சனி, 11 பிப்ரவரி, 2023

ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (கி.பி 1658 - கி.பி 1796)

ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் (கி.பி 1658 - கி.பி 1796) 1648 ஸ்பெயின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தனி சுதந்திர நாடாகிய ஒல்லாந்து வர்த்தகப் பொருட்களை பெறும் நோக்குடனேயே கடற்பிரயாணங்களை மேற்கொண்டனர். இதற்காக 1602 ஆம் ஒல்லாந்து மன்னனின் அனுமதியுடன் ஒல்லாந்த வர்த்தக சங்கங்கள் சிலவற்றை இணைத்து ஒல்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங்கம் உருவாக்கி கிழைத்தேசங்களுக்கு வருகை தந்தனர். ஒல்லாந்தர் பிரதானமாப் பொருளாதார ரீதியில் இலாபம் பெறுவதற்கே ஆசியாவிற்கு வந்தனர். ஆசியாவிற்கு வந்த ஒல்லாந்தர் ஜாவாத்தீவில் பத்தேவியாவைத் தலைமையகமாகக் கொண்டு தமது அதிகாரத்தை பரவலடையச் செய்யத் தொடங்கினர். ஒல்லாந்தரின் இலங்கை வருகை இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சியினால் இன்னல்களுக்கு உள்ளாகி இருந்த கண்டி இராச்சிய மன்னர்கள் போர்த்துக்கேயரை இலங்கையில் இருந்து வெளியேற்ற கள்ளிக்கோட்டை மன்னன் சமோரின் உதவியுடன் போர்த்துக்கேயர் மீது போர் தொடுத்தனர். ஆனாலும் கண்டி மன்னர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் போர்த்துக்கேரின் வலிமையான கடற்படை மற்றும் ஆயுதங்கள் ஆகும். ஆகவே அந்நியரான போர்த்துக்கேயரை வெளியேற்ற அதே போன்று அந்நியரான இன்னொரு இனத்தவரான வலிமையான படைபலம் உள்ள ஒல்லாந்தரின் உதவியை கண்டி மன்னர்கள் நாடினர். ஒல்லாந்தருக்கும் கண்டி மன்னர்களுக்குமான தொடர்புகள் 1602 ஆம் ஆண்டு மட்டக்களப்பிற்கு வந்த ஒல்லாந்த கடற்படைத் தளபதி ஸ்பீல்பேர்ஜன் கண்டி அரச மாளிகைக்குச் சென்று மன்னன் 1ம் விமலதர்மசூரியனை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டான். ஒல்லாந்து மன்னனால் அனுப்பப்ட்ட கடிதத்தையும் கொடுத்தான். போர்த்துக்கேயரை வெளியேற்ற கடற்படை வலிமை பொருந்திய ஒல்லாந்தரின் உதவி கிடைத்தமையால் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். எனினும் இதன் போது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் போர்த்துக்கேயரை எதிர்க்கும் அளவுக்கான வலிமையான அதிகாரத்தை ஒல்லாந்தர் ஆசியாவில் கொண்டிருக்கவில்லை. இதன் பின்னர் அடுத்த தொடர்பு சீ போல்ட் த வார்ட் தலைமையில் இடம் பெற்றது. விமலர்தரமசூரியன் மன்னனுடன் இடம் பெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒல்லாந்து குழுவினரின் தகாத நடவடிக்கையால் இவர்கள் கொல்லப்பட்டதோடு ஒல்லாந்தர் உதவியை நாடும் முயற்சி தோல்வி அடைந்தது. விமலதர்சூரியனுக்கு பின்னர் செனரத்தின் ஆட்சிக்காலத்திலும் எவ்வித நன்மைளும் ஏற்படவில்லை. இவனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சிக்காலத்திலேயே ஒல்லாந்தருடனான தொடர்பு வலுப்பெற்றது. ஒல்லாந்தருடன் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட 2ம் இராஜசிங்கன் போர்த்துக்கேயரை