அதிகாரமும், தலைமத்துவமும் பற்றி வலியுறுத்தல்.
ஆயர்களும், குருமார்களும் முறையே ஒரு மறைமாவட்டம், ஒரு பங்கு என்பவற்றிக்கு மேலாகப் பொறுப்பினை வகித்தல் தடைசெய்யப்படல், விவாகம் செய்தலும் தடைசெய்யப்படல்.
குருமாணவர்களை பயிற்றுவிக்கும் பொருட்டு அனைத்து மறை மாவட்டங்களிலும் குருத்துவப் பயிற்சிக் கல்லூரிகளை அமைக்க வேண்டுமென தீர்மானித்தல்.
கத்தோலிக்க மதத்திற்கு எதிராக செயற்படும் ஆயர்கள், குருக்களுக்கு தண்டனை வழங்கள்.
மரபுரீதியான இலத்தீன் வேதாகமத்தை ஏற்றுக் கொள்ளல்.
வரிசேகரித்தல், பாவமன்னிப்பு பத்திரம் விற்றல் ஆகியன உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
இன்ரெக்ஸ்
கத்தோலிக்க சமயத்தவர்கள் தமது சமயத்திற்கு முரணானது எனச் சில நூல்களை தடை செய்தனர். அவர்களால் தடைசெய்யப்பட்ட நூல்களின் அட்டவணைமொன்று தயாரிக்கப்பட்டது. கத்தோலிக்க மதத்த பாதுகாப்பதோடு கத்தோலிக்க மதத்தை சீர்படுத்துவதும் இதன் நோக்கமாக இருந்தது.
இயேசு சபை (1534)
எதிர்மத சீர்திருத்த அமைப்புக்களில் மிகவும் சிறப்பாக செயற்பட்டது இயேசு சபை ஆகும். ஸ்பானிய இனத்தவரான இக்னேசியஸ் லோயாலா என்பவரால் இது நிறுவப்பட்டது. அவரால் எழுதப்பட்ட “ஆத்ம அப்பியாசம்” என்ற நூல் இயேசு சபையினரின் கைநூலாகியது. ஸ்பெயின் நாட்டிலுள்ள உயர் குடும்பமொன்றில் பிறந்த லொயலா ஆரம்பத்தில் இராணுவத்தில் பணியாற்றினார். வடக்கு ஸ்பெயினில் நடைபெற்ற யுத்தத்தின் போது தனது காலை இழந்தார். பின் இராணுவத்தில் இருந்து வெளியேறி கத்தோலிக்க மதத்தில் கொண்ட பற்று காரணமாக பின்னாளில் பாதிரியாராக மாறி இவ்வமைப்பை தோற்றுவித்தார். இவர் இராணுவத்தில் பணியாற்றியதால் இங்கு இராணுவ ஒழுக்கம் கடைபிடிக்கபட்டது. கடுமையான விதிகள் இங்கே பின்பற்றப்பட்டது. இதன் அங்கத்தவர்கள் கத்தோலிக்க சமயத்தை பரப்பும் பொருட்டு உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர். இச் சபையினைச் சேர்ந்த சீடர்களில் ஒருவரான பிரான்சிஸ் சேவியர் என்பவர் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று சமயத்தை பரப்பினார் என்பது குறிப்பித்தக்கது. இவர் மட்டுமன்றி குவைறோஸ் சுவாமிகள், ஜோசப்வாஸ் அடிகளார், கொன்ஸல்வேஸ் அடிகளார் போன்றோரும் ஆசியாக் கண்டத்தில் மதத்தை பரப்புவதில் அரும்பணியாற்றினார்கள். போதனைகளில் ஈடுபட்ட இயேசு சபையினர் போதனை செய்வதில் தங்களை தாங்களே அர்;ப்பணித்தனர். பாடசாலைகள் பல இவர்களால் தாபிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தனர். சிலர் கல்விக்கும் சிலர் சமயப் போதனைகளுக்கும் பொறுப்பாக காணப்பட்டனர்.
இதன் அங்கத்தவர்களுக்கு அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்டதன் காரணமாக பாப்பரசர் 3ம் போல் சர்வதேச தேவாலயத்தின் புனிதர் அலுவலகத்தினை உரோமில் தாபித்தார். இதில் பாப்பாண்டவர் சபையின் அங்கத்தவர்கள் ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். இதன் அதிகாரிகளுக்கு பல மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக நூல்களை தடைசெய்தல், சந்தேக நபர்களை சிறையிலடைத்தல், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குதல் போன்ற பல அதிகாரங்கள் இவர்களிடம் வழங்கப்பட்டன.
இன்குவிஷன்
இதனை உருவாக்கியவர் இன்னேஸற் என்பவராவார். இவ்வமைப்பு கி.பி 1208 இல் நிறுவப்பட்டது. இது கடுமையான முறையிலே செயற்பட்ட ஒரு சங்கமாகும். புரட்டஸ்தாந்து மதத்தினை ஒடுக்குவதற்கு கத்தோலிக்கர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். கத்தோலிக்க சமயத்திற்கு எதிரானவர்களை சமய விரோதிகளாகக் கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டது. இம் மன்றத்திற்கு குற்றங்களை விசாரணை செய்து தண்டனை வழங்கும் அதிகாரத்தினை பாப்பரசர் மூன்றாம் போல் வழங்கினார். பாப்பரசரின் மன்ற உறுப்பினர்களில் ஆறுபேரினை நீதிபதிகளாகக் கொண்டு இம்மன்றம் செயற்பட்டது. இம் மன்றம் வழங்கிய தண்டனைகள் கொடுங்கோன்மை நிறைந்தனவாக காணப்பட்டன. பின்னர் இதன் கொடுமையான செயற்பாடுகள் குறைத்துக் கொள்ளப்பட்டன.
