சனி, 11 பிப்ரவரி, 2023

மானிய முறை

உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் படிப்படியாக வளர்ச்சியைக் கண்டு 12ம், 13ம் நூற்றாண்டில் ஐரோப்பா ழுழுவதும் பரவலடைந்த அரசியல் பொருளாதாரம், சமூக அமைப்பு முறையை மானிய முறை என்று அழைத்தனர். நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு சேவைகளின் அடிப்படையாகத் தோற்றம் பெற்றதே இம் மானிய முறையாகும். ஐரோப்பாவில் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்ற காலப்பகுதியில் தோன்றிய இம் முறை மத்தியகாலப் பகுதியில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஊடுருவிச் செல்வாக்குப் பெற்றுக் கொண்டது. மானிய முறையின் தோற்ற காலத்தினை பலரும் பலவாறாகக் கொண்டாலும் கி.பி 9ம் நூற்றாண்டளவில் தோன்றி வளர்ச்சியடைந்து 15ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி ஏற்படவே மானியமுறை முற்றாக வீழ்ச்சியடைந்தது. இன்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இதன் இயல்புகள் ஆங்காங்கே சில காணப்படுகின்றன. மானியமுறை சமுதாய அமைப்பு ஐரோப்பிய வரலாற்றில் “இருண்டகாலம்” என கூறப்படுகின்றது. அதற்கு காரணம் இக்காலப் பகுதியில் பெருந்தொகையானோர் அடிமைகளாக இருந்ததோடு அவர்கள் ஆட்சியாளர்களால் சிரமப்படுத்தப்பட்டிருந்தனர். இச்சமுதாய அமைப்பினுள் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் உள்வாங்கப்பட்ட சில முக்கியமான ஐரோப்பிய நாடுகளாகும். ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இதன் இயல்புகள் சில தொடர்ந்த வண்ணம் காணப்பட்டன. அந்தவகையில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மானிய முறையின் செல்வாக்கு நிலைத்திருந்தமையினை உணர்ந்து கொள்ள முடிகின்றது. மானிய முறையின் தோற்றத்திற்கான காரணங்கள்  மிலேச்சர்களின் ஆக்கிரமிப்புக்கள். கி.பி 3ம் நூற்றாண்டு தொடக்கம் நாகரீகமற்ற முரட்டு இனத்தவர்களின் படையெடுப்புக்கள் ஐரோப்பாவில் தொடர்ந்தன. கொத்துக்கள், விசிக்கொத்துக்கள், வண்டல்கள், பிராங்குகள், ஒஸ்ரோகொத், கூணர்கள், அங்கிலோ - சக்ஸன்ஸ் போன்ற இவ் வகுப்பினர் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நின்ற உரோமப் பேரரசினை தாக்கினர். இவர்கள் கொள்ளைகள், கொலை, சூறையாடல் முதலியற்றில் ஈடுபட்டு வந்தமையால் மக்கள் அவர்களிடம் இருந்து தம்மை பாதுகாக்க பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் நேரடியாக தம்மை பாதுகாக்கக் கூடிய தலைவர்களாக தமது பிரபுக்களை கருதினர். இதனால் தமது சொத்துக்களை பிரபுக்களிடம் வழங்கி அவற்றை பாதுகாத்து தருமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு முழுப் பொருள் வளத்தைப் பிரபுக்கள் பெற்றுக் கொண்டமையினால் அவர்களின் அதிகாரம் மேலோங்கிக் காணப்பட்டது. அவர்களை தலைமயாளர்களாகக் கொண்டு மானியமுறை தோன்றியது. உரோமப் பேரரசு வீழ்ச்சி கொண்டதைத் தொடரந்து மத்திய நிர்வாக முறையிலும் உடைவு ஏற்பட்டது. சட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனைச் சாதகமாகக் கொண்டு இத்தாலி பிரான்ஸ் நாடுகள் மீதும் இவர்களின் படையெடுப்புக்கள் தொடர்ந்தன. இவர்களின் படையெடுப்பினால் பரந்த அரசு சிதைவடைந்து பிரபுத்துவ அரசுகள் தோன்றியதுடன் நிலச்சுவாந்தர்கள் உருவாகினர்.  கரோலிஞ்சியப் பேரரசின் தளர்ச்சி கி.பி 9ம் நூற்றாண்டில் கரோலிஞ்சியப் பேரரசின் புகழ்பெற்ற மன்னன் சார்ளிமேன் இறந்ததும் உள்நாட்டில் போர்கள் ஏற்பட்டன. பலமானவர்கள் பலமற்றவர்களை அடக்க முற்பட்டனர். தொடர்ந்து அரியனை ஏறியவர்கள் எவரும் இம் மன்னரைப்போல் திறமையானவர்களாகக் காணப்படவில்லை. பிரபுக்கள் தமது சொந்த இடங்களைக் கைவிட்டு கிராமப் பகுதிகளை நாடிச் சென்றனர். இவர்களுடன் இணைந்த வகையில் சாதாரண மக்களும் வாழ்வதற்கு முற்பட்டனர். தமது உடமைகளை இத்தகைய சாதாரண மக்கள் பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்.  