இலங்கையில் இருந்து வெளியேற்ற உதவுவதற்கு ஈடாக கறுவா வியாபார உரிமையையும், கிழக்கில் உள்ள ஒரு துறைமுகத்தையும் கொடுப்பதாக உறுதியளித்தான். இதன்படி ஒல்லாந்தக் கடற்படை அதிகாரியான வெஸ்டர் வோல்டிற்கும் இலங்கைத் தூதுவர்களுக்குமான உடன்பாட்டின்படி 1638 ஆம் ஆண்டு கண்டிப்படையினரும் ஒல்லாந்துப் படையினரும் இணைந்து போர்த்துக்கேயரின் மட்டக்களப்பு கோட்டையை தாக்கி கைப்பற்றினர். இதன் பின்னர் இருபது ஆண்டு காலப்பகுதிக்குள் போர்த்துக்கேயர் வசமிருந்த திருகோணமலை, நீர்கொழும்பு, காலி, களுத்துறை, கொழும்பு, மன்னார் ஆகிய கோட்டைகளையும் கைப்பற்றி 1658 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து முற்றாக போர்த்துக்கேயரை வெளியேற்றினர். ஆனாலும் ஒல்லாந்தர் கண்டி மன்னனுடனான உடன்படிக்கையை மீறி செயற்பட்டனர். உடன்படிக்கையின்படி கைப்பற்றப்பட்ட கோட்டைகளை ஒல்லாந்தர் மன்னனிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் 2ம் இராஜசிங்கனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் முரண்பாட்டின் விளைவாக மன்னன் ஒல்லாந்தர் மீது பல தாக்குதல்களை மேற்கொண்டு ஒல்லாந்தர் வசமிருந்த பல பகுதிகளை கைப்பற்றி கண்டி இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான். கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஆட்சிக்காலத்தில் 1760 ஆம் ஆண்டு ஒல்லாந்தருடனான மோதலில் மன்னன் ஒல்லாந்தர் வசமிருந்த கட்டுவனகோட்டை, மாத்தறைக்கோட்டை உட்பட மேலும் சில பிரதேசங்களைக் கைப்பற்றினான். 1764 ஆம் ஆண்டு ஆளுனரான பெரன் வென் எக் என்பன் தலைமையில் கண்டி மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு கண்டி மக்களால் தோல்வியடையச் செய்யப்பட்டது. 1765 மீண்டும் ஒல்லாந்தர் கண்டியை ஆக்கிரமித்து கண்டி நகரினுள் பிரவேசித்தனர் இதன் போது சமாதானம் செய்ய மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் விரும்பிய போது ஒல்லாந்தரின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தான். இதன் பின்னர் ஒல்லாந்தர் கண்டி நகரைச் சூறையாடி மீண்டும் கொழும்புக்கு சென்றனர். ஒல்லாந்தரின் படையெடுப்பு, அச்சுறுத்தல் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்ப்டனர். இதனால் 1766 ஆம் ஆண்டு கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் சமாதான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான். இந்த உடன்படிக்கையின் படி கண்டி இராச்சியம் கரையோரப்பகுதியை இழந்தது. ஒல்லாந்தரின் நிர்வாகக் கொள்கைகள் இலங்கையின் கரையோரப்பகுதிகளில் 1658 - 1796 வரை ஒல்லாந்தர் ஆட்சிபுரிந்த போது இவர்களால் பல விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இலங்கையில் அரசியல், பொருளாதார, சமய அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் ஒல்லாந்தரால் கொண்டு வரப்பட்டது. ஒல்லாந்தரது நிர்வாக முறையானது திட்டமிடப்பட்டதாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் காணப்பட்டது. குறைந்த