திருச்சபையில் காணப்பட்ட ஊழல்களை நீக்குகின்ற நோக்குடன் முற்போக்குவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட மதச்சீர்திருத்த இயக்கம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கத்தோலிக்க சமயத்தில் பிளவுகள் ஏற்பட்டு புரட்டஸ்தாந்து சமயப்பிரிவுகள் உருவாயின. கத்தோலிக்க சமயத்திலும் சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. மக்கள் சமய சுதந்திரத்தினை அனுபவித்தனர்.
மானிய முறை
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு 12ம், 13ம் நூற்றாண்டில் ஐரோப்பா ழுழுவதும் பரவலடைந்த அரசியல் பொருளாதாரம், சமூக அமைப்பு முறையை மானிய முறை என்று அழைத்தனர். நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு சேவைகளின் அடிப்படையாகத் தோற்றம் பெற்றதே இம் மானிய முறையாகும். ஐரோப்பாவில் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்ற காலப்பகுதியில் தோன்றிய இம் முறை மத்தியகாலப் பகுதியில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஊடுருவிச் செல்வாக்குப் பெற்றுக் கொண்டது.
மானிய முறையின் தோற்ற காலத்தினை பலரும் பலவாறாகக் கொண்டாலும் கி.பி 9ம் நூற்றாண்டளவில் தோன்றி வளர்ச்சியடைந்து 15ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி ஏற்படவே மானியமுறை முற்றாக வீழ்ச்சியடைந்தது. இன்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இதன் இயல்புகள் ஆங்காங்கே சில காணப்படுகின்றன. மானியமுறை சமுதாய அமைப்பு ஐரோப்பிய வரலாற்றில் “இருண்டகாலம்” என கூறப்படுகின்றது. அதற்கு காரணம் இக்காலப் பகுதியில் பெருந்தொகையானோர் அடிமைகளாக இருந்ததோடு அவர்கள் ஆட்சியாளர்களால் சிரமப்படுத்தப்பட்டிருந்தனர்.
இச்சமுதாய அமைப்பினுள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் உள்வாங்கப்பட்ட சில முக்கியமான ஐரோப்பிய நாடுகளாகும். ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இதன் இயல்புகள் சில தொடர்ந்த வண்ணம் காணப்பட்டன. அந்தவகையில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மானிய முறையின் செல்வாக்கு நிலைத்திருந்தமையினை உணர்ந்து கொள்ள முடிகின்றது.
மானிய முறையின் தோற்றத்திற்கான காரணங்கள்
மிலேச்சர்களின் ஆக்கிரமிப்புக்கள்.
கி.பி 3ம் நூற்றாண்டு தொடக்கம் நாகரீகமற்ற முரட்டு இனத்தவர்களின் படையெடுப்புக்கள் ஐரோப்பாவில் தொடர்ந்தன. கொத்துக்கள், விசிக்கொத்துக்கள், வண்டல்கள், பிராங்குகள், ஒஸ்ரோகொத், கூணர்கள், அங்கிலோ - சக்ஸன்ஸ் போன்ற இவ் வகுப்பினர் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்ற உரோமப் பேரரசினை தாக்கினர். இவர்கள் கொள்ளைகள், கொலை, சூறையாடல் முதலியற்றில் ஈடுபட்டு வந்தமையால் மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை பாதுகாக்க பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் நேரடியாக தம்மை பாதுகாக்கக் கூடிய தலைவர்களாக தமது பிரபுக்களை கருதினர். இதனால் தமது சொத்துக்களை பிரபுக்களிடம் வழங்கி அவற்றை பாதுகாத்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு முழுப் பொருள் வளத்தைப் பிரபுக்கள் பெற்றுக் கொண்டமையினால் அவர்களின் அதிகாரம் மேலோங்கிக் காணப்பட்டது. அவர்களை தலைமயாளர்களாகக் கொண்டு மானியமுறை தோன்றியது.
உரோமப் பேரரசு வீழ்ச்சி கொண்டதைத் தொடரந்து மத்திய நிர்வாக முறையிலும் உடைவு ஏற்பட்டது. சட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனைச் சாதகமாகக் கொண்டு இத்தாலி பிரான்ஸ் நாடுகள் மீதும் இவர்களின் படையெடுப்புக்கள் தொடர்ந்தன. இவர்களின் படையெடுப்பினால் பரந்த அரசு சிதைவடைந்து பிரபுத்துவ அரசுகள் தோன்றியதுடன் நிலச்சுவாந்தர்கள் உருவாகினர்.
கரோலிஞ்சியப் பேரரசின் தளர்ச்சி
கி.பி 9ம் நூற்றாண்டில் கரோலிஞ்சியப் பேரரசின் புகழ்பெற்ற மன்னன் சார்ளிமேன் இறந்ததும் உள்நாட்டில் போர்கள் ஏற்பட்டன. பலமானவர்கள் பலமற்றவர்களை அடக்க முற்பட்டனர். தொடர்ந்து அரியனை ஏறியவர்கள் எவரும் இம் மன்னரைப்போல் திறமையானவர்களாகக் காணப்படவில்லை. பிரபுக்கள் தமது சொந்த இடங்களைக் கைவிட்டு கிராமப் பகுதிகளை நாடிச் சென்றனர். இவர்களுடன் இணைந்த வகையில் சாதாரண மக்களும் வாழ்வதற்கு முற்பட்டனர். தமது உடமைகளை இத்தகைய சாதாரண மக்கள் பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்.