பிரபுக்களின் ஆதிக்கம் மத்திய நிர்வாக முறையில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டதனைத் தொடர்ந்து பிரபுக்கள் இத்தகைய சந்தர்ப்பத்;தினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அரசன் மிகப்பெரிய நிலப்பரப்பை நிர்வகிப்பது கடினமாக காணப்பட்டது. அத்தோடு மக்களுக்கு நேரடியாக பாதுகாப்பையும் அவனால் வழங்க முடியவில்லை. இதனால் அரசன் பிரபுக்களின் உதவியை நாடினான் தாம் பிரபுக்களிடமிருந்து பெற்ற உதவிகளுக்கு பதிலாக சில சலுகைகள், வசதிகளை மன்னர் செய்து கொடுத்தார். இராணுவத்தினை அமைத்துக் கொள்கின்ற உரிமையை பிரபுக்கள் இவ்வாறான பின்னணியில்தான் பெற்றுக் கொண்டனர். இவ்வாறாக பிரபுக்களின் அதிகாரம் மேலோங்க மானிய முறை அமைப்பும் வளர்ச்சியடைந்தது.  அடிமைகளின் தோற்றம் மானியமுறை சமுதாயத்தில் மிகக் கூடிய பங்கு வகித்தவர்கள் அடிமைகள் ஆவர். உரோமப் பேரரசின் வீழ்ச்சியின் பின் இடம் பெற்ற யுத்தங்களினாலும், ஜேர்மனிய இனக் குழுக்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் சொத்துக்களை இழந்து அகதிகளாகினர். அவ்வாறு ஆதரவற்று போனவர்கள் பிற்காலத்தில் அடிமைகளாக தொழில் ஈடுபடுத்தப்பட்டனர். அடிமைகளின் தோற்றம் மானிய முறையின் தோற்றத்திற்கு காரணமாகியது.  பண்டமாற்று முறை பண்டமாற்று பொருளாதார முறையும் மானிய முறையின் தோற்றத்திற்கு காரணமாகியது. நிலத்தை உடையவர்கள் தாம் விளைவித்த பொருட்களைக் கொண்டு தமக்குத் தேவையான பொருட்களை பறிமாறிக் கொண்டனர். நிலம் உடையவர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் சமூகத்தில் செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர். இதனால் நிலப் பயன்பாடு அதிகமாகியது. இது மானிய முறையை தோற்று வித்தது. வலிமையுடையோர் வலிமையற்றோரை வெற்றி கொள்ளும் பாரம்பரியத்தின் படி மக்கள் ஆதரவு உடையவன் செல்வந்தனாகவும், பலம் பொருந்தியவனாகவும் மாறினான். இவ்வாறு மாறியவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து அதிக பொருள் உற்பத்தியை மேற்கொண்டனர். இவ்வாறு நிலத்தை முதன்மை கொடுத்துத் தொடங்கவே மானிய முறையும் தோற்றம் பெற்றது. மானிய முறையின் சமூக கட்டமைப்பு மானிய முறை என்பது நிலவுடமை சம்பந்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் உருவான ஓர் ஆட்சி முறை ஆகும். மானிய சமுதாய அமைப்பில் உயர்வான இடத்தில் இருப்பர் அரசர் அதனைத் தொடர்ந்து பெருநிலப் பிரபுக்கள், பிரபுக்கள், சாதாரண மக்கள், அடிமைகள் என்போர் இச் சமுதாய அமைப்பில் முக்கிய கூறுகளாகக் காணப்பட்டனர். இவர்களுக்கான கடமைகள் உரிமைகள் என்பன வரையறுக்கப்பட்டிருந்தன. • அரசன் நிலங்கள் அரசருக்கு இறவனிடமிருந்து கிடைத்ததாக இக்கால மக்கள் நம்பினர். இதனால் தெய்வீக வழிவந்த உரிமை அரசனுக்கு இருந்தது. அரசன் தனக்கென ஒரு தொகுதி நிலத்தினை உடமையாக்கிக் கொண்டு ஏனையவற்றினை பெரும் நிலப்பிரபுக்களுக்கு மானியமாக வழங்குவார். அரசரிடமிருந்து நிலத்தினைப் பெற்றுக் கொள்கின்ற இவர்கள் தேவையான போது அரசருக்கு படையுதவி உட்பட பல்வேறு சேவைகளை வழங்குவதாக உறுதியளிப்பதுடன் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாகவும் உறுதி கூறுவர். அரசரும் அத் தருணத்தில் பெரு நிலப்பிரபுக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் வாக்குறுதி வழங்குவார். இந் நிகழ்வு பெரும் விழாவாக நடைபெறும். இதன்படி நில