செலவில் கூடிய இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் நிர்வாகக் கொள்கைகள் செயற்படுத்தப்பட்டது. கூடிய அளவிற்கு இலங்கையின் சுதேச உத்தியோகத்தர்களையே நிர்வாகத்திற்கு பயன்படுத்தினர். ஒல்லாந்தர்களது நிர்வாக நடவடிக்கைகளில் ஒல்லாந்த ஆட்சி சபையான ஸ்டேட் ஜெனரலின் அனுமதியின் கீழ் வர்த்தகசங்கம் அமைக்கப்பட்டதுடன் ஒல்லாந் ஹேக் நகரில் அதன் அதிகாரப்பிரிவு இருந்தது. அதன் கீழைத்தேச நிர்வாகப் பகுதிகளை ஆட்சி செய்வதற்கு பத்தேவியாவில் ஆளுனரும் அவரது சபையும் இருந்தது. இலங்;கை நிர்வாகம் தொடர்பில் காலியில் ஆளுனரும் அவருக்கு உதவி புரிவதற்கு பதினொருவர் கழகம் என்ற அமைப்பும் இருந்தது. இலங்கையின் ஒல்லாந்துப் பகுதிகள் மூன்று கொமண்டரிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கொழும்புக் கொமாண்டரி, காலிக் கொமாண்டரி, யாழ்ப்பாணக் கொமாண்டரி என்பனவே அவையாகும். ஒல்லாந்தர் நிர்வாக முறையில் கொழும்புக் கொமாண்டரி மிகப் பிரதான இடத்தைக் கொணடிருந்தது ஆளுனரே நேரடியாக நிர்வாகம் செய்தார். ஆளுனருக்கு அடுத்த நிலையில் தலைமை நிர்வாகி முக்கியத்தும் பெற்றவராக விளங்கினார். கொழும்புப் பிரிவை பொறுத்தமட்டில் அதன் நீதி, நிர்வாக, நிதி விடயங்கள் தொடர்பாக தலைமை நிர்வாகியே பொறுப்பாக விளங்கினார். பண்டகசாலைக்கு பொறுப்பாக பண்டகசாலைக் காப்பாளர் காணப்பட்டார். பிசுக்கால் எனப்படும் உத்தியோகத்தர் பேரவையின் நீதி, நிர்வாகதுறையின் பிரதிநிதியாக தொழிற்பட்டாhர். இவர்களைத் தவிர இராணுவத் தளபதி, கழுக்கோறளைத் தலைவர், பணம் வழங்கும் அதிகாரி, மகாபத்தே தலைவர் போன்றோரும் நிர்வாகத்தின் பொருட்டு செயற்பட்டனர். ஒல்லாந்தரின் நிர்வாக நோக்கத்திற்காக பிரிக்கப்பட்ட மூன்று கொமாண்டரிகள் ஒவ்வொன்றும் உயர் உத்தியோத்தரை உள்ளடக்கிய பேரவையினால் பரிபாலிக்கப்பட்டது. இப் பேரவையில் அதிகாரம் மிக்கவராக காணப்பட்டவர் திசாவை என அழைக்கப்பட்டார். கொழும்பு, யாழ்ப்பாணம், கால ஆகிய நிர்வாக நகரங்களின் தொலைவினை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் வர்த்தகத்தின் பொருட்டு திசாவைக்கு அடுத்தநிலையில் ஒப்பர்கூவ்ட் என்ற உத்தியோகத்தரை நியமித்தனர். உள்ளுர் நிர்வாகத்தை பொறுத்தமட்டில் திசாவை பதவி முக்கியத்துவம் பெற்றதாக காணப்பட்டது. வரி, நீதி, இராணுவ, பொருளாதர, நிர்வாக அலகுகளை பரிபாலிக்கும் பொறுப்புக்களை திசைவையே கொண்டிருந்தது. ஒவ்வொரு திசாவாணியும் கோரளை, பற்று, கிராமம் என வகுக்கப்பட்டு முறையே முதலியார், கோரளை, அத்துக்கோரளை ஆகிய நிர்வாகிககளால் நிர்வாகிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலும் விதானை என்ற அதிகாரியே கிராமங்களின் நாளாந்த நிர்வாக நடவடிக்கைகளை பரிபாலித்து வந்தார். ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் அரசுக்கு சேரவேண்டிய வருமான மீதியை அரசுக்கு அனுப்பி வைப்பது விதானையின் பொறுப்பாக இருந்தது. மகாபத்தே திணைக்களம் கறுவா நிர்வாகத்திற்கு பொறுப்பாக செயற்பட்டது. அத்தோடு உள்ளுர் நிர்வாக மேற்பார்வையையும் இத் திணைக்களமே மேற்பார்வை செய்தது. மகாபத்தே திணைக்களத்தின் பிரதான பணிகள் ஐரோப்பாவிற்கும் பத்தேவியாவிற்கும் கறுவாவை ஏற்றுமதி செய்யும் பொருட்டு கறுவாப்பாட்டைகளை உரித்தல், அவற்றை துறைமுகங்களுக்கு கொண்டு சென்று வழங்குதலே ஆகும். மகாபத்தே திணைக்களத்தின் தலைவராக ஒல்லாந்து நிர்வாகியே காணப்பட்டார். அவருக்கு உதவியாக மகாதுரையா, உபதுரையா என்போர் உதவியாக இருந்தனர். காலியர், குளினர், பண்ணியர், சலாகம் சாதியினர் கறுவாப்பட்டை உரிக்க பயன்படுத்தப்பட்டனர். யானை பிடித்தல் தொலிலுக்கு கஜநாயக்கே என்ற சிங்கள முதலியார் பொறுப்பாக இருந்தார். ஒல்லாந்தரது ஆட்சியில் இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் இலங்கை கல்வி வரலாற்றில் ஒல்லாந்தர் காலம் முக்கியமானது. கல்வியின் ஊடாக சமயம் பரப்பப்பட்டதால் ஒல்லாந்தர் கல்வியில் செலுத்திய கவனம் “இஸ்கூல்” ஆரம்பிக்கப்பட்டு அதனை தம் சமயப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கொண்டனர்;. கல்வியை பொறுத்தவரை ஒல்லாந்தரின் நோக்கங்கள், கல்வி மூலம் சமயத்தை பரப்புதல். தமது சமயத்தை தழுவியோருக்கு எழுத்து தொடர்பான ஆரம்பக் கல்வியை வழங்குதல். தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தல். சமயப் பிரச்சாரத்திற்கு அவசியமான பிரசாரங்களையும் ஆசிரியரையும் பயிற்றுவித்தல். தமது நிர்வாகத்தில் உதவுவதற்கு ஒரு மத்திய வகுப்பினரை உருவாக்குதல். போன்றவை ஆகும். ஒவ்வொரு பாடசாலையும் ஒல்லாந்தைச் சேர்ந்த மதகுரு ஒருவரின் நேரடியான மேற்பார்வையில் இயங்கியது. தமது மதத்தை தளுவியவர்களுக்கு முன்னுரிமை அளித்து இணைத்துக் கொண்டனர். ஏனைய சமயப் பிள்ளைகளை ஞானஸ்தானத்தின் பின்னர் பாடசாலைக்கு உள்வாங்கினர். ஐரோப்பிய பிள்ளைகளுக்காக “கொழும்பு செமினறி” என வேறாக பாடசாலை ஆரம்பித்தனர். அனைத்து பாடசாலைகளும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த மற்ற எல்லா நாட்களும் பாடசாலை நாட்டகளாயிருந்தன. நீண்ட விடுமுறைகள் இருக்கவில்லை. நத்தார் தினம், புத்தாண்டுதினம், சுவர்க்க ஆரோகண திருவிழா, பிராத்தனை செல்வதற்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டது. பாடசாலைகளில் மொழி, சங்கீதம், சமயம் போன்றவை கற்பிக்கப்பட்டதுடன் முறையான பரீட்சைகளும் நடாத்தப்பட்டன. கற்றல் நடவடிக்கைகளை கொலாச் கொமிசன் சபையொன்றின் மூலம் நிர்வகித்தனர். 15 வயதிற்குட்பட்ட யாவரும் கட்டாயம் கல்வியை பெற வேண்டும் என்ற சட்டம் இருந்ததோடு அது வெற்றிகரமாகவும் செயற்படுத்தப்பட்டது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர் தண்டப்பணம் செலுத்த வேண்டியிருந்தது. கல்வியை அரச பொறுப்பாக்கியவர்கள் ஒல்லாந்தரே ஆவார். இதனால் அரசு கல்விக்கென தனியான பாடசாலைக்கல்வி ஆணைக்குழுவை நிறுவினர். இக்குழுவின் பணிகளாவன ஆசிரியர் நியமனமும் கட்டுப்பாடும், பாடசாலை பரிசோதனை மதகுரு ஒருவரின் பொறுப்பில் இருந்தது, ஞானஸ்தானம் பெற விரும்புபவர்களை பரீட்சித்;தல். ஒவ்;வொரு மாகாணமும் பிரதேசம், கோட்டம், சிற்றூர் எனப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பங்குகள் தோறும் பாடசாலைகள் தொட்ங்கப்பட்டன. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு நியமப் பாடசாலைகள் செயற்பட்டன. ஒல்லாந்தரது கல்வி நிறுவனங்களில் பரிஷ் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள், செமினறிப்பாடசாலைகள், நோமல் பாடசாலைகள் (ஆசிரியர் பயிற்சிப்பாடசாலை) போன்றவை முதன்மையானவை. கற்பித்தலில் வினாவிடை முறையே அதிகமாக உபயோகிக்கப்பட்டது. கி.பி 1737 ஆண்டில் கொழும்பில் ஒல்லாந்த அச்சகம் நிறுவப்பட்டதன் பின்பு சிங்கள மொழியில் அசாதாரண அறிவு பெற்றிருந்த வண. ஜே.பி வெட்செலியூஸ் என்பவரின் மதநூல்கள் பாடநூல்களாக வெளியிடப்பட்டன. 15 வயதான நிலையில் பள்ளித்தேர்வின் பின்னர் லாஜர்டீன் எனும் மாணவர் விடுகைப்பத்திரம் வழங்கப்பட்டது. 15 வயதின் பின்னர் 17 வயதில் நியூ லாஜர்டீன் எனும் புது விடுகைப்பத்திரம் பெறும் வரை மாணவர் ஒருவர் இருவருட காலம் பகுதி நேர அடிப்படையில் பள்ளிக்குச் செல்லும் நிலை நீடித்தது. மேலும் 19 வயதில் ஓட் லாஜர்டீன் என்னும் பூரண விடுகைப்பத்தரம் பெறும் வரை இன்னும் இருவருட காலம் ஒரு மாணவர் பள்ளிக்குத் தொடர்ந்து செல்லும் நிலமை நிலவியது. எனவே தொகுத்து நோக்கும் போது போர்த்துக்கேயரைவிட ஒல்லாந்தர் காலத்தல் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி முறையின் மூலம் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். ஒல்லாந்தர் கால பொருளாதார நடவடிக்கைகள் இலங்கையில் போர்த்துக்கேயரின் கரையோர ஆட்சிப் பிரதேசங்களை தம் வசப்படுத்திக் கொண்ட ஒல்லாந்தர் 157 வருடங்கள் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட தமது நிர்வாகத்தை கொண்டு நடாத்தினர். இதன் படி சமூக, பொருளாதார, சமய விடயங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒல்லாந்தரது பொருளாதார கொள்கையானது குறைந்த செலவில் அதிக இலாபம் பெறுவது ஆகும். இதற்காக பல வழிகளிலும் வருமானத்தை அதிகரித்தனர். வர்த்தக ஏகபோக உரிமையை கொண்டிருந்த ஒல்லாந்தர் வெளிநாட்டு வர்த்தகத்திலும் உள்ளுர் விவசாயத்திலும் பல்வேறு வழிகளில் வருமானத்தை பெற்றனர். கறுவா போன்ற விலையுயர்ந்த வர்தகப்பெருட்களை இலங்கையில் இருந்து பெற்றுக் கொள்வதும் அத்தோடு வர்த்தக உரிமையை பெற்றுக்கொள்வதும் ஒல்லாந்தரது பிரதான பொருளாதார நோக்கமாகும். கறுவா வர்த்தகத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றுக் கொண்ட ஒல்லாந்தர்கள் கறுவா உற்பத்தியை அதிகளவில் ஊக்குவித்தனர். கறுவாவால் 3 மடங்கு இலாபத்தை பெற்றனர். ஆரம்பத்தில் இயற்கையாககாடுகளில் விளையும் கறுவாவை பெற்ற ஒல்லாந்தர் பின்னர் கொழும்பு, களுத்துறை, அளுத்கம, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் கறுவாவை பயிரிட்டனர். கறுவாமரங்களை அழித்தல், தனியார் வர்த்தகம், அனுமதியின்றி கறுவா பட்டை உரித்தல் என்பன குற்றங்களாக