பிரபுக்களின் ஆதிக்கம்
மத்திய நிர்வாக முறையில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டதனைத் தொடர்ந்து பிரபுக்கள் இத்தகைய சந்தர்ப்பத்;தினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அரசன் மிகப்பெரிய நிலப்பரப்பை நிர்வகிப்பது கடினமாக காணப்பட்டது. அத்தோடு மக்களுக்கு நேரடியாக பாதுகாப்பையும் அவனால் வழங்க முடியவில்லை. இதனால் அரசன் பிரபுக்களின் உதவியை நாடினான் தாம் பிரபுக்களிடமிருந்து பெற்ற உதவிகளுக்கு பதிலாக சில சலுகைகள், வசதிகளை மன்னர் செய்து கொடுத்தார். இராணுவத்தினை அமைத்துக் கொள்கின்ற உரிமையை பிரபுக்கள் இவ்வாறான பின்னணியில்தான் பெற்றுக் கொண்டனர். இவ்வாறாக பிரபுக்களின் அதிகாரம் மேலோங்க மானிய முறை அமைப்பும் வளர்ச்சியடைந்தது.
அடிமைகளின் தோற்றம்
மானியமுறை சமுதாயத்தில் மிகக் கூடிய பங்கு வகித்தவர்கள் அடிமைகள் ஆவர். உரோமப் பேரரசின் வீழ்ச்சியின் பின் இடம் பெற்ற யுத்தங்களினாலும், ஜேர்மனிய இனக் குழுக்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாகினர். அவ்வாறு ஆதரவற்று போனவர்கள் பிற்காலத்தில் அடிமைகளாக தொழில் ஈடுபடுத்தப்பட்டனர். அடிமைகளின் தோற்றம் மானிய முறையின் தோற்றத்திற்கு காரணமாகியது.
பண்டமாற்று முறை
பண்டமாற்று பொருளாதார முறையும் மானிய முறையின் தோற்றத்திற்கு காரணமாகியது. நிலத்தை உடையவர்கள் தாம் விளைவித்த பொருட்களைக் கொண்டு தமக்குத் தேவையான பொருட்களை பறிமாறிக் கொண்டனர். நிலம் உடையவர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர். இதனால் நிலப் பயன்பாடு அதிகமாகியது. இது மானிய முறையை தோற்று வித்தது. வலிமையுடையோர் வலிமையற்றோரை வெற்றி கொள்ளும் பாரம்பரியத்தின் படி மக்கள் ஆதரவு உடையவன் செல்வந்தனாகவும், பலம் பொருந்தியவனாகவும் மாறினான். இவ்வாறு மாறியவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து அதிக பொருள் உற்பத்தியை மேற்கொண்டனர். இவ்வாறு நிலத்தை முதன்மை கொடுத்துத் தொடங்கவே மானிய முறையும் தோற்றம் பெற்றது.
மானிய முறையின் சமூக கட்டமைப்பு
மானிய முறை என்பது நிலவுடமை சம்பந்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் உருவான ஓர் ஆட்சி முறை ஆகும். மானிய சமுதாய அமைப்பில் உயர்வான இடத்தில் இருப்பர் அரசர் அதனைத் தொடர்ந்து பெருநிலப் பிரபுக்கள், பிரபுக்கள், சாதாரண மக்கள், அடிமைகள் என்போர் இச் சமுதாய அமைப்பில் முக்கிய கூறுகளாகக் காணப்பட்டனர். இவர்களுக்கான கடமைகள் உரிமைகள் என்பன வரையறுக்கப்பட்டிருந்தன.
• அரசன்
நிலங்கள் அரசருக்கு இறவனிடமிருந்து கிடைத்ததாக இக்கால மக்கள் நம்பினர். இதனால் தெய்வீக வழிவந்த உரிமை அரசனுக்கு இருந்தது. அரசன் தனக்கென ஒரு தொகுதி நிலத்தினை உடமையாக்கிக் கொண்டு ஏனையவற்றினை பெரும் நிலப்பிரபுக்களுக்கு மானியமாக வழங்குவார். அரசரிடமிருந்து நிலத்தினைப் பெற்றுக் கொள்கின்ற இவர்கள் தேவையான போது அரசருக்கு படையுதவி உட்பட பல்வேறு சேவைகளை வழங்குவதாக உறுதியளிப்பதுடன் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாகவும் உறுதி கூறுவர். அரசரும் அத் தருணத்தில் பெரு நிலப்பிரபுக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்குவார். இந் நிகழ்வு பெரும் விழாவாக நடைபெறும். இதன்படி நில அதிகாரம் அரசனிடம் காணப்பட்ட அதேவேளை நிர்வாக அதிகாரங்கள் பிரபுக்களிடம் காணப்பட்டது.