அதிகாரம் அரசனிடம் காணப்பட்ட அதேவேளை நிர்வாக அதிகாரங்கள் பிரபுக்களிடம் காணப்பட்டது. • பெரும் நிலப்பிரபுக்கள் அரசனுடன் நேரடியான தொடர்புகளை இவர்கள் கொண்டவர்கள். இவர்கள் நிலஉரிமை உடையவர்களாகவும் செல்வந்தர்களாகவும் காணப்பட்டனர். தமது பாதுகாப்பின் பொருட்டு கோட்டைகளையும் அமைத்து படைகளையும் பெருக்கிக் கொண்டு சிற்றரசர்கள் போன்று தமது பிரதேசங்களில் செயற்பட்டனர். இவர்களின் பலம் அதிகரித்ததன் காரணத்தினால் இவர்களுக்கிடையிலே ஏற்படுகின்ற பிணக்குகளைக் கூட அரசரால் தீர்த்து வைக்க முடியவில்லை. இவர்கள் அரசரிடமிருந்து நிலங்களைப் பெற்றுக் கொண்டது போல மத்தியகாலத்தின் தொடக்கத்தில் திருச்சபையிடமிருந்தும் ஏராளமான நிலங்களை உடமையாக்கிக் கொண்டனர். பதிலுக்கு திருச்சபைக்கும் அதன் குருமாருக்கும் பல்வேறு சேவைகளை இவர்கள் வழங்க முன்வந்தனர். இவர்கள் தம்மிடமுள்ள நிலங்களை பிரபுக்களிடம் கொடுத்தனர். • பிரபுக்கள் பெருநிலப்பிரபுக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நிலத்தினைப் பிரபுக்கள் தமக்கு கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு வழங்கினர். இவர்கள் மானியதாரர்கள் எனப்பட்டனர். பிரபுக்கள் இராணுவசேவை உட்பட பல்வேறு சேவைகளை தேவையான சந்தர்ப்பங்களில் அரசர்களுக்கு வழங்கி வந்தனர். பிரபுக்களின் அதிகரித்த செல்வாக்கின் காரணமாக அரசருக்கும் சாதாரண மக்களுக்குமிடையிலே இருந்து வந்த தொடர்புகள் அற்றுப் போயின. சில பகுதிகளில் அரசர் என்பவர் அறியாத உருவமாகவே காணப்பட்டார். இப் பிரபுக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் இடைத்தரகர்களாக விளங்கினர். இவர்களிடம் சிறியளவு அதிகாரங்கள் காணப்பட்டன. • சாதாரண மக்கள் பெருமளவுக்கு பிரபுக்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். இவர்கள் பிரபுக்களுக்குத் தேவையான இராணுவசேவை உட்பட பல்வேறு சேவைகளை வழங்குவர். இவர்களுக்கு ஓரளவிற்கு உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. • அடிமைகள் மானிய சமுதாய அமைப்பில் மிகவும் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் அடிமைகள் ஆவர். இவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் பண்னையை விட்டு விலக முடியாதவர்களாகக் காணப்பட்டனர். நிலத்தின் உரிமை மாறுகின்ற போது அவர்களும் அதனுடன் மாற வேண்டும். மேலும் அடிமைகள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கவும் தமது உடமைகளை விற்பனை செய்யவும் பிரபுக்களுக்கு அறிவித்து அவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். இவர்கள் சமயப் போதகர்களாக மாறியோ அல்லது பொருட்களையோ குறிப்பிட்ட தொகையையோ பிரபுக்களுக்குக் கொடுத்து விலகுவதற்கும் வாய்ப்பிருந்தது. உரிமையற்றவர்களாகவே இவர்கள் காணப்பட்டனர். இவர்கள் தமது வேலைகளை செய்யத் தவறும் போது தண்டனைகளை அனுபவித்தனர். • நைற் வீரர்கள் நிலமானிய சமுதாய அமைப்பில் நைற் வீரர்கள் முக்கியமான ஒரு பிரிவினர். கிறிஸ்தவ சமயத்தின் ஆர்வத்தினால் ஈர்க்கப்பட்ட ஒரு பிரிவினர்களாகக் காணப்பட்டனர். பிரபுக்களிடம் பணியாற்றிய இவ் வீரர்கள் சமயத்தையும், பெண்களையும், நாட்டின் வணிகத்தையும் பாதுகாத்தனர். குதிரையேற்றம், வாள் சண்டைகளில் சிறந்து விளங்கி காணப்பட்டனர். பிரபுக்களால் வீரர்களுக்கு வழங்கப்பட்ட இப் பட்டங்கள் வீரர்கள் தமது கடமைகளை செய்யத் தவறுகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களால் பறிக்கவும் பட்டன. மானியமுறையின் பொருளாதார நிலை மானியமுறையின் பொருளாதார அமைப்பானது விவசாயத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பண்ணை அதன் முக்கியமான பொருளாதாரக் கூறாக