கருதப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. கறுவா மரங்கள், கறுவாத் தோட்டங்களை பாதுகாக்க சாலிய லஸ்கரின்ஸ் படையமைப்பை உருவாக்கினர். கறுவாப்பட்டடை சேகரித்தல் ஆண்டுக்கு இருமுறை நிகழும். ஆனி முதல் ஐப்பசி வரை பெரும் பொகமும் தை மாசியில் சிறு போகமும் பெறப்படும். கறுவா வரத்தகம் தொடர்பாக மகாபத்தே திணைக்களம் கபித்தான் ஒருவனின் தலைமையில் செயற்பட்டடது. கறுவா தவிர பாக்கு, முத்து, யானைத்தந்தம், மிளகு, சாதிக்காய், ஏலம், யானை, தேன்மெழுகு என்பவற்றின் மூலமும் ஒல்லாந்தர் இலாபம் அடைந்தனர். இவை தவிர நிலங்களில் இருந்தும் வரியை அறவிட்டனர் காணி உரிமை அதிலிருந்து பெறவேண்டிய வரி போன்ற விடயங்கள் அடங்கிய தோப்பு என்ற பதிவேட்டினை தயாரித்தனர். இதில் காணிகளின் விபரம், பயிர் வகைகள், வர வேண்டிய வரிவகைகள் என்ப அடங்கியிருந்தன. வரி அறவிடும் உரிமையை ஏலத்தில் விடும் முறையை அறிமுகப்படுத்தினர். விவசாய அபிவிருத்தியில் கவனம் செலுத்திய ஒல்லாந்தர் நெல் வேளாண்மை செய்யும்படி மக்களை ஊக்கப்படுத்தினர். ஒல்லாந்து தொழில்நுட்ப வல்லுனர்களால் குளங்கள், கால்வாய்கள் என்பன மறுசீரமைக்கபட்டன. யோதவாவி, கந்தளாய், ஊறுபொக்க போன்ற குளங்கள் புனரமைக்கபட்டன. 1784 இல் பேர்ணண்ட் என்பவர் நெற்செய்கையை ஊக்கப்படுத்தும் விதமாக கால்வாய்களை அமைத்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் மேற்கிலும் உப்பளக் கைத்தொழில் விருத்தி செய்யப்பட்டது. நீர்கொழும்பிற்கு அண்மையிலுள்ள முத்துராஜவெல என்ற சதுப்பு நிலத்தினை டீ தெஸ்தே என்பவன் மீட்டெத்து அதை பயிர் நிலமாக மாற்றினான். இலங்கையின் சுதேச பொருளாதார கைத்தொழிலான நெசவுத்தொழிலிலும் ஒல்லாந்தர் கவனம் செலுத்தினர். யாழ்ப்பாண கொமாண்டரியிலுள்ள பல மையங்களிலும் மட்டக்களப்பிலும் நெசவுத்தொழில் வளர்த்தெடுக்கப்பட்டது. நெசவுத் தொழிலுக்காக பருத்திச் செய்கை பரவலாக மேற்கொள்ளப்பட்டு, நூல் நூற்கப்பட்டு ஆடை நெய்யும் கைத்தொழில் விருத்தி செய்யப்பட்டது. இதற்காக தென்னிந்தியாவில் இருந்து கேஷியர், கைக்கோளார் எனும் தொழிலாளர்கள் வரைவழைக்கப்ட்டனர் பருத்தி நூல் தென்னிந்தியாவில் இருந்து இறுக்குமதி செய்யப்பட்டது அந்நூல்களுக்கான சாயம் இடுதல் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் மும்முரமாக நடைபெற்றது. ஒல்லாந்தரது சமயக் கொள்கை ஒல்லாந்தரது மதம் புரட்டஸ்தாந்து ஆகும். ஒல்லாந்தர் கரையோரப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர். அங்கு தமது சமயத்தைப் பரப்புவதற்கு அவர்கள் பல வழிமுறைகளைக் கையாண்டார்கள். போர்த்துக்கேயரிடம் இருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றிய ஒல்லாந்தர் அப் பிரதேசங்களில் தமது அரசியல் வர்த்தக ஆதிக்கத்தை ஏற்படுத்துவதில் கத்தோலிக்க மதம் தடையாக இருப்பதை உணர்ந்து அதனை அழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்தோடு தமது சமயத்தையும் பரப்புவதற்கு பல்வேறு வழிவகைகளைக் கையாண்டார்கள். ஒல்லாந்தர் தமதுசமயத்தை பரப்புவதற்கு 1656 இல் பிலிப்பல்தியஸ் பாதிரியார் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார். கத்தோலிக்க சமயத்தை தடை செய்யும் பல சட்டங்களை இயற்றினர். 