• பெரும் நிலப்பிரபுக்கள்
அரசனுடன் நேரடியான தொடர்புகளை இவர்கள் கொண்டவர்கள். இவர்கள் நிலஉரிமை உடையவர்களாகவும் செல்வந்தர்களாகவும் காணப்பட்டனர். தமது பாதுகாப்பின் பொருட்டு கோட்டைகளையும் அமைத்து படைகளையும் பெருக்கிக் கொண்டு சிற்றரசர்கள் போன்று தமது பிரதேசங்களில் செயற்பட்டனர். இவர்களின் பலம் அதிகரித்ததன் காரணத்தினால் இவர்களுக்கிடையிலே ஏற்படுகின்ற பிணக்குகளைக் கூட அரசரால் தீர்த்து வைக்க முடியவில்லை. இவர்கள் அரசரிடமிருந்து நிலங்களைப் பெற்றுக் கொண்டது போல மத்தியகாலத்தின் தொடக்கத்தில் திருச்சபையிடமிருந்தும் ஏராளமான நிலங்களை உடமையாக்கிக் கொண்டனர். பதிலுக்கு திருச்சபைக்கும் அதன் குருமாருக்கும் பல்வேறு சேவைகளை இவர்கள் வழங்க முன்வந்தனர். இவர்கள் தம்மிடமுள்ள நிலங்களை பிரபுக்களிடம் கொடுத்தனர்.
• பிரபுக்கள்
பெருநிலப்பிரபுக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நிலத்தினைப் பிரபுக்கள் தமக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு வழங்கினர். இவர்கள் மானியதாரர்கள் எனப்பட்டனர். பிரபுக்கள் இராணுவசேவை உட்பட பல்வேறு சேவைகளை தேவையான சந்தர்ப்பங்களில் அரசர்களுக்கு வழங்கி வந்தனர். பிரபுக்களின் அதிகரித்த செல்வாக்கின் காரணமாக அரசருக்கும் சாதாரண மக்களுக்குமிடையிலே இருந்து வந்த தொடர்புகள் அற்றுப் போயின. சில பகுதிகளில் அரசர் என்பவர் அறியாத உருவமாகவே காணப்பட்டார். இப் பிரபுக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் இடைத்தரகர்களாக விளங்கினர். இவர்களிடம் சிறியளவு அதிகாரங்கள் காணப்பட்டன.
• சாதாரண மக்கள்
பெருமளவுக்கு பிரபுக்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். இவர்கள் பிரபுக்களுக்குத் தேவையான இராணுவசேவை உட்பட பல்வேறு சேவைகளை வழங்குவர். இவர்களுக்கு ஓரளவிற்கு உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன.
• அடிமைகள்
மானிய சமுதாய அமைப்பில் மிகவும் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் அடிமைகள் ஆவர். இவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் பண்னையை விட்டு விலக முடியாதவர்களாகக் காணப்பட்டனர். நிலத்தின் உரிமை மாறுகின்ற போது அவர்களும் அதனுடன் மாற வேண்டும். மேலும் அடிமைகள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கவும் தமது உடமைகளை விற்பனை செய்யவும் பிரபுக்களுக்கு அறிவித்து அவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். இவர்கள் சமயப் போதகர்களாக மாறியோ அல்லது பொருட்களையோ குறிப்பிட்ட தொகையையோ பிரபுக்களுக்குக் கொடுத்து விலகுவதற்கும் வாய்ப்பிருந்தது. உரிமையற்றவர்களாகவே இவர்கள் காணப்பட்டனர். இவர்கள் தமது வேலைகளை செய்யத் தவறும் போது தண்டனைகளை அனுபவித்தனர்.
• நைற் வீரர்கள்
நிலமானிய சமுதாய அமைப்பில் நைற் வீரர்கள் முக்கியமான ஒரு பிரிவினர். கிறிஸ்தவ சமயத்தின் ஆர்வத்தினால் ஈர்க்கப்பட்ட ஒரு பிரிவினர்களாகக் காணப்பட்டனர். பிரபுக்களிடம் பணியாற்றிய இவ் வீரர்கள் சமயத்தையும், பெண்களையும், நாட்டின் வணிகத்தையும் பாதுகாத்தனர். குதிரையேற்றம், வாள் சண்டைகளில் சிறந்து விளங்கி காணப்பட்டனர். பிரபுக்களால் வீரர்களுக்கு வழங்கப்பட்ட இப் பட்டங்கள் வீரர்கள் தமது கடமைகளை செய்யத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களால் பறிக்கவும் பட்டன.
மானியமுறையின் பொருளாதார நிலை
மானியமுறையின் பொருளாதார அமைப்பானது விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பண்ணை அதன் முக்கியமான பொருளாதாரக் கூறாக இருந்தது. ஒவ்வொரு பண்ணையிலும் பற்றைக்காட்டு நிலம், பொதுவான புல்வெளி, பால்நிலம் எனப்பல பகுதிகள் காணப்பட்டன. பண்ணை மக்கள் அனைவரும் இவற்றை மந்தைகளை மேய்தல், விறகு சேகரித்தல், தேன் சேகரித்தல், வேட்டையாடுதல் போன்ற கருமங்களுக்கு பயன்படுத்தினர்.
மானியமுறை பொருளாதாரத்தில் நிலம் முக்கிய உற்பத்திக் காரணியாகியது. பிரபுக்களிடம் இருந்த நிலம் பயிர்செய்யும் பொருட்டு பொதுமக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்;கள் தமக்குக் கிடைத்த காணியை அனுபவிப்பதற்கு கைமாறாக பிரபுக்களின் நிலத்தில் ஊதியமின்றி வேலை செய்வதற்கு அல்லது அறுவடையில் ஒரு பகுதியை கொடுப்பதற்கு அல்லது குறிப்பிட்ட தொகைப் பணத்தை செலுத்துவதற்கு கடமைப்பட்டிருந்தனர்.