இருந்தது. ஒவ்வொரு பண்ணையிலும் பற்றைக்காட்டு நிலம், பொதுவான புல்வெளி, பால்நிலம் எனப்பல பகுதிகள் காணப்பட்டன. பண்ணை மக்கள் அனைவரும் இவற்றை மந்தைகளை மேய்தல், விறகு சேகரித்தல், தேன் சேகரித்தல், வேட்டையாடுதல் போன்ற கருமங்களுக்கு பயன்படுத்தினர். மானியமுறை பொருளாதாரத்தில் நிலம் முக்கிய உற்பத்திக் காரணியாகியது. பிரபுக்களிடம் இருந்த நிலம் பயிர்செய்யும் பொருட்டு பொதுமக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்;கள் தமக்குக் கிடைத்த காணியை அனுபவிப்பதற்கு கைமாறாக பிரபுக்களின் நிலத்தில் ஊதியமின்றி வேலை செய்வதற்கு அல்லது அறுவடையில் ஒரு பகுதியை கொடுப்பதற்கு அல்லது குறிப்பிட்ட தொகைப் பணத்தை செலுத்துவதற்கு கடமைப்பட்டிருந்தனர். மானியமுறைக் காலத்தில் சுயதேவைப் பொருளாதாரம் காணப்பட்டது. விவசாயம் முக்கியம் பெற்ற தொழிலாக காணப்பட்டது. கிராமத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்தனர். விவசாய உற்பத்தியில் இருந்து தமக்கு தேவையானவற்றை பண்டமாற்று மூலம் பெற்றுக்கொண்டனர். இதனால் பணப்புழக்கம் குறைவாக காணப்பட்டதோடு சுயதேவைப் பொருளாதார முறை காணப்பட்டது. மானியமுறையில் வர்த்தகம் சிறிதளவே நடைபெற்றது. அதுவும் பண்டமாற்று முறையிலே நடைபெற்றது குறிப்பாக உப்பு, வாசணைத் திரவியங்கள் என்பன வர்த்தகத்தில் பண்;டமாற்றப்பட்டது. . இதனால் பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. மானிய முறையின் இயல்புகள்  விவசாயம் சார்ந்த பொருளாதாரம் மானிய சமுதாய அமைப்பின் பொருளாதாரம் பெருமளவிற்கு விவசாயத்திலேதான் தங்கியிருந்தது. குறிப்பாக பண்னைகள் இங்கே சிறப்பிடம் பெற்றன. மானியக் கிராமங்கள் யாவும் தமக்குத் தேவையான பொருட்களைத் தாமே உற்பத்தி செய்து கொள்கின்ற சுயதேவைக் கிராமங்களாகக் காணப்பட்டன. கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற பயிர்கள் இங்கே உற்பத்தி செய்யப்;பட்டன. எருதுகள், களுதைகள் என்பன விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இங்கே வர்த்தகம், கைத்தொழில்கள் வளர்ச்சியடைவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்பட்டன.  அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருந்தமை மானிய முறையில் அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிந்து காணப்படவில்லை. நிலத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமுதாயத்தில் அதிகாரங்கள் பரவிக் காணப்பட்டது. பிரிக்கப்பட்டிருந்த பிராந்தியங்களின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பிரபுக்கள் தமது பகுதிகளில் சுதந்திரமான முறையில் நிர்வாகத்தினை மேற்கொண்டனர். பிரத்தியேக படைகளையும் தமது பாதுகாப்பின் பொருட்டு உருவாக்கிக் கொண்டனர். அரசர், பிரபுக்கள் என அதிகாரங்கள் பலரிடம் பன்முகப்படுத்தப்பட்ட நிலமை இச் சமுதாய அமைப்பின் சிறந்த இயல்புகளில் ஒன்றாகும்.  சமுதாயம் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தமை சமுதாயம் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது. இங்கு அரசர், பிரபுக்கள், மதகுருமார்கள் சமுதாயத்தில் உயர்ந்த மட்டத்திலும் அடிமைகள் சகலவிதமான சுதந்திரங்களையும் சலுகைகளையும் இழந்த நிலையிலும் கீழ் மட்டத்தில் காணப்பட்டனர்.  பிரபுக்களின் செல்வாக்கு மானிய முறையில் அரசர் பலமிழந்து பிரபுக்கள் பலம் பெற்று காணப்பட்டனர். பிரபுக்களின் ஆதிக்கம் மக்களின் மீது காணப்பட்டமையினால் அரசரின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டன. அரசரிடம் தனியான படைகள் எவையும் இருக்கவில்லை. அரசரும் பிரபுக்களின் தயவில் வாழ்தமையினால் அவர்களும் கூட பிரபுக்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். பிரபுக்களில் பலர் நீதிபதிகளாகவும் நீதிபதிகளாகவும் கடமையாற்றினர். பிரபுக்களின் மேலாதிக்கமே அரசரின் அதிகாரத்தை தீர்மானித்தது.  