1658 - 1659 இல் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் கத்தோலிக்க சமயம் அனுஸ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. கிறிஸ்தவ விவாகங்கள், ஞானஸ்தானம் பெறுதல் என்பன ஒல்லாந்து திருச்சபையினிலே நடைபெற வேண்டும் எனவும் மரித்தவர்களை கத்தோலிக்க இடுகாகளில் அடக்கம் செய்யும் போது அதிக வரி அறவிடப்பட வேண்டும் எனவும் புரட்டஸ்தாந்து மதத்தை சேரந்தவர்களுக்கு மரணவரி நீக்கப்படுதல் வேண்டும் என சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அந்நிய குருமார் இலங்கைக்குள் பிரவேசிக்கக் கூடாது அத்தோடு அவர்களை இரகசியமாக பாதுகாப்பவர் மரண தண்டனைக்குள்ளாவார்கள் எனவும் சட்டம் இயற்றப்பட்டது. கத்தோலிக்க மக்கள் இரகசிமாகவோ, பகிரங்கமாகவோ ஒன்று கூடி ஆராதனை முயற்சியில் பங்குபற்றுவதும் தடைசெய்யப்பட்டது. இச் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டது. புரட்டஸ்தாந்து சமயத்தை ஏற்காதவர்களுக்கு அரசாங்க உயர்மட்டப் பதவிகள் மறுக்கப்பட்டன. அது மட்டுமன்றி அவர்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்காமல் பாரபட்சம் காட்டப்பட்டது. புரட்டஸ்தாந்து சமயத்தை ஏற்போருக்கு உயர் பட்டம், பதவிகள், பரிசுகள், பரிந்துரைகளை பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஒல்லாந்தர் தமது மதப்பிரச்சார நடவடிக்கைகளுக்காக கல்வியையும் பயன்படுத்தினர். இஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டு தமது சமயத்தை தழுவிய பிள்ளைகளை இணைத்துக் கொண்டனர். ஏனைய சமயப் பிள்ளைகளை ஞானஸ்தானத்தின் பின்னர் பாடசாலைக்கு உள்வாங்கினர். 1739 இல் சிங்கள அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தி சிங்களத்தில் பைபிளை அச்சிட்டு பிரசுரித்தனர். ஒல்லாந்தரது சமூக மற்றும் கலாசார செல்வாக்கு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இலங்கை மக்களுடைய மரபுகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சட்டக்கோவை உருவாக்கப்பட்டது. அச் சட்டக்கோவைகள் யாழ்ப்பாண வழக்கில் தேசவழமை எனவும், மட்டக்களப்பில் முக்குவச் சட்டம் எனவும், மலைநாட்டில் கண்டியர் சட்டம் எனவும், முஸ்லீம்கள் மத்தியில் முகமதியார் சட்டம் எனவும் வழங்கப்பட்டது. ஒல்லாந்தர்கால கட்டிடக்கலை மரபு இலங்கையில் அறிமுகமானது. அகண்ட விறாந்தைகள், உயர்ந்த முகடுகள், தனித்துவமான வளைவுகள், உயர்ந்த வாயிற்படிகள் போன்ற ஒல்லாந்தருக்கே உரிய கட்டடக்கலை அம்சங்கள் இலங்கையிலும் பின்பற்றப்பட்டது. ஒல்லாந்தர்காலம் இலங்கை வைத்தியத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்த காலமாகும். மருத்துவ மூலிகைகள் பற்றிய ஆய்விலும், மூலிகைத் தோட்டங்களை அமைப்பதிலும் ஒல்லாந்தர் ஆர்வம் செலுத்தினர். கரையோரப்பிரதேசங்களில் ஒல்லாந்தர் வைத்திய சாலைகளை நிறுவி தமது வைத்திய சேவையை விஸ்தரித்தனர். அத்தோடு கொழும்பிலிருந்து சில மைல் தொலைவில் கெந்தல என்ற இடத்தில் குஷ்டரோக வைத்தியசாலை ஒன்றையும் நிறுவினர். ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுள் பிரதனமான ஒன்று வீதிகளாகும். ஒல்லாந்தர் காலத்தில் கரையோர மாகாணங்களிலும், யாழ்ப்பாணத்திலும் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட வீதிகள் மக்களது வீடுகளையும், சந்தைகளையும், தேவாலயங்களையும், இடுகாடுகளையும் இணைத்து அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்ட அமைப்புக்களில் ஒரு பகுதியான உரோமன் டச்சுச் சட்டம் ஒல்லாந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இலங்கையில் இருந்த சுதேச சட்டங்கள், பழக்க வழக்கங்களுக்கு பொருத்தமானதாக உரோமன் டச்சுச் சட்டத்தை தொகுத்து ஒல்லாந்தர் நடைமுறைப்படுத்தினர். ஒல்லாந்தரால் புதிய நீதிமன்றத் தொகுதியும் அறிமுகப்படுத்தப்பட்டது அவையாவன, ராத்வான் ஜஸ்டிட் மேல் நீதிமன்றம் - இது ஒல்லாந்து நீதிமன்றத் தொகுதியின் உயர் நீதிமன்றம். இந்த நீதிமன்றம் மூன்று கொமாண்டரிகளிலும் நிறுவப்பட்டது. குற்றச்செயல் தொடர்பான வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பிரதானி வுப்ட் அத்மினிஸ்தார் என அழைக்கப்பட்டார். சிவில்ராத் நீதிமன்றம் - கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய கொமாண்டரிகளில் நிறுவப்பட்டிருந்தது. சிவில் வழக்குகள், விவாகம் தொடர்பான வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டது. லான்ராத் நீதிமன்றம் - கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு. மாத்தறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. திசாவை இதன் தலைவராக இருந்தார். சுதேச மக்களுக்கான இலகுவான நீதிமன்றமுறை இதுவாகும். பிஸ்கல் நீதிமன்றம் ஃ திசாவை நீதிமன்றம் ஃ கிராம நீதிமன்றம் - கீழ்நிலை நீதிமன்றமாக செயற்பட்டது. கிராமத்தலைவர், விதானை, முதலி, கோரளை போன்ற சுதேச அதிகாரிகள் தமது பதவிகளுக்கு ஏற்ப அதிகாரங்களை கொண்டிருந்தனர். ஒல்லாந்தர் சுதேச மக்களை தமது சமயத்திற்குள் உள்வாங்க பல்வேறு வழிகளை மேற்கொண்டமையால் சாதிமுறையை அடிப்படையாகக் கொண்ட இலங்கை சமூகமுறையில் சாதி மாற்றங்கள் ஏற்பட்டது. மேலும் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தரிடையில் கலப்புத் திருமணம் இடம்பெற்று பறங்கி எனப்படும் கலப்பு இனத்தவர் இந்நாட்டு சமூகத்திற்குள் இணைந்தனர். அத்துடன் ஒல்லாந்தரது உணவு வகைகள் இலங்கையிலும் அறிமுகமாகியது உதாரணமாக கேக், அச்சாறு, கொக்கிஸ் என்பவற்றை குறிப்பிடலாம். இவை மாத்திரமின்றி சிங்கள், தமிழ்மொழிகளில் பல ஒல்லாந்துச் சொற்கள் கலந்தமையும் குறிப்பித்தக்கது உதாரணமாக விறாந்தை, சொல்தர், ஓர்லோசு, இஸ்கூல், வெந்தேசி, இலாச்சி, பிசுக்கால், காமர, அலுமாரி, சொல்தர போன்ற சொற்களை குறிப்பிடலாம்.

ரஷ்ய புரட்சி

ரஷ்ய புரட்சி மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்...