மானியமுறைக் காலத்தில் சுயதேவைப் பொருளாதாரம் காணப்பட்டது. விவசாயம் முக்கியம் பெற்ற தொழிலாக காணப்பட்டது. கிராமத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்தனர். விவசாய உற்பத்தியில் இருந்து தமக்கு தேவையானவற்றை பண்டமாற்று மூலம் பெற்றுக்கொண்டனர். இதனால் பணப்புழக்கம் குறைவாக காணப்பட்டதோடு சுயதேவைப் பொருளாதார முறை காணப்பட்டது. மானியமுறையில் வர்த்தகம் சிறிதளவே நடைபெற்றது. அதுவும் பண்டமாற்று முறையிலே நடைபெற்றது குறிப்பாக உப்பு, வாசணைத் திரவியங்கள் என்பன வர்த்தகத்தில் பண்;டமாற்றப்பட்டது. . இதனால் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
மானிய முறையின் இயல்புகள்
விவசாயம் சார்ந்த பொருளாதாரம்
மானிய சமுதாய அமைப்பின் பொருளாதாரம் பெருமளவிற்கு விவசாயத்திலேதான் தங்கியிருந்தது. குறிப்பாக பண்னைகள் இங்கே சிறப்பிடம் பெற்றன. மானியக் கிராமங்கள் யாவும் தமக்குத் தேவையான பொருட்களைத் தாமே உற்பத்தி செய்து கொள்கின்ற சுயதேவைக் கிராமங்களாகக் காணப்பட்டன. கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற பயிர்கள் இங்கே உற்பத்தி செய்யப்;பட்டன. எருதுகள், களுதைகள் என்பன விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இங்கே வர்த்தகம், கைத்தொழில்கள் வளர்ச்சியடைவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்பட்டன.
அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருந்தமை
மானிய முறையில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்து காணப்படவில்லை. நிலத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமுதாயத்தில் அதிகாரங்கள் பரவிக் காணப்பட்டது. பிரிக்கப்பட்டிருந்த பிராந்தியங்களின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பிரபுக்கள் தமது பகுதிகளில் சுதந்திரமான முறையில் நிர்வாகத்தினை மேற்கொண்டனர். பிரத்தியேக படைகளையும் தமது பாதுகாப்பின் பொருட்டு உருவாக்கிக் கொண்டனர். அரசர், பிரபுக்கள் என அதிகாரங்கள் பலரிடம் பன்முகப்படுத்தப்பட்ட நிலமை இச் சமுதாய அமைப்பின் சிறந்த இயல்புகளில் ஒன்றாகும்.
சமுதாயம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தமை
சமுதாயம் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது. இங்கு அரசர், பிரபுக்கள், மதகுருமார்கள் சமுதாயத்தில் உயர்ந்த மட்டத்திலும் அடிமைகள் சகலவிதமான சுதந்திரங்களையும் சலுகைகளையும் இழந்த நிலையிலும் கீழ் மட்டத்தில் காணப்பட்டனர்.
பிரபுக்களின் செல்வாக்கு
மானிய முறையில் அரசர் பலமிழந்து பிரபுக்கள் பலம் பெற்று காணப்பட்டனர். பிரபுக்களின் ஆதிக்கம் மக்களின் மீது காணப்பட்டமையினால் அரசரின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டன. அரசரிடம் தனியான படைகள் எவையும் இருக்கவில்லை. அரசரும் பிரபுக்களின் தயவில் வாழ்தமையினால் அவர்களும் கூட பிரபுக்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். பிரபுக்களில் பலர் நீதிபதிகளாகவும் நீதிபதிகளாகவும் கடமையாற்றினர். பிரபுக்களின் மேலாதிக்கமே அரசரின் அதிகாரத்தை தீர்மானித்தது.
திருச்சபையின் செல்வாக்கு
மானிய முறை காலத்தில் திருச்சபையின் செல்வாக்கு அதிகரித்து காணப்பட்டது. திருச்சபை அரசிடமிருந்தும் பிரபுக்களிடமிருந்தும் அதிகளவு நிலங்களைப் பெற்றிருந்தது. இது அக்காலப்பகுதியில் மதகுருமார்களின் தலைமையில் சமயக்கல்வியினை ஊட்டுகின்ற நிறுவனமாகவும் செயற்பட்டது. திருச்சபையின் சொத்துக்கள் காலப்போக்கில் அதிகரித்துச் சென்ற போது அது லௌகீகத் துறையில் நாட்டம் கொண்டதாக மாறியது. தான் பெற்றுக்கொண்ட சமூக அந்தஸ்தின் காரணமாக அரசுடன் போட்டியிடுகின்ற நிலைமையையும் உருவாக்கிக் கொண்டது.
பண்டமாற்று முறை
இக் காலத்தில் பணத்தின் பயன்பாடு குறைந்த அளவிலேயே காணப்பட்டது. ஒரு சில வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கே பணம் பயன்படுத்தப்பட்டது. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பின்னதாக ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று முறை செயலற்றுப் போனது.
நீதித்துறையின் செயற்பாடுகள்
பிரபுக்களாலேயே நீதிமன்றங்கள் நடாத்தப்பட்டன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் மக்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே காணப்பட்டன. மூட நம்பிக்கைகளின் தாக்கங்களும் தீர்ப்புக்களில் தென்பட்டன. வழங்கப்பட்ட தண்டனைகளும் கொடூரமானவையாகக் காணப்பட்டன. உடல் ரீதியாக துன்பப்படுத்தும் தண்டனைகளாக காணப்பட்டன. சட்டமுறைகளில் வேறுபாடுகளும் காணப்பட்டன.