திருச்சபையின் செல்வாக்கு மானிய முறை காலத்தில் திருச்சபையின் செல்வாக்கு அதிகரித்து காணப்பட்டது. திருச்சபை அரசிடமிருந்தும் பிரபுக்களிடமிருந்தும் அதிகளவு நிலங்களைப் பெற்றிருந்தது. இது அக்காலப்பகுதியில் மதகுருமார்களின் தலைமையில் சமயக்கல்வியினை ஊட்டுகின்ற நிறுவனமாகவும் செயற்பட்டது. திருச்சபையின் சொத்துக்கள் காலப்போக்கில் அதிகரித்துச் சென்ற போது அது லௌகீகத் துறையில் நாட்டம் கொண்டதாக மாறியது. தான் பெற்றுக்கொண்ட சமூக அந்தஸ்தின் காரணமாக அரசுடன் போட்டியிடுகின்ற நிலைமையையும் உருவாக்கிக் கொண்டது.  பண்டமாற்று முறை இக் காலத்தில் பணத்தின் பயன்பாடு குறைந்த அளவிலேயே காணப்பட்டது. ஒரு சில வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கே பணம் பயன்படுத்தப்பட்டது. பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பின்னதாக ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சியின் காரணமாக பண்டமாற்று முறை செயலற்றுப் போனது.  நீதித்துறையின் செயற்பாடுகள் பிரபுக்களாலேயே நீதிமன்றங்கள் நடாத்தப்பட்டன. வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் மக்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே காணப்பட்டன. மூட நம்பிக்கைகளின் தாக்கங்களும் தீர்ப்புக்களில் தென்பட்டன. வழங்கப்பட்ட தண்டனைகளும் கொடூரமானவையாகக் காணப்பட்டன. உடல் ரீதியாக துன்பப்படுத்தும் தண்டனைகளாக காணப்பட்டன. சட்டமுறைகளில் வேறுபாடுகளும் காணப்பட்டன.  நிலத்தின் பங்களிப்பும் அடிமை முறையும் மானிய சமுதாயத்தில் நிலம் பிரதான இடத்தினை வகித்தது. ஒருவரின் சமூக அந்தஸ்து நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு நிலத்தோடு இணைந்த வகையில் பண்ணைகளில் அதிகம் உழைத்தவர்கள் அடிமைகளே ஆவர். இவர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கபட்டிருந்ததோடு துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டனர். மானிய முறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள் அரசர் முதல் சாதாரண குடிமகனையும் நிலத்தின் துணையுடன் இணைத்து மத்திய காலத்தில் சிறப்புப் பெற்றிருந்;த மானிய முறையானது பன்னிரெண்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஐரோப்பாவில் செயலிழந்து போனது. அதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கலாம்.  வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி பன்னிரெண்டாம் நூற்றாண்டின் பின்பாக வர்த்தகம் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தது. பண்டமாற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இச் சமுதாய அமைப்பு பணத்தின் வருகையைத் தொடர்ந்து பின்தள்ளப்பட்டது. வர்த்தகம் விருத்தியடைந்த போது அடிமைகள் தலைநகரங்களுச் சென்று தொழில் தேடிச் சென்று அதன் மூலமாக பணத்தினை சம்பாதித்துக் கொண்டனர். சம்பாதித்த பணத்தினை கொடுத்து அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டனர். அடிமைகள் சுதந்திரம் பெற்றமையால் விவசாய நடவடிக்கைகளுக்கு கூலிக்கு ஆட்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை பிரபுக்களுக்கு ஏற்பட்டது. இதனால் பிரபுக்களின் செல்வாக்கும் அதிகாரமும் குறைவடைய மானியமுறையும் வீழ்ச்சியடைந்தது.  வர்த்தகர்கள் என்ற புதிய வகுப்பினர்களின் எழுச்சி மானிய முறை சமுதாயத்தில் பண்டமாற்று வர்த்தகமே காணப்பட்டது. மக்கள் வர்த்தகத்தை விட விவசாயத்தையே பெரிதும் விரும்பினர். ஆனால் பணப் புழக்கங்கள் ஆரம்பித்ததுடன் வர்த்தகம் இலகுவாயிற்று. இதனால் மக்கள் வர்த்தகத்தை நடாத்த தொடங்கினார்கள். வர்த்தகத்தில் ஏற்பட்ட அபிவிருத்தியைத் தொடர்ந்து வங்கியாளர்கள், கப்பல் கட்டுவோர்கள், வர்த்தகர்கள் போன்ற புதிய வகுப்பினரின் எழுச்சி ஏற்பட்டது. இவர்கள் பிரபுக்களுக்குப் போட்டியாகவும் அதே நேரம் அவர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டு அவர்களைக் கட்டுப்படுத்தவும் முனைந்தனர். மேலும் அரசருக்கு ஆதரவாகவும் இவர்கள் நடந்து கொண்டனர். இவ் ஆதரவு பணமாகவோ ஊழியமாகவோ அரசருக்கு வழங்கப்பட்டது. இதனால் பிரபுக்களின் ஆதிக்கம் குறைவடைய ஆரம்பித்தது.  கொன்ஸ்தாந்து நோபில் முக்கிய வர்த்தக நிலையமாக மாறுதல் முஸ்லீம்கள் கொன்ஸ்தாந்துநோபில், அலெக்சாண்டிரியா வரை வர்த்தகப் பொருட்களை எடுத்து வந்ததாலும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பானிய மன்னர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாலும் வர்த்தகம் வளர்ச்சியடைந்தது. அத்தோடு வர்த்தக நகரங்களும் தோற்றம் பெற்றது. வர்த்தகத்தில் கொன்ஸ்தாந்துநோபில் முக்கியம் பெற்றது. இது மானியமுறை வீழ்ச்சியடைய காரணமாகும்.  சிலுவைப் போர்கள் சமயப் போராகவும் அரசியல் ஏகாதிபத்தியத்துக்கான போராகவும் நடைபெற்ற சிலுவைப் போர்கள் மானிய முறையினை அழிவுக்கு கொண்டு சென்றது. இப்போர்களின் போது பிரபுக்கள் தமது அடிமைகளை விடுவித்து அவர்களை போரில் ஈடுபடச் செய்தனர். ஆனால் பெரும்பாலான அடிமைகள் போருக்குச் செல்லாமல் வியாபாரம் செய்தனர். சிலர் பணத்தை பிரபுக்களுக்குச் செலுத்தி அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்துக் கொண்டனர். இப் போர்களின் போது அதிகளவில் பிரபுக்கள் இறந்ததுடன் தமது உடமைகளையும் பறிகொடுத்தனர். சிலர் தமது நிலங்களையும் விற்பனை செய்ய முன்வந்தனர். இதனால் மானியமுறை சமூக அமைப்பு வீழ்ச்சியடைந்தது.  தேசிய அரசுகளின் தோற்றம் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் பிரபுக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி விட்டு தேசிய அரசுகள் தோன்றின. இவ்வாறு தோன்றிய இவ்அரசுகள் தத்தம் நாடுகளில் வலிமை பெற்ற முடியாட்சியினை ஏற்;படுத்தின. மத்தியமயமான நிர்வாகத்தினை ஏற்படுத்தியதன் மூலம் பிரபுக்களின் அதிகாரங்கள் வலுவற்றதாக ஆக்கப்பட்டன. இதனால் பிரபுக்களின் செல்வாக்கு சீர்குலைந்தது.  கல்வி விருத்தியும் சிந்தனை வளர்ச்சியும் நாடுகாண் பயணங்கள், மறுமலர்ச்சி என்பன புதிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் உண்டாக்கியது. இக்காலப்பகுதியில் கல்வி சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஒரு சிலருக்கு இருந்த கல்வியானது வர்த்தக வளர்ச்சியினால் பரவலாக்கப்பட்டது. மறுமலர்ச்சி சிந்தனையாளர்களும் அரசியல் பொருளாதார சமூக சிந்தனைகள் ஊடாக சீர்கேட்டை எடுத்துக்காட்டி மானியமுறையை நலிவடையச் செய்தனர். இதேவேளை இத்தாலி நகரத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும் சிந்தனையை தூண்டிவிட மானியமுறை வீழ்ச்சியடைந்தது.  உள்நாட்டுப் போர்கள் மானிய முறை சமுதாயமானது உள்நாட்டுப் போர்களினால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தது. பிரபுக்களுக்கிடையிலான போர்கள், அரசருக்கும் பிரபுக்களுக்குமிடையிலான போர்கள் இப்படியான போர்களினால் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இவ்வாறான போர்களை நிறுத்துகின்ற நோக்குடன் திருச்சபை பதினொராம் நூற்றாண்டில் நான்கு தடவைகள் போர்த்தடையை ஏற்படுத்திய போதும் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடர்ச்சியான போர்களும் மானியமுறை வீழ்ச்சிக்கான காரணமாகியது.  