நிலத்தின் பங்களிப்பும் அடிமை முறையும்
மானிய சமுதாயத்தில் நிலம் பிரதான இடத்தினை வகித்தது. ஒருவரின் சமூக அந்தஸ்து நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு நிலத்தோடு இணைந்த வகையில் பண்ணைகளில் அதிகம் உழைத்தவர்கள் அடிமைகளே ஆவர். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கபட்டிருந்ததோடு துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டனர்.
மானிய முறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள்
அரசர் முதல் சாதாரண குடிமகனையும் நிலத்தின் துணையுடன் இணைத்து மத்திய காலத்தில் சிறப்புப் பெற்றிருந்;த மானிய முறையானது பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஐரோப்பாவில் செயலிழந்து போனது. அதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கலாம்.
வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி
பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பின்பாக வர்த்தகம் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தது. பண்டமாற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இச் சமுதாய அமைப்பு பணத்தின் வருகையைத் தொடர்ந்து பின்தள்ளப்பட்டது. வர்த்தகம் விருத்தியடைந்த போது அடிமைகள் தலைநகரங்களுச் சென்று தொழில் தேடிச் சென்று அதன் மூலமாக பணத்தினை சம்பாதித்துக் கொண்டனர். சம்பாதித்த பணத்தினை கொடுத்து அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டனர். அடிமைகள் சுதந்திரம் பெற்றமையால் விவசாய நடவடிக்கைகளுக்கு கூலிக்கு ஆட்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை பிரபுக்களுக்கு ஏற்பட்டது. இதனால் பிரபுக்களின் செல்வாக்கும் அதிகாரமும் குறைவடைய மானியமுறையும் வீழ்ச்சியடைந்தது.
வர்த்தகர்கள் என்ற புதிய வகுப்பினர்களின் எழுச்சி
மானிய முறை சமுதாயத்தில் பண்டமாற்று வர்த்தகமே காணப்பட்டது. மக்கள் வர்த்தகத்தை விட விவசாயத்தையே பெரிதும் விரும்பினர். ஆனால் பணப் புழக்கங்கள் ஆரம்பித்ததுடன் வர்த்தகம் இலகுவாயிற்று. இதனால் மக்கள் வர்த்தகத்தை நடாத்த தொடங்கினார்கள். வர்த்தகத்தில் ஏற்பட்ட அபிவிருத்தியைத் தொடர்ந்து வங்கியாளர்கள், கப்பல் கட்டுவோர்கள், வர்த்தகர்கள் போன்ற புதிய வகுப்பினரின் எழுச்சி ஏற்பட்டது. இவர்கள் பிரபுக்களுக்குப் போட்டியாகவும் அதே நேரம் அவர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டு அவர்களைக் கட்டுப்படுத்தவும் முனைந்தனர். மேலும் அரசருக்கு ஆதரவாகவும் இவர்கள் நடந்து கொண்டனர். இவ் ஆதரவு பணமாகவோ ஊழியமாகவோ அரசருக்கு வழங்கப்பட்டது. இதனால் பிரபுக்களின் ஆதிக்கம் குறைவடைய ஆரம்பித்தது.
கொன்ஸ்தாந்து நோபில் முக்கிய வர்த்தக நிலையமாக மாறுதல்
முஸ்லீம்கள் கொன்ஸ்தாந்துநோபில், அலெக்சாண்டிரியா வரை வர்த்தகப் பொருட்களை எடுத்து வந்ததாலும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பானிய மன்னர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாலும் வர்த்தகம் வளர்ச்சியடைந்தது. அத்தோடு வர்த்தக நகரங்களும் தோற்றம் பெற்றது. வர்த்தகத்தில் கொன்ஸ்தாந்துநோபில் முக்கியம் பெற்றது. இது மானியமுறை வீழ்ச்சியடைய காரணமாகும்.
சிலுவைப் போர்கள்
சமயப் போராகவும் அரசியல் ஏகாதிபத்தியத்துக்கான போராகவும் நடைபெற்ற சிலுவைப் போர்கள் மானிய முறையினை அழிவுக்கு கொண்டு சென்றது. இப்போர்களின் போது பிரபுக்கள் தமது அடிமைகளை விடுவித்து அவர்களை போரில் ஈடுபடச் செய்தனர். ஆனால் பெரும்பாலான அடிமைகள் போருக்குச் செல்லாமல் வியாபாரம் செய்தனர். சிலர் பணத்தை பிரபுக்களுக்குச் செலுத்தி அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்துக் கொண்டனர். இப் போர்களின் போது அதிகளவில் பிரபுக்கள் இறந்ததுடன் தமது உடமைகளையும் பறிகொடுத்தனர். சிலர் தமது நிலங்களையும் விற்பனை செய்ய முன்வந்தனர். இதனால் மானியமுறை சமூக அமைப்பு வீழ்ச்சியடைந்தது.
தேசிய அரசுகளின் தோற்றம்
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் பிரபுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி விட்டு தேசிய அரசுகள் தோன்றின. இவ்வாறு தோன்றிய இவ்அரசுகள் தத்தம் நாடுகளில் வலிமை பெற்ற முடியாட்சியினை ஏற்;படுத்தின. மத்தியமயமான நிர்வாகத்தினை ஏற்படுத்தியதன் மூலம் பிரபுக்களின் அதிகாரங்கள் வலுவற்றதாக ஆக்கப்பட்டன. இதனால் பிரபுக்களின் செல்வாக்கு சீர்குலைந்தது.