கடுங்கொள்ளை நோய், பஞ்சம் 14ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கடுங்கொள்ளை நோயினாலும் பஞ்சத்தினாலும் அடிமைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டது. ஏனையோர் பிரபுக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை கொடுத்துவிட்டு விலகிக் கொண்டனர். இத்தாலியில் முதலில் தோன்றிய இக்கடுங்கொள்ளை நோய் ஐரோப்பிய மக்கள் எண்ணிக்கையில் கணிசமான அளவு தொகையை குறைத்தது. இதுவும் மானிய முறை வீழ்ச்சிக்கு காரணமாகியது.  நகரங்களின் வளர்ச்சி பல்வேறு காரணங்களைக்காக கிராமங்களை விட்டு மக்கள் நகரங்களுக்கு அடிக்கடி சென்று வந்தமையினால் நகரங்கள் வளர்ச்சி கண்டன. நகரங்களின் வளர்ச்சியும் நிலமானிய முறையின் வீழ்ச்சிக்கு காரணமாகியது. சில பிரபுக்கள் தமது கிராமப்புற வாழ்க்கையிலும் மானியமுறையிலும் சலிப்படைந்தவர்களாகவும் அவற்றிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். இவர்கள் தமது பண்ணைகளை விற்பனை செய்துவிட்டு நகரங்களை நாடிச் சென்றனர். இதுவும் மானியமுறை வீழ்ச்சிக்கான காரணமாகும்.  தொழிற்சாலைகளின் வளர்ச்சி தொழிற்சாலைகள் நகரங்களிலேயே அமைந்திருந்தன. அங்கே அதிகளவு சம்பளத்துடன் சுதந்திரமான முறையில் பல்வேறு சலுகைகளுடன் வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால் பண்னைகளில் பணிபுரிந்தவர்கள் அங்கிருந்து விலகித் தொழிற்சாலைகள் உள்ள நகரங்களினை நாடிச் சென்றனர். இதனால் பண்ணைகளில் வேலைக்கு ஆட்கள் இல்லாது போயினர். நகரங்களின் உருவாக்கம் தொழிற்துறையின் விருத்தி என்பன மானியமுறை விழ்ச்சிக்கு காரணமாகியது.  போர்க்கருவிகள் புதிய போர்க்கருவிகள் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் துணையுடன் போர் செய்கின்ற முறைகள் இலகுவாக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் பிரபுக்களால் ஏற்படுத்தப்பட்ட படைகள் தமது முக்கியத்துவத்தினை இழந்து கொண்டன. அத்துடன் அரசர்களும் தமக்குக் கீழ் தனித்தனியாக படைகளை உருவாக்க முற்பட்டனர். இதுமானிய முறை வீழ்ச்சிக்கு காரணமாகியது. எனவே மேற்கூறப்பட்ட காரணங்கள் நிலமானிய முறையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. மானிய முறையின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள் ஐரோப்பாவில் இருண்டகாலத்தில் தோற்றம் பெற்ற மானியமுறையானது ஐரோப்பாவில் ஓரளவு அனுகூலங்களை கொண்டிருந்த அதேவேளை பிரதிகூலங்களையும் கொண்டிருந்தது. அனுகூலங்களாக பின்வருவனவற்றை கூறலாம்.  மக்களைப் பாதுகாத்தது நாகரீகம் அற்றவர்கள் அடிக்கடி மேற்கொண்ட படையெடுப்பினால் மத்திய நிர்வாகம் பலமிழந்து காணப்பட்டது. மன்னர்கள் செய்வதறியாது திகைத்தனர். இத்தகையதொரு நெருக்கடியான நிலையில் நாட்டினையும் மக்களையும் பாதுகாத்தது நிலமானிய முறையாகும். மன்னருக்கும் மக்களுக்கும் பிரபுக்களே ஆதரவு வழங்கினர்.  சர்வாதிகார ஆட்சிக்குத் தடை மானிய முறை காலத்தில் அதிகாரம் பன்முகப்படுத்தப்பட்டிருந்தது. அரசன் ஒருவனிடம் முழுமையான அதிகாரங்கள் கிடைத்திருந்தால் அவை ஒருமுகப்படுத்தப்பட்டு சர்வாதிகாரத் தன்மைக்கு அரசனை கொண்டு சென்றிருக்கும். ஆனால் நிலமானிய முறையில் அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்பட்டு பிரபுக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் சர்வாதிகார ஆட்சி ஏற்படுவதற்கு தடையேற்பட்டிருந்தது.  