கல்வி விருத்தியும் சிந்தனை வளர்ச்சியும்
நாடுகாண் பயணங்கள், மறுமலர்ச்சி என்பன புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் உண்டாக்கியது. இக்காலப்பகுதியில் கல்வி சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு சிலருக்கு இருந்த கல்வியானது வர்த்தக வளர்ச்சியினால் பரவலாக்கப்பட்டது. மறுமலர்ச்சி சிந்தனையாளர்களும் அரசியல் பொருளாதார சமூக சிந்தனைகள் ஊடாக சீர்கேட்டை எடுத்துக்காட்டி மானியமுறையை நலிவடையச் செய்தனர். இதேவேளை இத்தாலி நகரத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும் சிந்தனையை தூண்டிவிட மானியமுறை வீழ்ச்சியடைந்தது.
உள்நாட்டுப் போர்கள்
மானிய முறை சமுதாயமானது உள்நாட்டுப் போர்களினால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தது. பிரபுக்களுக்கிடையிலான போர்கள், அரசருக்கும் பிரபுக்களுக்குமிடையிலான போர்கள் இப்படியான போர்களினால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இவ்வாறான போர்களை நிறுத்துகின்ற நோக்குடன் திருச்சபை பதினொராம் நூற்றாண்டில் நான்கு தடவைகள் போர்த்தடையை ஏற்படுத்திய போதும் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ச்சியான போர்களும் மானியமுறை வீழ்ச்சிக்கான காரணமாகியது.
கடுங்கொள்ளை நோய், பஞ்சம்
14ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கடுங்கொள்ளை நோயினாலும் பஞ்சத்தினாலும் அடிமைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டது. ஏனையோர் பிரபுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை கொடுத்துவிட்டு விலகிக் கொண்டனர். இத்தாலியில் முதலில் தோன்றிய இக்கடுங்கொள்ளை நோய் ஐரோப்பிய மக்கள் எண்ணிக்கையில் கணிசமான அளவு தொகையை குறைத்தது. இதுவும் மானிய முறை வீழ்ச்சிக்கு காரணமாகியது.
நகரங்களின் வளர்ச்சி
பல்வேறு காரணங்களைக்காக கிராமங்களை விட்டு மக்கள் நகரங்களுக்கு அடிக்கடி சென்று வந்தமையினால் நகரங்கள் வளர்ச்சி கண்டன. நகரங்களின் வளர்ச்சியும் நிலமானிய முறையின் வீழ்ச்சிக்கு காரணமாகியது. சில பிரபுக்கள் தமது கிராமப்புற வாழ்க்கையிலும் மானியமுறையிலும் சலிப்படைந்தவர்களாகவும் அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். இவர்கள் தமது பண்ணைகளை விற்பனை செய்துவிட்டு நகரங்களை நாடிச் சென்றனர். இதுவும் மானியமுறை வீழ்ச்சிக்கான காரணமாகும்.
தொழிற்சாலைகளின் வளர்ச்சி
தொழிற்சாலைகள் நகரங்களிலேயே அமைந்திருந்தன. அங்கே அதிகளவு சம்பளத்துடன் சுதந்திரமான முறையில் பல்வேறு சலுகைகளுடன் வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால் பண்னைகளில் பணிபுரிந்தவர்கள் அங்கிருந்து விலகித் தொழிற்சாலைகள் உள்ள நகரங்களினை நாடிச் சென்றனர். இதனால் பண்ணைகளில் வேலைக்கு ஆட்கள் இல்லாது போயினர். நகரங்களின் உருவாக்கம் தொழிற்துறையின் விருத்தி என்பன மானியமுறை விழ்ச்சிக்கு காரணமாகியது.
போர்க்கருவிகள்
புதிய போர்க்கருவிகள் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் துணையுடன் போர் செய்கின்ற முறைகள் இலகுவாக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் பிரபுக்களால் ஏற்படுத்தப்பட்ட படைகள் தமது முக்கியத்துவத்தினை இழந்து கொண்டன. அத்துடன் அரசர்களும் தமக்குக் கீழ் தனித்தனியாக படைகளை உருவாக்க முற்பட்டனர். இதுமானிய முறை வீழ்ச்சிக்கு காரணமாகியது.
எனவே மேற்கூறப்பட்ட காரணங்கள் நிலமானிய முறையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
மானிய முறையின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள்
ஐரோப்பாவில் இருண்டகாலத்தில் தோற்றம் பெற்ற மானியமுறையானது ஐரோப்பாவில் ஓரளவு அனுகூலங்களை கொண்டிருந்த அதேவேளை பிரதிகூலங்களையும் கொண்டிருந்தது. அனுகூலங்களாக பின்வருவனவற்றை கூறலாம்.
மக்களைப் பாதுகாத்தது
நாகரீகம் அற்றவர்கள் அடிக்கடி மேற்கொண்ட படையெடுப்பினால் மத்திய நிர்வாகம் பலமிழந்து காணப்பட்டது. மன்னர்கள் செய்வதறியாது திகைத்தனர். இத்தகையதொரு நெருக்கடியான நிலையில் நாட்டினையும் மக்களையும் பாதுகாத்தது நிலமானிய முறையாகும். மன்னருக்கும் மக்களுக்கும் பிரபுக்களே ஆதரவு வழங்கினர்.
சர்வாதிகார ஆட்சிக்குத் தடை
மானிய முறை காலத்தில் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருந்தது. அரசன் ஒருவனிடம் முழுமையான அதிகாரங்கள் கிடைத்திருந்தால் அவை ஒருமுகப்படுத்தப்பட்டு சர்வாதிகாரத் தன்மைக்கு அரசனை கொண்டு சென்றிருக்கும். ஆனால் நிலமானிய முறையில் அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்டு பிரபுக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதற்கு தடையேற்பட்டிருந்தது.