அடிமை முறையில் தளர்வும் படையமைப்பில் முன்னேற்றமும் அடிமைமுறையில் மானிய முறையின் இறுதிக்காலப்பகுதியில் ஒருவிதமான தளர்வு நிலையொன்று காணப்பட்டது. தனிமனித சுதந்திரக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பிரபுக்களிடம் தமது உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும் இவர்கள் துணிந்தனர். அத்தோடு அடிக்கடி போர்கள் இடம் பெற்றதனால் படைகளைப் பெருக்கும் தேவை உண்டானது. போர் நுட்பங்கள் அறியப்பட்டன. நைற் வீரர்களின் தொண்டுகள் சிறப்பானவையாகக் காணப்பட்டன.  திருச்சபையின் பணிகள் மானிய முறை சமுதாய அமைப்பின் முக்கியமான கூறுகளான திருச்சபையும் அதன் குருமார்களும் மக்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்தன. இவர்கள் கட்டுப்பாட்டினையும் ஒழுங்கினையும் ஏற்படுத்தினர் திருச்சபைகள் கல்வி நிலையங்களாகவும் செயற்பட்டது. இதன் மூலமாக கல்வி அறிவு ஏற்பட்டது. பிரதி கூலங்கள்  மத்தியில் உறுதியான ஆட்சி காணப்படவில்லை மானிய முறை காலத்தில் மத்தியில் நிலையான காணப்படவில்லை. எல்லாவற்றிக்கும் பிரபுக்களையே நம்பியிருக்க வேண்டிய நிலமை காணப்பட்டது. பிரபுக்களும் இதனையே விரும்பினர். அரசரால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய நிலை காரணமாக வலிமையான தேசிய முடியாட்சியினை ஏற்படுத்த முடியவில்லை. இது தேசிய முடியாட்சிக்கு தடையாக இருந்தது. மேலும் பிரதேச ரீதியாக பிரபுக்கள் அதிகாரம் பெற்றிருந்ததால் நாட்டில் முழுமையான ஒரே வகையான சட்டமோ நீதி வழங்குகின்ற முறையோ காணப்படவில்லை.  தேசிய உணர்வு வலுவிழந்தமை மானிய முறை காலத்தில் மக்களிடம் சுயநல நோக்கமும் குறுகிய மனப்பான்மையும் அதிகரித்தது. பிரபுக்களை நம்பியிருந்த மக்கள் பிரபுக்களிடம் மட்டுமே இவர்கள் பணிவும் அடக்கமும் கொண்டவர்களாகத் தம்மை இனங்காட்டினர். பிரதேச ரீதியாக இவர்கள் பிரபுக்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டதால் தேசியரீதியான உணர்வு வலுவிழந்து காணப்பட்டது. இது பின்நாட்களில் ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைப்பதிலும் தடைகள் ஏற்பட்டன.  தொடர் யுத்தங்கள் மானிய முறை காலத்தில் பிரபுக்கள் தமது பலத்தினை நிரூபிக்கின்ற நோக்குடன் தமக்கிடையிலே போர்களில் ஈடுபட்டனர். இவ்வாறான தொடர்யுத்தங்களினால் அமைதியின்மை நிலவியது. போர்களில் ஈடுபட்டு தமது எல்லைகளை விரிவுபடுத்தினர். இதனால் அமைதியின்மை ஏற்பட்டதுடன் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளும் காணப்பட்டது. ஏழைகள் வசதிபடைத்தவர்கள் என்ற வேறுபாடுகள் காணப்பட்டதோடு அடிமைகள் வாழ்நாள் முழுவதும் நிலத்துடன் கட்டுப்பட்டிருந்தனர்.  திருச்சபையின் வளர்ச்சி இக் காலத்தில் திருச்சபையிடம் அதிகமான நிலங்கள் காணப்பட்டதால் திருச்சபை பலமான நிலையினை அடைந்து கொண்டது. இதன் காரணமாக குருமார்களில் பலர் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு தமது நோக்கம் கடமைகளை மறந்து லௌகீக வாழ்க்கையில் வாழ்ந்தனர். பின்னாளில் திருச்சபையின் வளர்ச்சியானது அரசருடன் மோதுகின்ற நிலையினை ஏற்படுத்தியது.  பிரபுக்களின் சுரண்டல்கள் சாதாரண குடியானவர்கள் பிரபுக்களின் பிடியிலிருந்து துன்பப்பட்டனர். தம்மை பிரபுக்களிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாமல் அவர்கள் திண்டாடினர். இவர்களால் வழங்கப்பட்ட நீதியிலும் குறைபாடுகள் காணப்பட்டன. பாரபட்சமான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவர்களின் உழைப்பிலும் ஊதியத்திலும் பிரபுக்கள் சுரண்டினர். அத்தோடு இக் காலப்பகுதியில் கைத்தொழில் வர்த்தகம் அறிவியல் என்பனவும் வளர்ச்சியடையவில்லை.

ரஷ்ய புரட்சி

ரஷ்ய புரட்சி மனிதகுலமானது பல்வேறு புரட்சிகளையும் போராட்டங்களையும் தாண்டி வளர்ந்துள்ளது. இவற்றுள் பல புரட்சிகள் சமூக அமைப்பினையும் அரச அமைப்...