அடிமை முறையில் தளர்வும் படையமைப்பில் முன்னேற்றமும்
அடிமைமுறையில் மானிய முறையின் இறுதிக்காலப்பகுதியில் ஒருவிதமான தளர்வு நிலையொன்று காணப்பட்டது. தனிமனித சுதந்திரக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பிரபுக்களிடம் தமது உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் இவர்கள் துணிந்தனர். அத்தோடு அடிக்கடி போர்கள் இடம் பெற்றதனால் படைகளைப் பெருக்கும் தேவை உண்டானது. போர் நுட்பங்கள் அறியப்பட்டன. நைற் வீரர்களின் தொண்டுகள் சிறப்பானவையாகக் காணப்பட்டன.
திருச்சபையின் பணிகள்
மானிய முறை சமுதாய அமைப்பின் முக்கியமான கூறுகளான திருச்சபையும் அதன் குருமார்களும் மக்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்தன. இவர்கள் கட்டுப்பாட்டினையும் ஒழுங்கினையும் ஏற்படுத்தினர் திருச்சபைகள் கல்வி நிலையங்களாகவும் செயற்பட்டது. இதன் மூலமாக கல்வி அறிவு ஏற்பட்டது.
பிரதி கூலங்கள்
மத்தியில் உறுதியான ஆட்சி காணப்படவில்லை
மானிய முறை காலத்தில் மத்தியில் நிலையான காணப்படவில்லை. எல்லாவற்றிக்கும் பிரபுக்களையே நம்பியிருக்க வேண்டிய நிலமை காணப்பட்டது. பிரபுக்களும் இதனையே விரும்பினர். அரசரால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய நிலை காரணமாக வலிமையான தேசிய முடியாட்சியினை ஏற்படுத்த முடியவில்லை. இது தேசிய முடியாட்சிக்கு தடையாக இருந்தது. மேலும் பிரதேச ரீதியாக பிரபுக்கள் அதிகாரம் பெற்றிருந்ததால் நாட்டில் முழுமையான ஒரே வகையான சட்டமோ நீதி வழங்குகின்ற முறையோ காணப்படவில்லை.
தேசிய உணர்வு வலுவிழந்தமை
மானிய முறை காலத்தில் மக்களிடம் சுயநல நோக்கமும் குறுகிய மனப்பான்மையும் அதிகரித்தது. பிரபுக்களை நம்பியிருந்த மக்கள் பிரபுக்களிடம் மட்டுமே இவர்கள் பணிவும் அடக்கமும் கொண்டவர்களாகத் தம்மை இனங்காட்டினர். பிரதேச ரீதியாக இவர்கள் பிரபுக்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டதால் தேசியரீதியான உணர்வு வலுவிழந்து காணப்பட்டது. இது பின்நாட்களில் ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைப்பதிலும் தடைகள் ஏற்பட்டன.
தொடர் யுத்தங்கள்
மானிய முறை காலத்தில் பிரபுக்கள் தமது பலத்தினை நிரூபிக்கின்ற நோக்குடன் தமக்கிடையிலே போர்களில் ஈடுபட்டனர். இவ்வாறான தொடர்யுத்தங்களினால் அமைதியின்மை நிலவியது. போர்களில் ஈடுபட்டு தமது எல்லைகளை விரிவுபடுத்தினர். இதனால் அமைதியின்மை ஏற்பட்டதுடன் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளும் காணப்பட்டது. ஏழைகள் வசதிபடைத்தவர்கள் என்ற வேறுபாடுகள் காணப்பட்டதோடு அடிமைகள் வாழ்நாள் முழுவதும் நிலத்துடன் கட்டுப்பட்டிருந்தனர்.
திருச்சபையின் வளர்ச்சி
இக் காலத்தில் திருச்சபையிடம் அதிகமான நிலங்கள் காணப்பட்டதால் திருச்சபை பலமான நிலையினை அடைந்து கொண்டது. இதன் காரணமாக குருமார்களில் பலர் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு தமது நோக்கம் கடமைகளை மறந்து லௌகீக வாழ்க்கையில் வாழ்ந்தனர். பின்னாளில் திருச்சபையின் வளர்ச்சியானது அரசருடன் மோதுகின்ற நிலையினை ஏற்படுத்தியது.
பிரபுக்களின் சுரண்டல்கள்
சாதாரண குடியானவர்கள் பிரபுக்களின் பிடியிலிருந்து துன்பப்பட்டனர். தம்மை பிரபுக்களிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாமல் அவர்கள் திண்டாடினர். இவர்களால் வழங்கப்பட்ட நீதியிலும் குறைபாடுகள் காணப்பட்டன. பாரபட்சமான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவர்களின் உழைப்பிலும் ஊதியத்திலும் பிரபுக்கள் சுரண்டினர். அத்தோடு இக் காலப்பகுதியில் கைத்தொழில் வர்த்தகம் அறிவியல் என்பனவும் வளர்ச்சியடையவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
ரஷ்ய புரட்சி
ரஷ்ய புரட்சி மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்...
-
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (கி.பி 1658 - கி.பி 1796) 1648 ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனி சுதந்திர நாடாகிய ஒல்லாந்து வர்த்தகப் பொரு...
-
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு 12ம், 13ம் நூற்றாண்டில் ஐரோப்பா ழுழுவதும் பரவலடைந்த அரசியல் பொருளாதாரம், ...